ஞாயிறு, அக்டோபர் 15, 2006

தேவையா தேர்தல்?

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றுமுடிந்தாலும் பெரும்பாலோர் மனதில் இத்தேர்தல் தேவையா என்ற கேள்வி எழும் வண்ணம் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது கவலை அளிக்கிறது.

சாதாரண பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு கூட பல பேர் போட்டியிடுவதும் எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்ற வெறியில் பணம் தண்ணீராய் செலவு செய்யப்படுவதும் ஜனநாயக நடவடிக்கையா?

கிராமத்து மக்களிடம் இருந்த ஒற்றுமையை அழிக்கும்,ஒரு தெருவில் உள்ள மக்களிடம் கூட விரோதத்தை வளர்க்கும் இத்தேர்தலினால் என்னபயன்?எதை எதிர்பார்த்து இத்தகைய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர்?

இத்தகைய அமைப்புகளுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி 100 % நேர்மையான வழியில் நியாயமாக செலவு செய்யப்படுவது உறுதிசெய்யபடும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துவிட்டால் அடுத்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் நிலைக்கு அரசியல்கட்சிகள் தள்ளப்படுவது நிச்சயம்.

ஞாயிறு, செப்டம்பர் 17, 2006

கடன் தள்ளுபடி-ஆதரவு-விளக்கம்

சென்ற எனது கடன் தள்ளுபடி குறித்த பதிவுக்கு பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை வெளியிட்ட திரு.டோண்டு சார் அவர்களுக்கும், என்னார் சாருக்கும் மிக்க நன்றி. கவர்ச்சியும் பரபரப்பாகவும் பேசப்பட்ட “கடன் தள்ளுபடி” என்ற செய்திகளில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் இந்த நாட்டின் மற்ற நிகழ்வுகளோடு இவ்விஷயத்தை ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயம் உண்மை தெளிவாகும் என்பது என் கருத்து.

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் துறையும்,அதை போலவே விவசாயமும் மிக முக்கியமானது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை.ஆனால் தொழில் துறைக்கு கிடைக்கும் அரசின் சலுகைகளும்,உதவிகளும்,ஆதரவும் உண்மையில் விவசாயத்துறைக்கு கிட்டுகிறதா?ஆம் எனில் ஏன் இத்துறையின் வளர்ச்சி இறங்குமுகமாகி சரிந்துவிட்டது?தொழில் தொடங்க சலுகைகளை அள்ளிவீசி ரத்தின கம்பளம் விரித்து கூவி கூவி அழைக்கும் இத்தேசத்தில் விவசாயதுறையில் மட்டும் முதலீடு வற்றிப்போக காரணம் என்ன?

ஒரு தொலைக்காட்சி சேனலோ,ஒரு கார் தொழிற்சாலையோ, ஒரு செல்போன் நிறுவனமோ தொடங்கும் நடைமுறை கூட எளிதாகிபோன இத்தேசத்தில் ஒரு விவசாயிக்கு புதிய மின் இணைப்பு கிட்ட பல ஆண்டுகள் காத்திருந்தும் கிட்டாத நிலை. அது மட்டுமா தான் பெற்ற நிலத்தின் பட்டாவை கூட அத்தனை எளிதாக மாற்றிபெற முடியாத நிலைதான்.பழுதடைந்த மின்மாற்றியை சரிசெய்ய மாதகணக்காகும் நிலை.ஒரு மாதம் தண்ணீர் இல்லையெனில் பயிர்கள் கருகிவிடும் என்பது யாருக்கும் தெரியாதா?பாதிக்கபட்ட விவசாயி யாரிடம் சொல்லி அழுவது? அடிப்படை விஷயங்களே இப்படியெனில் மற்றவற்றை பற்றி என்ன சொல்ல?

58 ஆண்டுகளாக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் அதனால் எந்த பலனும் இல்லை?திட்டங்களுக்கு ஒதுக்கிய பணம் உரியவற்றுக்கு போய் சேரும் போது 15% மாக சுருங்கி விடுகிறது என மறைந்த முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி கூறினார்.இத்தகைய போக்கு தடுக்கபட வேண்டும்.இது நமது நாட்டின் நிதியமைச்சர் சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் தெரிவித்த கருத்து.

