சனி, ஜூலை 22, 2006

கவலையுடன் ஒரு கடிதம்

மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களே,
ஒரு சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து சின்னஞ்சிறு விவசாயியின் மின்னஞ்சல். தகவல் தொழில் நுட்பவளர்ச்சியில் இந்தியா அடைந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சிக்கு எனது கிராமத்திற்கு இத்தகைய வசதி கிட்டியதே சிறந்த உதாரணம் அன்பும் எளிமையும் கொண்ட உங்களோடு தொடர்பு கொள்வதில் பெருமை படுகிறேன்.

பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ள எனது இந்தியாவை நினைத்து பெருமைகொள்ளும் வேளையில் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள, 100 கோடி மக்களுக்கு உணவளித்து மகிழும் இன்றைய விவசாயிகளின் நிலைமை குறித்து வேதனைபடுகிறேன். இந்த நிலைக்கு உதாரணமாய் பெருமை மிக்க எனது பாரத தேசத்தில் வறுமைக்கும், மானத்திற்கும் அஞ்சி பல மாநிலங்களில் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் எனது சகோதர விவசாயிகளின் நிலைமையைத் தவிர வேறு எந்த உதாரணம் தேவை.
50 ஆண்டிற்கும் மேலான சுதந்திர இந்தியாவில் இத்தகைய நிலமை ஏற்பட நாட்டை ஆண்ட அரசியல் கட்சிகள் எந்த பதிலை அளிக்க உள்ளன. பொருளாதார வல்லுனர்கள் கொண்ட இந்தியாவில் ஏன் ஏழை விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த திட்டங்கள் தீட்டப்படவில்லை. இதற்குப்பிறகாவது இவ்வாறு நடக்கா வண்ணம் எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே. அரசாங்கம் விவசாயிகளின் பிரச்னைகளை நிச்சயம் தீர்க்கும் என்ற நம்பிக்கையை இழந்ததுதானே எனது சகோதர விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்.

கிராமங்களே இந்தியாவின் பலம். விவசாயமே கிராமத்தின் உயிர்நாடி. இன்றைய சூழலில் கிராமத்து விவசாயி விவசாயத்தின் மீது வெறுப்பும், அவநம்பிக்கையும், ஏமாற்றமும் தான் கொண்டிருக்கிறக்ன். இதுதான் யதார்த்தமான நிலை. விவசாயிகளின் அழிவு கிராமங்களையும், கிராமங்களின் அழிவு நாட்டையும் அழித்துவிடுமென ஏன் அரசியல் கட்சிகளுக்கு புரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்திய பொருளாதார வளர்ச்சியை அழிந்து கொண்டிருக்கும் கிராமங்களை அஸ்திவாரமாக்கி கட்டாதீர்கள்.

இன்றைய நிலையில் விவசாயிகளின் துயரங்கள் ஏராளம். பல விளை பொருள்களுக்கு நிலையான, நியாயமான விலை இல்லை அனைத்து உற்பத்தி செலவுகளும் கூடிவருகிற சூழலில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு விலை வீழ்ச்சி, மழை இல்லை, நிலத்தடி நீர் குறைவு, உற்பத்தி செய்து வழங்கப்பட்ட விளைபொருளுக்கான விலை கேட்டு போராட வேண்டிய சூழ்நிலை, எண்ணற்ற பிரச்னைகள். இவற்றுக்கிடையே தான் இன்றைய விவசாயி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இந்தியாவில் வாழ்வில் பொழுது போக்கு அம்சங்களான விளையாட்டிற்கும், சினிமாவிற்கும் கிடைக்கும் அங்கீகாரம், ஆதரவு, அரசின் பாராட்டுதல்கள், விருதுகள் ஏன் விவசாயத்தையே வாழ்க்கையாய் கொண்ட விவசாயிக்கு கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. வள்ளுவர் கூட உழவனை தன்னுடைய குறளிலே பெருமைபடுத்தி பேசும் போது, நம்முடைய அரசுகள் விளையாட்டு வீரர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் நியமன உறுப்பினர்களாக்கி அழகு பார்க்கும் நடைமுறை தொடரும் வேளையில் அந்த வாய்ப்பை ஒரு சாதாரண விவசாயிக்கு அளித்து அழகு பார்க்க நினைக்கவில்லையே, சாதனை புரிந்தவர்களுக்குதான் இத்தகைய பதவி என்றாலும் என் சகோதர விவசாயிகளின் தற்கொலைகள் கூட ஒரு சாதனை தானே.

