புதன், ஜனவரி 17, 2007

ஆக்கலும் அழித்தலும்.

எங்கள் கிராமத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள சங்கமாக பல ஆண்டுகள் சேவைபுரிந்து வந்த சங்கம்தான் எண்ணைவித்து உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.விவசாயிகளின் முன்னேற்றத்துக்கான தேசிய பால்வள வாரியத்தின் மற்றொரு புரட்சி திட்டம்.

இச்சங்கம் எங்கள் கிராமத்தை சேர்ந்த இவ்விரு இளைஞர்களின் முழு முயற்சியாலும் தன்னலமற்ற சேவையாலும் தொடங்கப்பட்டு இவர்களின் நிர்வாகத்தால் சிறப்பாக இயங்கி வந்தது.இதன் வளர்ச்சிக்கு இவர்கள் பட்ட துயரங்களை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.

இச்சங்கத்திற்க்கு சுமார்10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள கட்டிடம் கட்ட இவர்கள் பாடுபட்டதும் அச்சமயத்தில் குறிப்பிட்ட கட்டிட வரைபடத்தை ஒதுக்கி இதே தொகையில் இக்கட்டிடத்தை சேர்ந்தார்போல் ஒரு அலுவலக கட்டிடமும் கட்டினால் மிகவும் உபயோகமாய் இருக்கும் என நினைத்து அதிகாரிகளின் மிரட்டலுக்கும் பயப்படாமல் அவ்வாறே கட்டிடம் கட்ட பாடுபட்டதும் அதை பார்வையிட்ட உயரதிகாரிகள் இக்கட்டிட மாதிரி மிக சிறப்பாக உள்ளதால் இனிமேல் இதையே பயன்படுத்தலாம் என சான்று வழங்கியதும் இன்றும் பசுமையாய் மனதில் உள்ளது.

இச்சங்கத்தின் காரணமாக விவசாயிகளுக்கு பல பயன்கள் விளைந்தன.

1.மணிலா போன்ற எண்ணை வித்துக்கள் பயிரிடும் பரப்பு அதிகரித்தது.

2.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களும் இருக்கும் இடத்திலேயே கிட்டியது.

3.தரமான விதை,இடுபொருள்கள் சரியான நேரத்தில் கிடைத்தது.

4.மிகமுக்கியமாக ஊருக்குள் வந்த இடைத்தரகர்களும்,வியாபாரிகளும் ஓட ஓட விரட்டப்பட்டனர்.

5.அனைத்தையும் விட முக்கியமாக விவசாயிகள் உற்பத்தி செய்த எண்ணைவித்து பொருள்கள் அவர்களின் இருப்பிடம் சென்று கொள்முதல் செய்யப்பட்டது.அதற்கான விலை அப்பொழுதே வழங்கப்பட்டது.இப்படி இன்னும் பல.இவற்றிற்கு மிக்க உறுதுணையாய் இருந்தது இந்த இளைஞர்களின் தியாகம்.

ஆனால் இதுபோன்ற கூட்டுறவு சங்கங்களை வளர விடாமல் இதன் நிர்வாகத்தை நள்ளிரவில் கலைத்து வேட்டு வைத்தது அரசாங்கம் பல முறை.

காலம் செல்ல செல்ல இதுபோன்ற விவசாயிகளின் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் இன்று முழுக்க அழிக்கப்பட்டுவிட்டன.

விளைவு இன்று எங்கள் பகுதி விவசாயிகள் எண்ணைவித்து பயிரிடுவதை முற்றிலுமாக கைவிட்டனர்.அரசாங்கம் தன் சொந்த விவசாயிகளை வாழவைப்பதை விடுத்து இன்று தேவைக்கான உணவு எண்ணையை பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.இதற்கான உண்மையான காரணத்தை அரசியல்வாதிகளின் மனசாட்சிதான் சொல்லமுடியும்.

இந்த இரு இளைஞர்களின் நம்பிக்கையோடும் கடின உழைப்பினாலும் உருவான இந்த(கேட்பாரற்று மேலே மெல்ல மெல்ல தலைகாட்டும் சிறு செடிகள்முளைத்துள்ள) சங்க கட்டிடத்தை தாண்டி செல்லும் போதெல்லாம் இதன் இந்நிலைக்கு காரணமான அரசின் விவசாய விரோத கொள்கைகளை எண்ணி வேதனை கொள்ளத்தான் முடிகிறது.