அப்படியெனில் ஆண்டுதோறும் ஒதுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் (நம் வரிப்பணம்) எங்கே சென்றது?யாரிடம் கேட்பது?இது நம் வரிப்பணம் இல்லையா?அருமையான ஒரு கதை சொன்னீர்கள் என்னார் சார். இப்பொழுது சொல்லுங்கள் போட்டி போட்டுக்கொண்டு பிச்சையிட்டு அதை லஞ்ச,ஊழல் பெருச்சாளிகள் கொள்ளையிட வழி செய்து இந்த நாட்டின் நிதி என்னும் அரிசிமூட்டை காணாமல் போக செய்த கொடுமைக்கு எது காரணம்?விவசாயிகளா?

சரி ஒரு பேச்சுக்கு இந்த கடன் தள்ளுபடி தொகை ரூ 6800 கோடியை ஏதோ ஒரு திட்ட செலவுக்கு அரசாங்கம் செலவு செய்கிறது என்று வைத்துக்கொண்டாலும் உண்மையில் அதில் 5-ல் 1-பங்கு கூட போய்சேருவதில்லை என்ற நிலையில் இத்தொகை முழுவதும் ஒரு பைசா கூட வீணாகாமல் விவசாயிக்கு போய் சேரும் என்பது உண்மையில் நல்ல விஷயம் இல்லையா? நம் வரிப்பணம் குறித்து நாம் கவலைபடுவது உண்மையெனில் நாம் முதலில் எதிர்க்க வேண்டியது எதை?கொள்ளையிட்டு கூறு போடும் கூட்டத்தையா அல்லது விவசாயிகளுக்கான உதவியையா?

விதர்பாவில் சென்ற வியாழன் அன்று மேலும் இரு விவசாயிகள் தற்கொலை.பிரதமர் இங்கு வருகைதந்த ஜூலை 1-ம் தேதிக்கு பின் இதுவரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 253.பிரதமர் அறிவித்த உதவிகள் இன்னும் உரியவர்களுக்கு சென்று சேரவில்லை.-செய்தி. இந்த நாட்டின் உயர்ந்த பதவி வகிக்கும் பிரதமரின் வருகைக்குபின்னும் அங்கு ஒரு மாற்றமும் நிகழவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமில்லையா?இறந்தது நம் சகோதரனாக இருந்தால் நாம் வேதனைபட மாட்டோமா?உடன் பிறவாவிட்டாலும் அவர்களும் நம் சகோதரர்கள் தானே.முதற்கண் நீங்கள் கண்டிக்கவேண்டியது இதை தடுக்க தவறிய அரசாங்கத்தை அல்லவா?

இன்றைய அரசியல்வாதிகளின் பெரும்பாலான செயல்பாடுகள் நீங்கள் கூறுவது போல ஓட்டுவாங்கும் தந்திரநடவடிக்கைதான் என்பதில் வியப்பேதும் இல்லையே.நான் கூட கடன் தள்ளுபடி குறித்து யோசிக்கும்போது இதில் முதல்வர் கலைஞர், ஒருவருக்கு அதிகபட்சம் இவ்வளவுதான் என்று ஒரு அளவுகோலை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணினேன்.ஒருவேளை தேவையற்ற அரசியல் விமர்சனங்களை தவிர்க்க அவர் இதனை தவிர்த்திருக்கலாம்.எது எப்படியோ அரசாங்கத்தின் உதவி 100% ஒரு சமுதாயத்தை அடையும் நடவடிக்கை, அவ்விவசாய சமுதாயத்தின் தற்கொலைகள் தடுக்கபடாதவரை, விவசாயம் லாபகரமான தொழில் என்பது உறுதிசெய்யப்படாதவரை,அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை உள்ளன்போடு தீர்க்காதவரை எதிர்க்கபடவேண்டிய ஒன்றல்ல.

