புதன், ஜனவரி 17, 2007

ஆக்கலும் அழித்தலும்.

எங்கள் கிராமத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள சங்கமாக பல ஆண்டுகள் சேவைபுரிந்து வந்த சங்கம்தான் எண்ணைவித்து உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.விவசாயிகளின் முன்னேற்றத்துக்கான தேசிய பால்வள வாரியத்தின் மற்றொரு புரட்சி திட்டம்.

இச்சங்கம் எங்கள் கிராமத்தை சேர்ந்த இவ்விரு இளைஞர்களின் முழு முயற்சியாலும் தன்னலமற்ற சேவையாலும் தொடங்கப்பட்டு இவர்களின் நிர்வாகத்தால் சிறப்பாக இயங்கி வந்தது.இதன் வளர்ச்சிக்கு இவர்கள் பட்ட துயரங்களை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.

இச்சங்கத்திற்க்கு சுமார்10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள கட்டிடம் கட்ட இவர்கள் பாடுபட்டதும் அச்சமயத்தில் குறிப்பிட்ட கட்டிட வரைபடத்தை ஒதுக்கி இதே தொகையில் இக்கட்டிடத்தை சேர்ந்தார்போல் ஒரு அலுவலக கட்டிடமும் கட்டினால் மிகவும் உபயோகமாய் இருக்கும் என நினைத்து அதிகாரிகளின் மிரட்டலுக்கும் பயப்படாமல் அவ்வாறே கட்டிடம் கட்ட பாடுபட்டதும் அதை பார்வையிட்ட உயரதிகாரிகள் இக்கட்டிட மாதிரி மிக சிறப்பாக உள்ளதால் இனிமேல் இதையே பயன்படுத்தலாம் என சான்று வழங்கியதும் இன்றும் பசுமையாய் மனதில் உள்ளது.

இச்சங்கத்தின் காரணமாக விவசாயிகளுக்கு பல பயன்கள் விளைந்தன.

1.மணிலா போன்ற எண்ணை வித்துக்கள் பயிரிடும் பரப்பு அதிகரித்தது.

2.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களும் இருக்கும் இடத்திலேயே கிட்டியது.

3.தரமான விதை,இடுபொருள்கள் சரியான நேரத்தில் கிடைத்தது.

4.மிகமுக்கியமாக ஊருக்குள் வந்த இடைத்தரகர்களும்,வியாபாரிகளும் ஓட ஓட விரட்டப்பட்டனர்.

5.அனைத்தையும் விட முக்கியமாக விவசாயிகள் உற்பத்தி செய்த எண்ணைவித்து பொருள்கள் அவர்களின் இருப்பிடம் சென்று கொள்முதல் செய்யப்பட்டது.அதற்கான விலை அப்பொழுதே வழங்கப்பட்டது.இப்படி இன்னும் பல.இவற்றிற்கு மிக்க உறுதுணையாய் இருந்தது இந்த இளைஞர்களின் தியாகம்.

ஆனால் இதுபோன்ற கூட்டுறவு சங்கங்களை வளர விடாமல் இதன் நிர்வாகத்தை நள்ளிரவில் கலைத்து வேட்டு வைத்தது அரசாங்கம் பல முறை.

காலம் செல்ல செல்ல இதுபோன்ற விவசாயிகளின் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் இன்று முழுக்க அழிக்கப்பட்டுவிட்டன.

விளைவு இன்று எங்கள் பகுதி விவசாயிகள் எண்ணைவித்து பயிரிடுவதை முற்றிலுமாக கைவிட்டனர்.அரசாங்கம் தன் சொந்த விவசாயிகளை வாழவைப்பதை விடுத்து இன்று தேவைக்கான உணவு எண்ணையை பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.இதற்கான உண்மையான காரணத்தை அரசியல்வாதிகளின் மனசாட்சிதான் சொல்லமுடியும்.

இந்த இரு இளைஞர்களின் நம்பிக்கையோடும் கடின உழைப்பினாலும் உருவான இந்த(கேட்பாரற்று மேலே மெல்ல மெல்ல தலைகாட்டும் சிறு செடிகள்முளைத்துள்ள) சங்க கட்டிடத்தை தாண்டி செல்லும் போதெல்லாம் இதன் இந்நிலைக்கு காரணமான அரசின் விவசாய விரோத கொள்கைகளை எண்ணி வேதனை கொள்ளத்தான் முடிகிறது.

1 கருத்து:

R.DEVARAJAN சொன்னது…

நண்பரே,
ஒரு நல்ல முயற்சி.
இத்தனை இடர்பாடுகள் இருப்பினும், எண்ணிக்கையும் வலிமையாக இருந்தும் விவசாயிகள் ஏன் ஒன்று பட்டுச் செயல் புரிவதில்லை ?
RIA, zero budget வேளாண்மை இவை குறித்து ஏன் இன்னும் இவர்கள் தெரிந்து கொள்வதில்லை?
மத்ய அரசின் ஏனைய கடன் தள்ளுபடிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடும்படி கம்யூனிஸ்ட்கள் ஏன் வலியுறுத்தவில்லை?
லயோலா கல்லூரி மாணவர்கள் SIFE scheme வாயிலாக 'போன்னீம்' என்றொரு
பூச்சிக்கொல்லி கண்டுபிடித்திருப்பதைத் தாங்கள் அறிவீர்களா?
(கல்கியில் வெளியானது)
பாரதம் முழுவதும் இருக்கும் விவசாயிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும்
முயற்சியை யார் மேற்கொள்வது ?
ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்த நான் வேளாண்மையின் இடர்கள் அனைத்தையும் நன்கு அறிவேன். இன்றும் புளியங்குடியில் இயற்கை வேளாண்மை செய்யும் பண்ணையாளர்களை நான் அறிவேன்.
என்னால் ஆன பங்களிப்பைச் செய்யக்கடமைப் பட்டுள்ளேன்.
அன்புடன்,
R.தேவராஜன்

l