நாட்டில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் தவிர வேறு எந்த பிரச்னை முக்கியமாக மக்கள் மன்றஙகளில் விவாதிக்கப்பட வேண்டியவை? மேலோர்கள் எதனை செய்கிறார்களோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகின்றனர் அவர்கள் எதை பிரமாணமாக்குகிரார்களோ அதையே உலகம் அனுசரிக்கிறது என்பது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் வாக்கு. மக்களின் பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்படவேண்டி இருக்க நாட்டிற்கே உதாரணமாக விளங்கப்படவேண்டிய நாடாளுமன்றம் தேவையற்ற பிரச்னைகளுக்காக கூச்சல்குழப்பங்களை எதிர்கொண்டு அடிக்கடிஒத்திவைக்கப்பட்டு அதன் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதே. இதனை உங்களை தவிர வேறுயாரால் தடுத்து நிறுத்த முடியும்.

விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தாத, விவசாயிகளின் மரணத்தை தடுத்து நிறுத்தாத எந்த பொருளாதார திட்டம் தான் இந்தியாவை மேம்படுத்திட முடியும்.
எனது சிற்றறிவுக்கு எட்டிய சில விஷயங்களை தங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்.

1. வரும் 2004ம் ஆண்டை விவசாயிகள் ஆண்டாக அறிவிக்கவேண்டும். விவசாயம் மேம்பட உண்மையான, உறுதியான பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு விவசாயம் தொழிலாக அங்கீகரிக்கப்படவேண்டும்;.

2. விவசாய விளைபொருள்களின் ஆதரவு விலை சத்தியமாக கட்டுப்படியான விலை அல்ல. இந்த விலை தற்போதய விலையை விட இருமடங்காக்கப்பட வேண்டும். இது சாத்தியமில்லாத நிலையில் விவசாயிகளுக்கு மாதந்தோறும் நிலையான வருமானம் கிடைக்கக் கூடிய வகையில் அவர்களின் சேமிப்புக்கு 18 சத வட்டி வீதம் தொகை கிடைக்க சேமிப்பு திட்டம் உருவாக்கப்படவேண்டும். ஒரு விவசாய குடும்பம் ரூ1000_- மாதந்தோறும் பெறக்கூடிய வகையில் இத்திட்டம் அமைய வேண்டும்.

3. விவசாயத்திற்கு அதிக நிதி வசதிகள் கிடைக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். தற்போது வழங்கப்படும் பயிர்கடன் தொகைகள் இருமடங்காக வழங்கப்படவேண்டும். நவீன விவசாய இயந்திரங்களின் விலை பாதியாக குறைக்கப்படவேண்டும்.

4. உபரியாக உள்ள விளைபொருட்கள் அனைத்தும் மானியம் அளித்தாவது ஏற்றுமதி செய்யப்படவேண்டும்.

பொதுவாக விவசாயியின் நிலை மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விவசாயிகள் கௌரவிக்கப்படவேணடும். அரசு விவசாயிகளின் பக்கம் உள்ளதென்ற நம்பிக்கையை ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் உருவாக்கவேண்டும்.

எனது இந்தியாவில் பல மாநிலங்களில் நிகழ்ந்த எனது விவசாயிகளின் தற்கொலை என்னுள் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களே. உங்களின் எளிமையும், அன்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கான உங்களின் உழைப்பும் என்னுள் ஆவலை தூண்டி உங்கள் கவனத்தை பெற நம்பிக்கை அளித்தது. எனது மின்னஞ்சல் மூலம் எதிர்காலத்தில் ஒரு விவசாயியாவது தற்கொலையிலிருந்து காப்பாற்றப்பட நேருமானால் அதுவே வறுமையில் சிக்கி, மான அவமானத்திற்கு அஞ்சி தன்னுயிரையே இழந்துவிட்ட எனது சகோதர விவசாயிகளின் ஆத்மாவிற்கு நான் செய்யும் சிறு அஞ்சலியாகும்.நன்றி

இந்த கடிதம் கடந்த 2003 ம் ஆண்டு மின்னஞ்சல் மூலம் மாண்புமிகு குடியரசுதலைவருக்கு அனுப்ப பட்டது.விவசாயிகளின் தற்கொலைகள் தீவிரமாய் தொடரும் இன்று வரை இம்மின்னஞ்சல் பெறப்பட்ட தகவல் கூட எனக்கு கிடைக்கவில்லை.இதோ எந்த தடைகளையும் தாண்டும் எனது பெருமைமிக்க தமிழ் வலைபதிவு உலகிற்கு காணிக்கையாக்குகிறேன்.