ஒருவேளை இக்கனவு நனவாகும் காலகட்டத்தில் வேண்டுமானால் உங்களின் கருத்துக்கள் மிக்க பொருத்தமாய் இருக்குமேயன்றி இன்றைய காலத்திற்கு அல்ல என்பது எனது கருத்து.அத்தகைய காலம் விரைவில் கனிந்துவர உங்களின் பதிவுகள் உதவினால் மிக்க உதவியாய் இருக்கும்.
அன்புடன்
ஸ்ரீ

ஞாயிறு, செப்டம்பர் 10, 2006

கடன் தள்ளுபடி-எதிர்ப்பும் -உண்மை நிலையும்

விவசாயிகள் கடன் தள்ளுபடி தேவையா- இது போன்ற காரணிகள் நாட்டையே மறைந்துபோக செய்யும்-முன்னால் மந்திரியும் தள்ளுபடி பெற்றார்-இது தேவையா-ஓட்டுக்காகதான் இத்தகைய சலுகைகள்-இது நம் வரிப்பணம் -என்ற பல கேள்விகள் இந்த வலையுலகில்.

என்னை பொறுத்தவரை விவசாயம், விவசாயிகளின் இன்றைய நிலைமை,அவர்களின் பிரச்னைகள்,தற்கொலைகள்,கிராமங்கள்,அவற்றின் இன்றைய நிலை,அரசாங்க கொள்கைகள் இவற்றை பற்றிய விஷயங்கள் சரியாக புரிந்துகொள்ளபடாமையே மேற்கண்ட கேள்விகளுக்கான காரணங்களாய் கருதுகிறேன்.

கடன் தள்ளுபடி என்பது கவர்ச்சியான வார்த்தையே அன்றி உண்மையில் வங்கிகள் தன்னால் வழங்கப்பட்ட கடனை விவசாயிகளிடமிருந்து திரும்ப பெறுவதை விடுத்து அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதே உண்மை.இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் விவசாயிகளூக்கு அளித்த ஒரு நிதிச்சலுகை.விவசாயிகளுக்கு தன் வாழ்நாளில் அபூர்வமாக கிடைக்கும் போனஸ் தொகை.

ஏன் இத்தகைய நிதிச்சலுகைகளை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்?இக்கேள்விக்கான மிக முக்கியமான பதில்.

1.விவசாயி தன் விளைபொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை.
2.உற்பத்தி செலவு அதிகம் பிடிக்கும் இன்றைய நவீன விவசாயம்,இருந்தும் நிலையான விளைச்சலுக்கு நிரந்தரமற்ற நிலை.
3.நிலையான வருமானம் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லாத நிலை.
4.இயற்கை ஏற்படுத்தும் இழப்புகளும்,அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களும் இல்லாமை.
5.அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் விளைபொருள் உற்பத்தி செலவுக்கும் இடையே மிகுந்த ஏற்றத்தாழ்வுகள்.
6.விளைபொருளை விற்க சிறந்த வாய்ப்புகள் இல்லாமை.
7.விளைபொருளை விற்றும் அதற்கான பணம் விவசாயிக்கு கிடைப்பதில் காலதாமதம்.
8.விவசாய விளைபொருளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வாய்ப்பிருந்தும் இறக்குமதி வரி முற்றிலும் இல்லாமலே கூட இறக்குமதி செய்ய அனுமதிக்கும் தவறான கொள்கை.

இவை போன்ற காரணங்களால் விவசாயம் நஷ்டப்பட்டு போய்விடும் நிலையில் அரசாங்கத்தின் இதுபோன்ற உதவிகளை எதிர்பார்த்து கிடைக்காத சூழலில் தற்கொலைக்கும் துணிந்துவிடும் கொடுமை.(உதாரணம்-விதர்பா).

உண்மையில் இத்தகைய நிதிஉதவிகளை விவசாயிகள் மனப்பூர்வமாக விரும்புகிறார்களா?

நிச்சயம் இல்லை.

ஆனால் இத்தகைய நிலைக்கு அரசாங்கமே விவசாயிகளை தள்ளி விடுகிறது .உண்மையில், பொருளாதார சீர்திருத்தம் என்ற சுனாமி புரட்டிபோட்ட பின் தன் இனிமையான வாழ்க்கையை இழந்து அரசின் ஆதரவு தேடி நிவாரணமுகாமில் நிர்கதியாய் நிற்கும் நிலைமைதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை.