செவ்வாய், ஜனவரி 16, 2007

மாட்டுப்பொங்கல்

இன்று மாட்டுப்பொங்கல்.முன்பெல்லாம் உழவு மாடுகளும்,வண்டிமாடுகளும்,கறவை மாடுகளும் இல்லாத விவசாயின் வீட்டை காணமுடியாது.எங்கள் வீட்டிலும் 10 பசுமாடுகளும் ஒவ்வொரு ஜதை உழவு மற்றும் வண்டி(டயர் வண்டி)மாடுகளும்,சுமார் 25 எருமை மாடுகளும் நிறைந்திருந்தன.

மாட்டுப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஊரே களை கட்டிவிடும்.டயர் வண்டிக்கு வண்ணம் தீட்டுவதில் தொடங்கி,மாடுகளுக்கு கொம்பு சீவி,புது கயிறு கட்டி,சலங்கை கட்டி,மாடுகளை அழகுபடுத்துவதே ஒரு கலையாகிவிடும்.

இன்றைய நாளில் அனைவரின் வண்டிகளும் சிறுவர் சிறுமியர் புடைசூழ மந்தைவெளிக்கு புறப்பட்டு சென்று சாமி கும்பிட்டபின் ஊர்வலம் வரும்.எந்த வண்டி சீக்கிரம் வரும் என்பதில் போட்டியும் நிலவும்.

இன்று வண்டியும்,வண்டிமாடுகளூம்,உழவு மாடுகளும் ,கறவை மாடுகளும் உள்ள விவசாயிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இன்றைக்கும் இந்த விழா நடைபெற்றாலும் வண்டியும் வண்டிமாடுகளும்,உழவுமாடுகளும்,கறவைமாடுகளும் நிறைந்து இயற்கையோடு இணைந்து பயிரிட்டதால் விவசாயியின் மனமும் நிறைந்து மகிழ்ச்சியும் நிறைந்திருந்த சூழல் இன்று இல்லையென்பதே உண்மை.

திங்கள், ஜனவரி 15, 2007

பொங்கல் வாழ்த்து.

தமிழ் வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல்்் நல்வாழ்த்துக்கள்

புதன், ஜனவரி 03, 2007

பாதுகாப்பு?

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை தங்களின் நிலத்துக்கு சென்ற விவசாயிகள் பலருக்கு சோகமான அனுபவம் கிட்டியது.தங்கள் மின் மோட்டாருக்கு மின்சார இணைப்பு வழங்க பயன்படுத்திய காப்பர் ஒயர் (சுமார் ரூ1500 பெறுமானமுள்ளது )திருடர்களால் களவாடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.சுமார் பத்து விவசாயிகளின் மின் இணைப்பு ஒயர்கள் ஒரே நாளில் இவ்வாறு களவாடப்பட்டிருந்தன.

பல கிராமங்களில் இவ்வாறான திருட்டு நடைபெறுவதை பத்திரிக்கைகளில் காண்கிறேன்.நானும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தருமாறு கேட்டுக்கொண்டாலும் விவசாயிகள் யாரும் இதை விரும்பாததுதான் இன்றைய நிலை.

இவ்வாறு இழப்புக்குள்ளான விவசாயிகள் தற்போது சற்றே விலை குறைவான அலுமினிய ஒயரை புதிதாக வாங்கி மாற்றியுள்ளார்கள்.இதில் கவலைப்படும் அம்சம் என்னவெனில் புதிய ஒயரை வாங்க பணமில்லாது கடன் பெற்று வாங்கிய ஒயருடன் தனது மிதிவண்டியில் இன்று சென்ற 70 வயது முதிய விவசாயியை கண்டதுதான் இப்பதிவு.

பொழுது போக்கு அம்சமான திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு வரக்கூடாது என்பதற்காக திருட்டு விசிடி யை ஒழிக்க காவல்துறையில் தனிப்படை.அதற்கும் மேல் குண்டர்சட்டம் போன்ற பாதுகாப்பு . விவசாயிகளுக்கு?