வியாழன், ஜனவரி 22, 2015

சேவை வரி -மீண்டும் ஒரு பூதம்.

ஏற்கெனவே சேவை வரி பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பின் என்ன காரணமோ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டிற்க்கு அந்த சேவை வரி விலக்கிகொள்ளபட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் இரு மடங்காக சேவை வரி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

  ஏழைகள், இயலாதோர், போன்றவர்களுக்கு அவர்களின் துன்பங்களை, கஷ்டங்களை  தன்னால் முடிந்தவரை குறைப்பதற்க்கான செயலை செய்வதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை.அவ்வாறு செய்யாமல் அதை அதிகப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது முட்டாள்தனமானது.

 நம்பிக்கைமிக்க ஒரு மத்திய அரசாங்கத்தின் அங்கமாக கிராமங்களில் கூட செயல்பட்டுவரும் அஞ்சலகத்தில் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாயை கட்டி வயிற்றை கட்டி தான் சேமிக்கும் மாதம் 50 - 100  ரூபாய்க்கும்ஏழைகளிடம் 2% வரி விதித்துதான் உங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்றால் வெட்ககேடான விஷயம் வேறேதுமில்லை மோடிஜி.

ஞாயிறு, ஜனவரி 18, 2015

மாதங்களில் நான் ”மார்கழி”-4

இந்த வருட மார்கழி பஜனையில் கலந்துகொள்ளும் சிறுவர் சிறுமியர்கள் காலை 4.30 மணிக்கு பஜனை ஆரம்பம் என்றாலும் அதிகாலை 3.30 மணிக்கே (சில நாட்களில் அதிகாலை 3.00 மணிக்கே )கூட ஜால்ராவை கைப்பற்றிவிட  போட்டி போட்டுக்கொண்டு முந்திக்கொள்வது ரசிக்கவைக்கும்.

இந்த வருட இந்த நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை தமிழ்மணத்தோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.





மாதங்களில் நான் ”மார்கழி”-3

அதிகாலை எழுந்து சிறுவர் சிறுமியரோடு அவர்களை ஒருங்கினைத்து மாடவீதி வழியே பக்தியுடன் பஜனை பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்று வந்து கொண்டிருந்த ஓரிரு பெரியோர்களில் மிக முக்கியமான பெரியவர் சில மாதங்களுக்கு முன் இறைவன் திருவடி அடைந்துவிட்டதின் காரணமாகவே அவ்வாறு கேட்டனர்.

  இவ்வளவு நாளாக  நடைபெறும் இந்த ஒரு எளிய பக்தி பஜன் நடைபெறுமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது.ஏனெனில் இன்றைய உலக  நாகரீக மாற்றங்களின் தாக்கங்கள் கிராமங்களையும் விட்டுவைக்கவில்லை.

அதிகாலை 3 மணிக்கு எழுந்து 70 வயதான அந்த பெரியவரை போன்று தன்னலமற்று பக்திவெள்ளத்தில் இணைத்துகொள்ள விரும்பும் இளைஞர்கள்  யாரும் இன்று தயாராக இல்லை என்பதே உண்மை.என்றாலும் அவரின் வயதையொத்த பெரியோர்கள் சிலர் தங்கள் உடல்நலனையும் கருதாது கலந்து கொண்டு இந்த மார்கழி பஜன் என்கிற எளிய பக்திமார்க்கம் இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற காரணமாக அமைந்தது ”கண்ணனின்” திருவருள் அன்றி வேறில்லை.

மாதங்களில் நான் ”மார்கழி”-2

அன்றைய பஜனையில் மிருதங்கம் ,ஹார்மோனியம், சிப்லாகட்டை,ஜால்ரா போன்ற  இசை கருவிகள் இசைக்கப்பட்டு  இனிமையாக இருந்தது

.சில வருடங்களுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டுவந்த இக்கருவிகள் கால மாற்றங்களால் பயன்படுத்தமுடியாமல் வீணாகி மறைந்து விட்டதுபோல் அதனை இசைக்க தெரிந்த   பல பெரியோர்கள் தற்போது  மறைந்து விட்டாலும் ,எஞ்சிய ஜால்ராவை வைத்து மட்டும் கிராமத்து இளம் சிறுவர்கள் இன்றும் அதிகாலை 3-4 மணிக்கே எழுந்து இந்த இனிய பக்தி பரவசத்தில் உற்சாகம் கொண்டு கலந்து கொண்டு வருவது ஆச்சரியமானதே.

இந்த ஆண்டும் இந்த மார்கழி பஜனை ஊர்வலம் உண்டா என மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பே சிறுவர்கள் அதீத உற்சாகத்துடன் என்னிடம் கேட்டபோது  ‘கண்ணன்” திரு உள்ளம்  எதுவோ அதுவே நடக்கும் என மனதிற்க்குள் நினைத்து கொண்டு ஏதும் சொல்லாமலே விட்டுவிட்டேன்.
சிறுவர்கள் அவ்வாறு கேட்டதற்கு காரணம்?

தொடரும்.

மாதங்களில் நான் ”மார்கழி”-1

மார்கழி மாத அதிகாலைபொழுது அளிக்கும் இனிமையும், உற்சாகமும் என்றென்றும் மறக்கமுடியாதவை. எங்கள் கிராமத்தில் அந்த அதிகாலைபொழுதை இனிய எளிய பஜனையுடன் அனுபவிக்க ஆர்வமுடன் பனிவிழும் அதிகாலையில் எழுந்து சிறு வயதான எங்களுக்கு குளிப்பதற்க்கு  வென்னீர் வைத்து அன்புடன் எழுப்பி கோயிலுக்கு செல்ல தயாராக்கி விட்ட எங்கள் தாயார் மறைந்து விட்டாலும் இன்றும்  அந்த இனிய நினைவுகள் மறக்க முடியாதவையே.
கிட்டதட்ட 75 ஆண்டுகளாக இந்த  எளிய பஜனை ஊர்வலம் நடைபெற்று வருகிறது.உற்சாகம் துள்ளும் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமின்றி பல பெரியோர்களும் தங்கள் வயது மறந்து ஆடிப்பாடிஉண்மையான பக்தி பரவசத்தில் மெய்மறந்த அந்த நினைவுகள் இன்றும் பசுமையாகவே உள்ளது.

ஆனால் அத்தகைய பல பெரியோர்கள் மறைந்து விட்டதனால் அத்தகைய உற்சாகபக்தி பரவசம் மெல்ல மெல்ல குறைந்து வருவதும் இயற்கையே. அத்தகைய சூழலில் இந்த ஆண்டும் பாரம்பரியம் மிக்க இத்தகைய பக்தி நிகழ்வுகள் நடைபெறுமா என்ற கேள்வியும் இருந்தது.

தொடரும்