திங்கள், ஜூன் 26, 2006

சேவை வரி

நமது இந்திய தேசத்திலே கிராமங்களிலே கூட தனது சேவையை வழங்கிவரும் மிகப்பெரிய துறையாக அஞ்சல்துறை உள்ளது.இது வழங்கிவரும் பலதரப்பட்ட சேவையில் தற்போது பிரபலமாகிவரும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஒரு சிறந்த திட்டமாகும்.ஏனெனில் இக்காப்பீடு திட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள மக்கள் மட்டுமே சேர முடியும்.மாத பிரீமியமும் செலுத்தலாம். சேரும் வயது ,முடிவடையும் வயதை பொருத்து குறைந்தபட்சம் பிரீமியம் ரூ 25, முதல் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையிலே செலுத்தும் வசதி கொண்ட சேமிப்புதிட்டமாகும்.இதில் கிராமங்களிலே வசிக்கும் ஏழை விவசாயிகள்.கூலி தொழிலாளிகள்,உட்பட பலர் ஏதோ நமக்கு இல்லாவிட்டாலும் நமது குழந்தைகளுக்காவது உதவட்டுமே என்கின்ற ஆசையில் இதில் சேமிக்கின்றனர்.எனது கிராமத்திலே கூட பலர் சேர்ந்துள்ளனர்.ஆசையாக சேர்ந்தாலும் இந்த சிறிய தொகையை கூட செலுத்த முடியாத பொருளாதார சூழலில் எனது நண்பர்கள் பலர் தொடங்கிய சில மாதங்களிலோ,சில ஆண்டுகளிலோ நிறுத்தி விடுவதை கூட கண்கூடாக காண்கிறேன்.உண்மையான நிலை இவ்வாறு இருக்க மத்திய நிதியமைச்சர் கிராமப்புற ஏழைமக்கள் சேமிக்கும் இந்த திட்டத்திற்கும் 12%சத சேவை வரி விதிப்பது கொடுமையானது.கிராமப்புற மக்கள் ,வசதிபடைத்தவர்களை போல வருமானவரிவிலக்கு பெறுவதற்காக இது போன்ற திட்டத்தில் சேரவில்லை என்பது யதார்த்தமான உண்மை.தன் வாயையும்,வயிற்றையும் கட்டி தன்னாலும் சேமிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும் இது போன்ற கிராமப்புற மக்களின் சேமிப்புகளுக்கும் சேவை வரி விதித்து சமாதிகட்டும் நிதியமைச்சர் ஒரு கணம் சிந்திப்பாராக!

ஞாயிறு, ஜூன் 25, 2006

மகிழ்ச்சி

நாட்டுமக்களின் தேவையையும்,எதிர்பார்ப்பையும் மிகச்சரியாக கணித்து அதனை செயல்படுத்தி அதில் வெற்றிபெறுவதென்பது அரசியலில் பழுத்த அனுபவமும்,சிறந்த ஆற்றலும் ,மக்களின் நாடித்துடிப்பை அறியும் ஞானமும் கொண்ட அரசியல் தலைவர்களால் மட்டுமே முடியக்கூடிய ஒன்றாகும்.அந்த வகையிலே விவசாயிகளின் துயரங்களை சரியாக கணித்து அத்துயரங்களை களைய "கடன் தள்ளுபடி" அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாக அளித்து,பதவியேற்ற அன்றே கையெழுத்திட்டு ,இதோ நடைமுறைக்கு வந்துவிட்ட இச்சாதனையை செயல்படுத்திகாட்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் "கலைஞர்" அவர்களுக்கு மிக்க நன்றி.இந்த அறிவிப்பு குறித்து சில பத்திரிக்கைகளில் பல சந்தேகங்கள் எழுப்பபட்டாலும்,அனைத்தையும் முறியடித்து சொன்னதை சொன்னபடி செய்து விவசாயிகள் முகத்தில் புன்னகை அரும்ப காரணமானார் தமிழக முதல்வர்.இந்திய நாட்டிலே பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்துவரும் நிலையிலும் தமிழகத்தில் நிகழாத காரணமான "இலவச மின்சாரம் "பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுவர ஆணையிட்டும்,கடன் சுமையை நீக்க "கடன் தள்ளுபடி" செய்து தற்போது ஆணையிட்டும் "விவசாயிகள் தற்கொலை"தமிழகத்தில் நிகழாவண்ணம் காத்த தமிழக முதல்வர் "கலைஞர்" அவர்களின் இந்த இரு சாதனைகளும் விவசாயிகளின் மனதில் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும்.