1அரசாங்கம் பன்னாட்டு,உள்நாட்டு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க நிலம்,மின்கட்டண சலுகை,வரிசலுகை இவை போன்ற நிதிசலுகைகளை பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வழங்குவது.

2.அரசாங்கம் மாதாமாதம் சம்பளம் அளித்தாலும் தனது அரசு ஊழியர்கள் நன்மை பெற ஆண்டுதோறும் கோடிகணக்கான ரூபாய் போனசாக நிதிஉதவி அளிப்பது.

3.செல்போன் கம்பெனிகள் அரசுக்கு செலுத்தவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் கட்டணங்களை அரசாங்கமே தள்ளுபடி செய்வது.

4.வங்கிகள் வாரா கடன் என்று கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்வது

5.இல்லாத கம்பெனிக்கும்,சினிமா எடுக்கவும் கோடி கோடியாய் கடன் கொடுத்து ஒரு வங்கியே திவாலாகும் நிலையில் (விவசாயிக்கு கடன் கொடுத்தா திவாலானது?) அதற்கு அரசாங்கமே பல்லாயிரம் கோடி நிதி உதவி அளிப்பது.

6.சமையல் எரிவாயுவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மானியம் அளிப்பது.(இதை பயன் படுத்தும் அனைவரும் இந்த மானியதொகையை ஏற்றுக்கொள்ளும் வசதி இல்லாதவர்களா?கோடீஸ்வரராய் இருந்தாலும் இந்த சலுகையை அனுபவிக்கவில்லையா?)

7.உயர் கல்விக்கு கோடிக்கணக்கான ரூபாய் மானியம் அளிப்பது-இக்கல்வி பயில்வோர் கட்டணம் செலுத்த முடியாத ஏழைகளா?

இவையெல்லாம் கூட மக்களின் வரிப்பணம்தான்.இத்தனை சலுகைகள் அளித்தும் காணாமல் போகாத இந்தியா விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதாலா காணாமல் போய்விடும்?

சுமார் 25 வருடங்களுக்கு முன் 2 பைசா மின்கட்டண சலுகை வேண்டி போராடிய விவசாயிகளை சுட்டுதள்ளிய அரசு இன்று விவசாயிகளுக்கு இந்த நிதி சலுகையை வழங்கியதென்றால் விவசாயிகளின் நிலைமையை உணர்ந்துதானே?விதர்பா நிலைமை தமிழகத்துக்கு வரகூடாது என்ற எச்சரிக்கை நடவடிக்கைதானே.

தினம் தினம் தொடரும் விவசாய தற்கொலைகள் நிகழும் இன்றைய நிலையிலும் விவசாயிகளுக்கான நிதிஉதவிகளை குறை கூறுவது வருத்தபட செய்கிறது.கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கிய இலங்கைவேந்தன் இன்று போய் நாளை வா என்றதும் தூங்கி எழுந்து மறுநாள் போருக்கு வருகிறான்.ஆனால் கடன் வாங்கி கட்ட வழியற்ற எனது விவசாயியோ இந்த நிலைமை எனக்கு வந்துவிட்டதே என்று கலங்கி,கலங்கி நிரந்தர உறக்கத்தை தானே வரவழைத்துக்கொள்ளும் கொடுமை கண்முன்னே நிகழும் நிலையில் இழப்பதற்கு ஒன்றுமில்லாமல் தன் உயிரையும் இழக்க துணிந்த விவசாய சமுதாயத்துக்கு கிடைக்கும் எந்த உதவியையும் குறை கூறுவது நல்ல பண்புடையோர் செயலா?

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006

வந்தே மாதரம்

நடப்பு திட்ட காலத்தில் எதிர்பார்க்கபட்ட வேளாண்வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும் என கணக்கிடபட்டுள்ளது.இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.

இந்த வீழ்ச்சிக்கான காரணம் அரசு போதுமான கவனத்தை விவசாயத்துறைக்கு வழங்கவில்லை என்பதையே பிரதிபலிக்கிறது.

இந்தியாவில் 1993 முதல் 2003 ஆண்டுவரை 100000 (ஒரு லட்சத்திற்கும்) மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்என தகவல்கள் தெரிவிக்கின்றன

விவசாய தற்கொலைகள் தீவிரமாய் இருக்கும் விதர்பா பிராந்தியத்துக்கு விஜயம் செய்த பிரதமரை பார்த்து விவசாயிகள் கதறி அழுத காட்சிகள் வேதனையாக இருந்தன.

