செவ்வாய், மார்ச் 21, 2006

விவசாயிகளின் நிலைமை

எதிர்பார்த்ததை போலவே கிட்டத்தட்ட ஏக்கருக்கு 20 டன் கரும்பு மகசூல் இழப்பு ஏற்பட்டு ஏக்கருக்கு சுமார் ரூ 20000/- இவ்வருடம் நட்டம்.எங்கள் பகுதியில் உள்ள பல விவசாயிகளின் நிலைமை இதேதான்.ஏன் தமிழக விவசாயிகள் பெரும்பான்மையோரின் நிலைமையும் இவ்வாறே உள்ளது.உதாரணத்திற்கு சமீபத்தில் திருநாங்கூர் கிராமம் செல்ல நேர்ந்தது.அங்குள்ள ஒரு விவசாய நண்பர் வீட்டில் தங்கியிருந்த போது அவர் அளித்த தகவலோ இன்னும் வேதனையானது.என்னவெனில் அவர் நெல் பயிரிட்டதில் அவருக்கு கிடைத்த மகசூலோ ஏக்கருக்கு இரண்டே மூட்டையாம்.நட்டமோ ஏக்கருக்கு சுமார் ரூ15000/-. இந்தியாவில் பல மாநிலங்களில் பெருமழை காரணமாக பெரும்பான்மை விவசாயிகள் இத்தகைய இழப்புக்களை எதிர்கொண்டு செய்வது அறியாது திகைத்து நிற்க விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியோ,அவர்களின் துயரங்களை பற்றியோ,அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தோ சிறிதும் கவலைப்படாது இதோ ஆண்டுகள் தோறும் பாராளுமன்றத்திலே தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஒரு உதவியுமின்றி. இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்காக ஏதாவது உண்மையில் செய்யப்பட்டுள்ளதா என சல்லடை போட்டு தேடிப்பார்க்கும் முன் எனக்கு ஒரு பெரிய ஆசை என்னவென்றால் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்டுள்ள இந்த தேசத்தில் சென்ற ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் பயனாக எத்தனை விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட்டன? எந்த விவசாய இயந்திரம் விலை குறைக்கப்பட்டது?எந்த விவசாய விலைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிட்டியது?எத்தனை விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன?எத்தனை விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது?எத்தனையோ கேள்விகள் என் மனதில்.பணம் கொடுத்தாவது கேள்வி கேட்டு பதில் பெறலாமென்றாலும் அதற்கும் வசதியில்லை.பதில் சொல்லத்தான் யாருமில்லை? (காய்ந்து விட்ட கரும்பை பலப்பல சிரமங்களுக்கிடையில் அறுவடை செய்ய பெரும்பகுதி நேரம் செலவழிந்துவிட , ஆர்வமிருந்தும் வலைப்பதிய நேரமின்மையால் இந்த கால தாமதம்).