வியாழன், ஏப்ரல் 06, 2017

விழிமின் எழுமின்

பல வருடங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்ற விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நம் தமிழ்நாட்டிலும் நடைபெறும் அவலத்தை கண்டு வேதனைப்படுகிறேன்.

ஆனால் விவசாயிகளின் வேதனை கூக்குரல்,போராட்டங்களாக தொடர்வதும்,இதற்கு பொதுமக்கள்,மாணவர்கள்,குறிப்பாக திரையுலக கலைஞர்கள் பேராதரவு அளிப்பதும் பாராட்டுக்குரியது.

விவசாயிகளின் கடன்   தள்ளுபடி கோரிக்கை ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே.இதற்கே ரிசர்வ் வங்கி ஆளுனர் எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது.

விவசாயிகளின் அடிப்படை பிரச்னை எதுவென ஆராய்ந்து பார்த்தால் முதன்மையானது விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை இல்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

எனவே அனைத்து விளைபொருளுக்கும் அரசாங்கம் இருமடங்கு விலையை நிர்ணயிக்கவேண்டும் என்பதே என் கருத்து.

அடுத்து அரசாங்கம் எந்த விளைபொருள் உற்பத்தி குறைந்தாலும் எதை பற்றியும் சிறிதும் சிந்திக்காமல் உடனடியாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது முட்டாள்தனமானது.
இப்பொழுதுகூட மத்திய அரசு சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

கரும்பு விவசாயிகள் கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் கரும்பு பயிரிட விரும்பவில்லை.அதனால் சர்க்கரை உற்பத்தி குறைந்துவிட்டது.மத்திய அரசு கரும்பு விவசாயிகளை தக்க வைக்க வழி தேடாமல் மாற்றுவழி தேடுவது அநியாயமானது.

விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமேயானால் நமது விவசாயிகள் இந்த உலகுக்கே உணவளிப்பார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.

எக்காரணம் முன்னிட்டும் விவசாயவிளைபொருட்கள் இறக்குமதி கூடவே கூடாது என்பதே என் கருத்து.

இவற்றை பற்றியெல்லாம் அரசாங்கங்கள் சிந்திக்க தவறினால் விவசாயிகளின் தற்கொலைகளும்,கடன் தள்ளுபடி கோரிக்கைகளும் தொடர்கதைகளாகும்.நாடு மிகப்பெரிய விவசாயிகளின் புரட்சியை சந்திக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே என் எண்ணம்.