ஞாயிறு, ஜூன் 17, 2007

கசக்கும் கரும்பு

அனைவருக்கும் இனிக்கும் கரும்பு விவசாயிகளை பொறுத்தவரை இவ்வருடம் கசக்கவே செய்கிறது.பருத்திக்கு பிறகு விவசாயிகளை வாட்டும் கரும்பு பயிர்.ஆம் பருத்தி பயிரிட்டு நஷ்டம் அடைந்து தற்கொலைசெய்துகொள்ளும் விவசாயிகளின் வரிசையில் கரும்பு பயிரும் அத்தகைய நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடும், தள்ளிவிட்ட பரிதாபம் தொடர்கதையாகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்னாடகா,இன்னும் தமிழகத்திலும் இவ்வருடம் கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் நிலை இதுதான்.என்ன காரணம்? மற்ற பயிர்களை விட நிலையான வருமானம் வரும் என நம்பி பெரும்பான்மையான விவசாயிகள் நாடு முழுவதும் கரும்பு பயிரிட்டதில் அனைத்தையும் அறவை செய்யும் திறனற்ற ஆலைகள் 12 மாதத்தில் அறுவடை செய்யவேண்டிய கரும்பிற்கு 15,16 மாதங்களில் அனைத்தும் காய்ந்துவிட்ட பின் உத்தரவு வழங்கும் நிலை.

சென்ற வருடத்தைவிட ஆட்கள் பற்றாகுறை, கூலியோ 200%முதல்300% வரை சென்ற வருடத்தைவிட உயர்வு.வேறு வழியற்று கரும்பை தீயிட்டு அழிக்கும் அவலம்.இதுதான் இன்றைய கரும்பு விவசாயிகளின் நிலை.

சரி,இத்தகைய அவல நிலைக்கு தீர்வு காண அரசோ, அரசியல் கட்சிகளோ ஏதாவது செய்தார்களா?ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடபட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் அறவைத்திறன் எவ்வளவு?விவசாயிக்கு நட்டம் வராத வகையில் அறவை நடக்க என்ன செய்யலாம்?என்ன செய்தது அரசு?இன்றைய கணினி யுகத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலை திரட்டி தக்க நடவடிக்கை எடுக்கமுடியாதா?முடியாதெனில் நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன? விவசாயி மீது யாருக்கும் அக்கறை இல்லையென்பதை தவிர வேறென்ன சொல்ல?

4 கருத்துகள்:

மா சிவகுமார் சொன்னது…

//முடியாதெனில் நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன?//

சரியான கேள்வி!

ரப்பர் ஸ்டாம்பு குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் தேர்ந்தெடுக்கச் செலவிட்ட நேரத்தில் ஒரு பகுதியாவது இது போன்ற வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குச் செலவிட முடியாத மாண்பற்ற அரசியல்வாதிகள் :-(

தொடர்புடையக் கட்டுரை

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

சென்ற ஆண்டும் ஒரு கரும்பு பதிவு ,அதிலும் இதே செய்தி , ஆனால் இந்த சம்பவங்கள் எல்லா ஆண்டும் நடைபெறுகிறது, பத்திரிக்கைகளில் வந்துகொண்டே இருக்கிறது தீர்வு தான் எட்டிய பாடில்லை.

கரும்பு வெட்ட சர்க்கரை ஆலைகள் கால தாமதம் செய்யக்காரணம் , 10 மாதங்களில் வெட்டினால் கரும்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் எனவே எடை அதிகம் நிற்கும், அதுவே கரும்பில் பூ வந்ததும் காய ஆரம்பித்து விடும், கரும்பின் பூவிற்கு ஆரோவ் என்று பெயர். காய்ந்த கரும்பு எடைகுறைவாகவும் சர்க்கரை அதே அளவிலும் இருக்கும் எனவே ஆலைகளுக்கு லாபம், அது விவசாயிகளுக்கு நஷ்டம் ஆலைக்கு லாபம்.

எனவே அரசு என்ன உத்தரவிட்டாலும் தங்கள் போக்கை மார்றிக்கொள்ள மாட்டார்கள். ஒரே தீர்வு கரும்பிற்கு அதிக விலை வைக்க வேண்டும். அதனை செய்ய மாட்டார்கள். மேலும் இறக்குமதி சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.

ஸ்ரீ சொன்னது…

சிவா, ஒவ்வொரு ஆண்டிற்கும் விவசாய விளைபொருள்கள் குறித்த புள்ளிவிவரங்கள் அரசிடம் உள்ளது.அப்புள்ளிவிவரங்கள் குறித்தான சாதக பாதகங்களை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கும் அக்கறை அரசிடம் இல்லை.

ஸ்ரீ சொன்னது…

வாருங்கள் வவ்வால், சென்ற ஆண்டு இயற்கையின் சீற்றத்தால் பாதிப்பு இவ்வருடமோ செயற்கையான பாதிப்பு இந்த பாதிப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.போன ஆண்டு ஓரளவு விலை கிட்டியதை நம்பி விவசாயிகள் பலர் பதிவு இல்லாமலே கரும்பு பயிரிட்டதில் அவர்கள்பாடு மிகமிக மோசமாகிவிட்டது.