ஞாயிறு, ஜூன் 18, 2006

வெட்கம்

பாரத தேசத்து விவசாயிகளே இதோ உங்கள் சிந்தனைக்கு சில கருத்துக்கள் இந்த தேசத்து மக்களின் நலனுக்காகவும்,அவர்களின் துயரங்களை களைந்து ஏழையானாலும் அவர்களின் சிரிப்பிலே இறைவனைக்காணும் உயரிய மனமும்,நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு உரிய அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய அதிகாரம் கொண்ட நமது நாடாளுமன்றத்திலே சில நாட்களுக்கு முன் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் இந்திய விவசாயிகள் ஆண்டுகள் தோறும் எத்தகைய ஆதரவுமின்றி நம்பிக்கையிழந்து தற்கொலைசெய்துகொண்டு மடிந்துகொண்டிருக்க வெந்தபுண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோலே 5 வருடமாக உபரியாய் இருந்த கோதுமையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த நிலை தலைகீழாய் தற்போது மாறி இந்திய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு கோதுமை, நெல் போன்ற விளைபொருள்களை கொள்முதல் செய்யும் மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து மிக அதிக விலைகொடுத்து கோதுமையை இறக்குமதி செய்யும் பாரபட்சமான , மனிதாபிமானமற்ற நடவடிக்கையை தடுத்து இந்திய விவசாயிகளை காப்பாற்ற சட்டம் இயற்றப்படவில்லை. இதோ எங்கள் பகுதியிலே எந்த பயிர் விளைவித்தும் கட்டுப்படியாகாததில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டாலாவது ஏதாவது கிடைக்காதா என்ற நப்பாசையில் தங்கள் நிலத்திலெல்லாம் கரும்பு பயிரிட்டுவிட மழை, நோய்,அதிகபரப்பில் கரும்பு நடவு செய்துவிட்ட சூழ்நிலை இதனால் கரும்பை உரிய காலத்தில் வெட்டமுடியாத நிலையில் கரும்பும் காய்ந்துவிட, காய்ந்துவிட்ட கரும்பை இருமடங்கு கூலி கொடுத்து வெட்ட வேண்டிய பரிதாபநிலை , ஆட்கள் பற்றாக்குறை, இத்தகைய பிரச்சினையில் விவசாயிகள் சிக்கி எப்படியாவது இருக்கிற கரும்பை அறுவடை செய்யவேண்டிய கட்டாயத்தில் ஆசை ஆசையாய் தான் பயிரிட்ட கரும்பை தானே தீ வைத்து கொளுத்தி அறுவடை செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகளின் பரிதாப நிலையை போக்கிட சட்டம் இயற்றப்படவில்லை. இது மட்டுமா சென்ற வருடத்தை விட இவ்வருடம் டீசல்,பெட்ரோல் விலை இரு மடங்கு உயர்வு, தங்கம், வெள்ளி விலை இரு மடங்கு உயர்வு ஆனால் சென்ற வருடம் மூட்டை ரூ450,ரூ500 என விற்ற நெல் இதோ இவ்வருடம் ரூ350 க்கு கூட கேட்க ஆளில்லை . இப்போது விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுள்ள நெல்லை வாங்குவாரில்லாமல் வியாபாரிகள் கேட்ட விலைக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்துவிட்டு 10 நாட்கள் கழித்தாவது பணம் கொடுங்கள் என்று காத்திருக்கும் அவலம். இத்தகைய அவலங்களை போக்க சட்டம் இயற்றப்படவில்லை. ஆனால் இந்த நாட்டிற்காகவும்,இந்த நாட்டு மக்களுக்காகவும் சிறிதும் தன்னலமின்றி தங்கள் உயிர், பொருள் ,உடைமை ஆகிய அனைத்தையும் துறந்து வழிகாட்டிய பெரியோர்கள் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் , தன்னலம் பாராது இந்த நாட்டுமக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக நாட்டை ஆள்வோர் கொண்டிருக்கவேண்டுமென்ற உயரிய நோக்கத்திலே பாராளுமன்றம், சட்டமன்றம் போன்ற மக்கள் மன்றங்களிலே உறுப்பினராக இருப்போர் மற்ற ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்க கூடாது என்ற சட்டம் நடைமுறையில் இருக்க, சட்டத்தை மதித்து முன் உதாரணமாக இருக்க வேண்டிய இத்தகைய உறுப்பினர்கள் பலர் இந்த சட்டத்தை மீறி பல பதவிகளை வகிப்பதும்,இவற்றை எதிர்த்து பல புகார்கள் தேர்தல் ஆணைய பரிசீலனையில் இருக்கும் இந்த நேரத்திலே எங்கே தங்கள் பதவி பறிபோய் விடுமோ ,ஆட்சி பறிபோய் விடுமோ என்ற காரணத்தினாலும் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்கின்ற காரணத்தினாலும் எந்த நோக்கத்திற்காக அரசியல் சட்ட வல்லுனர்களால் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளதோ அந்த சட்டத்தை அதன் நோக்கத்தை சிதைக்கும் வகையிலும் ,ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையிலும் ,அத்தகைய ஆதாயம்தரும் பதவி வகிப்பதை அனுமதிக்கும் சட்டத்தை அதுவும் முன் தேதியிட்டு அமலாக்க முடிவு செய்து, நாட்டுமக்களின் நலன்களுக்காக சட்டம் இயற்றப்பட வேண்டிய நாடாளுமன்றத்திலே தங்கள் சுய நலனுக்காக இத்தகைய சட்டத்தை இயற்ற துணிந்துவிட்ட சுயநலவாதிகளின் செயலை எண்ணி வேதனையுடன் வெட்கி தலைகுனிகிறேன்.குறிப்பு:நமது மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் இந்த சட்டத்திற்கு அனுமதி வழங்காமல் அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்கள் என்பது ஜனநாயகத்தின்பால் பற்று கொண்டுள்ளோர்க்கு ஆறுதலான விஷயம்.