செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006

வந்தே மாதரம்

நடப்பு திட்ட காலத்தில் எதிர்பார்க்கபட்ட வேளாண்வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும் என கணக்கிடபட்டுள்ளது.இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.

இந்த வீழ்ச்சிக்கான காரணம் அரசு போதுமான கவனத்தை விவசாயத்துறைக்கு வழங்கவில்லை என்பதையே பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் 1993 முதல் 2003 ஆண்டுவரை 100000 (ஒரு லட்சத்திற்கும்) மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்என தகவல்கள் தெரிவிக்கின்றன

விவசாய தற்கொலைகள் தீவிரமாய் இருக்கும் விதர்பா பிராந்தியத்துக்கு விஜயம் செய்த பிரதமரை பார்த்து விவசாயிகள் கதறி அழுத காட்சிகள் வேதனையாக இருந்தன.

ஆனால், பதவி பறிப்பு சட்டத்துக்கு ஜனாதிபதியின் கையெழுத்து வேண்டி அவரை நிர்பந்தித்ததில் காட்டிய அவசரத்தனமும்,அதில் வெற்றிபெற்று தங்கள் பதவியை காப்பாற்றி கொண்டதும்,சலுகை மழையிலும்.சம்பள உயர்விலும், முழுக்க நனைய தங்களுக்கு தாங்களே ஆணையிட்டுக்கொண்ட சுய நலமும்,இதுவரை பாராளுமன்றத்தில் நடைபெறாத வகையில் மோசமான வார்த்தைகளாலும் ,கேவலமான நடத்தைகளாலும் கட்சிகள் ஒன்றுக்கொன்று தாக்கிகொண்ட இத்தகைய மக்களின் நலனுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகளோடு நாடாளுமன்ற கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடித்துவைக்கபட்டுள்ளது.வாழ்க ஜனநாயகம்.

திங்கள், ஆகஸ்ட் 07, 2006

லாபகணக்கு

சில வருடங்களுக்கு முன் தமிழகத்தின் புகழ்பெற்ற விவசாய பல்கலைகழகத்தில் ஒரு வாரம் விவசாயம் பற்றிய பயிற்சி பெற சென்றிருந்தேன்.தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சுமார் 30 விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நெல் பயிர் குறித்த பயிற்சியின்போது பேராசிரியர், நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பல ஆராய்ச்சிகள் செய்து பல தொழில் நுட்பங்களை வெளியிடுகிறோம் ஆனால் அதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை என வருத்தப்பட்டார்.

உடனே நான், ஐயா உங்களிடம் ஏராளமான நிலம் உள்ளது.நவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வைத்துள்ளீர்கள்,புகழ் பெற்ற ஆராய்சியாளர்கள் உங்கள் வசம் உள்ளார்கள், இந்த நுட்பங்களை வைத்து உங்கள் நிலத்தில் பயன்படுத்தினால் நிச்சயம் பெருத்த லாபம் உங்கள் கணக்குபடி கிடைத்திருக்க வேண்டும் அப்படியென்றால் அது போன்ற லாபகணக்கு பற்றிய விபரம் உங்களிடம் உள்ளதா என வினவினேன்.

இந்த கேள்வி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்தேன்.அவர் மழுப்பலாக இங்கே தண்ணீர் வசதி குறைவு,இரண்டு நாள் நீர் பாய்ச்சவில்லை எனில் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் ஏதோ சொல்லி சமாளித்தார்.

இத்தனை வசதி வாய்ப்புகள் உள்ள நிலையிலும் லாபகணக்கு குறித்து அவரால் பதில் அளிக்கமுடியாது என்பதே விவசாயம் பற்றிய உண்மை நிலை எனில் வசதி வாய்ப்புகள் அற்ற விவசாயிகளின் நிலமை?