ஆனால், பதவி பறிப்பு சட்டத்துக்கு ஜனாதிபதியின் கையெழுத்து வேண்டி அவரை நிர்பந்தித்ததில் காட்டிய அவசரத்தனமும்,அதில் வெற்றிபெற்று தங்கள் பதவியை காப்பாற்றி கொண்டதும்,சலுகை மழையிலும்.சம்பள உயர்விலும், முழுக்க நனைய தங்களுக்கு தாங்களே ஆணையிட்டுக்கொண்ட சுய நலமும்,இதுவரை பாராளுமன்றத்தில் நடைபெறாத வகையில் மோசமான வார்த்தைகளாலும் ,கேவலமான நடத்தைகளாலும் கட்சிகள் ஒன்றுக்கொன்று தாக்கிகொண்ட இத்தகைய மக்களின் நலனுக்கான அத்தியாவசிய நடவடிக்கைகளோடு நாடாளுமன்ற கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடித்துவைக்கபட்டுள்ளது.வாழ்க ஜனநாயகம்.

திங்கள், ஆகஸ்ட் 07, 2006

லாபகணக்கு

சில வருடங்களுக்கு முன் தமிழகத்தின் புகழ்பெற்ற விவசாய பல்கலைகழகத்தில் ஒரு வாரம் விவசாயம் பற்றிய பயிற்சி பெற சென்றிருந்தேன்.தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சுமார் 30 விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நெல் பயிர் குறித்த பயிற்சியின்போது பேராசிரியர், நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பல ஆராய்ச்சிகள் செய்து பல தொழில் நுட்பங்களை வெளியிடுகிறோம் ஆனால் அதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை என வருத்தப்பட்டார்.

உடனே நான், ஐயா உங்களிடம் ஏராளமான நிலம் உள்ளது.நவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வைத்துள்ளீர்கள்,புகழ் பெற்ற ஆராய்சியாளர்கள் உங்கள் வசம் உள்ளார்கள், இந்த நுட்பங்களை வைத்து உங்கள் நிலத்தில் பயன்படுத்தினால் நிச்சயம் பெருத்த லாபம் உங்கள் கணக்குபடி கிடைத்திருக்க வேண்டும் அப்படியென்றால் அது போன்ற லாபகணக்கு பற்றிய விபரம் உங்களிடம் உள்ளதா என வினவினேன்.

இந்த கேள்வி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்தேன்.அவர் மழுப்பலாக இங்கே தண்ணீர் வசதி குறைவு,இரண்டு நாள் நீர் பாய்ச்சவில்லை எனில் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் ஏதோ சொல்லி சமாளித்தார்.

இத்தனை வசதி வாய்ப்புகள் உள்ள நிலையிலும் லாபகணக்கு குறித்து அவரால் பதில் அளிக்கமுடியாது என்பதே விவசாயம் பற்றிய உண்மை நிலை எனில் வசதி வாய்ப்புகள் அற்ற விவசாயிகளின் நிலமை?

சனி, ஜூலை 22, 2006

கவலையுடன் ஒரு கடிதம்

மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களே,
ஒரு சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து சின்னஞ்சிறு விவசாயியின் மின்னஞ்சல். தகவல் தொழில் நுட்பவளர்ச்சியில் இந்தியா அடைந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சிக்கு எனது கிராமத்திற்கு இத்தகைய வசதி கிட்டியதே சிறந்த உதாரணம் அன்பும் எளிமையும் கொண்ட உங்களோடு தொடர்பு கொள்வதில் பெருமை படுகிறேன்.

பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ள எனது இந்தியாவை நினைத்து பெருமைகொள்ளும் வேளையில் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள, 100 கோடி மக்களுக்கு உணவளித்து மகிழும் இன்றைய விவசாயிகளின் நிலைமை குறித்து வேதனைபடுகிறேன். இந்த நிலைக்கு உதாரணமாய் பெருமை மிக்க எனது பாரத தேசத்தில் வறுமைக்கும், மானத்திற்கும் அஞ்சி பல மாநிலங்களில் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் எனது சகோதர விவசாயிகளின் நிலைமையைத் தவிர வேறு எந்த உதாரணம் தேவை.
50 ஆண்டிற்கும் மேலான சுதந்திர இந்தியாவில் இத்தகைய நிலமை ஏற்பட நாட்டை ஆண்ட அரசியல் கட்சிகள் எந்த பதிலை அளிக்க உள்ளன. பொருளாதார வல்லுனர்கள் கொண்ட இந்தியாவில் ஏன் ஏழை விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த திட்டங்கள் தீட்டப்படவில்லை. இதற்குப்பிறகாவது இவ்வாறு நடக்கா வண்ணம் எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே. அரசாங்கம் விவசாயிகளின் பிரச்னைகளை நிச்சயம் தீர்க்கும் என்ற நம்பிக்கையை இழந்ததுதானே எனது சகோதர விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்.

கிராமங்களே இந்தியாவின் பலம். விவசாயமே கிராமத்தின் உயிர்நாடி. இன்றைய சூழலில் கிராமத்து விவசாயி விவசாயத்தின் மீது வெறுப்பும், அவநம்பிக்கையும், ஏமாற்றமும் தான் கொண்டிருக்கிறக்ன். இதுதான் யதார்த்தமான நிலை. விவசாயிகளின் அழிவு கிராமங்களையும், கிராமங்களின் அழிவு நாட்டையும் அழித்துவிடுமென ஏன் அரசியல் கட்சிகளுக்கு புரியவில்லை. பொருளாதார நிபுணர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்திய பொருளாதார வளர்ச்சியை அழிந்து கொண்டிருக்கும் கிராமங்களை அஸ்திவாரமாக்கி கட்டாதீர்கள்.

இன்றைய நிலையில் விவசாயிகளின் துயரங்கள் ஏராளம். பல விளை பொருள்களுக்கு நிலையான, நியாயமான விலை இல்லை அனைத்து உற்பத்தி செலவுகளும் கூடிவருகிற சூழலில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு விலை வீழ்ச்சி, மழை இல்லை, நிலத்தடி நீர் குறைவு, உற்பத்தி செய்து வழங்கப்பட்ட விளைபொருளுக்கான விலை கேட்டு போராட வேண்டிய சூழ்நிலை, எண்ணற்ற பிரச்னைகள். இவற்றுக்கிடையே தான் இன்றைய விவசாயி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இந்தியாவில் வாழ்வில் பொழுது போக்கு அம்சங்களான விளையாட்டிற்கும், சினிமாவிற்கும் கிடைக்கும் அங்கீகாரம், ஆதரவு, அரசின் பாராட்டுதல்கள், விருதுகள் ஏன் விவசாயத்தையே வாழ்க்கையாய் கொண்ட விவசாயிக்கு கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. வள்ளுவர் கூட உழவனை தன்னுடைய குறளிலே பெருமைபடுத்தி பேசும் போது, நம்முடைய அரசுகள் விளையாட்டு வீரர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் நியமன உறுப்பினர்களாக்கி அழகு பார்க்கும் நடைமுறை தொடரும் வேளையில் அந்த வாய்ப்பை ஒரு சாதாரண விவசாயிக்கு அளித்து அழகு பார்க்க நினைக்கவில்லையே, சாதனை புரிந்தவர்களுக்குதான் இத்தகைய பதவி என்றாலும் என் சகோதர விவசாயிகளின் தற்கொலைகள் கூட ஒரு சாதனை தானே.

நாட்டில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் தவிர வேறு எந்த பிரச்னை முக்கியமாக மக்கள் மன்றஙகளில் விவாதிக்கப்பட வேண்டியவை? மேலோர்கள் எதனை செய்கிறார்களோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகின்றனர் அவர்கள் எதை பிரமாணமாக்குகிரார்களோ அதையே உலகம் அனுசரிக்கிறது என்பது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் வாக்கு. மக்களின் பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்படவேண்டி இருக்க நாட்டிற்கே உதாரணமாக விளங்கப்படவேண்டிய நாடாளுமன்றம் தேவையற்ற பிரச்னைகளுக்காக கூச்சல்குழப்பங்களை எதிர்கொண்டு அடிக்கடிஒத்திவைக்கப்பட்டு அதன் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறதே. இதனை உங்களை தவிர வேறுயாரால் தடுத்து நிறுத்த முடியும்.

விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தாத, விவசாயிகளின் மரணத்தை தடுத்து நிறுத்தாத எந்த பொருளாதார திட்டம் தான் இந்தியாவை மேம்படுத்திட முடியும்.
எனது சிற்றறிவுக்கு எட்டிய சில விஷயங்களை தங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்.

1. வரும் 2004ம் ஆண்டை விவசாயிகள் ஆண்டாக அறிவிக்கவேண்டும். விவசாயம் மேம்பட உண்மையான, உறுதியான பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு விவசாயம் தொழிலாக அங்கீகரிக்கப்படவேண்டும்;.

2. விவசாய விளைபொருள்களின் ஆதரவு விலை சத்தியமாக கட்டுப்படியான விலை அல்ல. இந்த விலை தற்போதய விலையை விட இருமடங்காக்கப்பட வேண்டும். இது சாத்தியமில்லாத நிலையில் விவசாயிகளுக்கு மாதந்தோறும் நிலையான வருமானம் கிடைக்கக் கூடிய வகையில் அவர்களின் சேமிப்புக்கு 18 சத வட்டி வீதம் தொகை கிடைக்க சேமிப்பு திட்டம் உருவாக்கப்படவேண்டும். ஒரு விவசாய குடும்பம் ரூ1000_- மாதந்தோறும் பெறக்கூடிய வகையில் இத்திட்டம் அமைய வேண்டும்.

3. விவசாயத்திற்கு அதிக நிதி வசதிகள் கிடைக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். தற்போது வழங்கப்படும் பயிர்கடன் தொகைகள் இருமடங்காக வழங்கப்படவேண்டும். நவீன விவசாய இயந்திரங்களின் விலை பாதியாக குறைக்கப்படவேண்டும்.

4. உபரியாக உள்ள விளைபொருட்கள் அனைத்தும் மானியம் அளித்தாவது ஏற்றுமதி செய்யப்படவேண்டும்.

பொதுவாக விவசாயியின் நிலை மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விவசாயிகள் கௌரவிக்கப்படவேணடும். அரசு விவசாயிகளின் பக்கம் உள்ளதென்ற நம்பிக்கையை ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் உருவாக்கவேண்டும்.

எனது இந்தியாவில் பல மாநிலங்களில் நிகழ்ந்த எனது விவசாயிகளின் தற்கொலை என்னுள் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களே. உங்களின் எளிமையும், அன்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கான உங்களின் உழைப்பும் என்னுள் ஆவலை தூண்டி உங்கள் கவனத்தை பெற நம்பிக்கை அளித்தது. எனது மின்னஞ்சல் மூலம் எதிர்காலத்தில் ஒரு விவசாயியாவது தற்கொலையிலிருந்து காப்பாற்றப்பட நேருமானால் அதுவே வறுமையில் சிக்கி, மான அவமானத்திற்கு அஞ்சி தன்னுயிரையே இழந்துவிட்ட எனது சகோதர விவசாயிகளின் ஆத்மாவிற்கு நான் செய்யும் சிறு அஞ்சலியாகும்.நன்றி

இந்த கடிதம் கடந்த 2003 ம் ஆண்டு மின்னஞ்சல் மூலம் மாண்புமிகு குடியரசுதலைவருக்கு அனுப்ப பட்டது.விவசாயிகளின் தற்கொலைகள் தீவிரமாய் தொடரும் இன்று வரை இம்மின்னஞ்சல் பெறப்பட்ட தகவல் கூட எனக்கு கிடைக்கவில்லை.இதோ எந்த தடைகளையும் தாண்டும் எனது பெருமைமிக்க தமிழ் வலைபதிவு உலகிற்கு காணிக்கையாக்குகிறேன்.

திங்கள், ஜூன் 26, 2006

சேவை வரி

நமது இந்திய தேசத்திலே கிராமங்களிலே கூட தனது சேவையை வழங்கிவரும் மிகப்பெரிய துறையாக அஞ்சல்துறை உள்ளது.இது வழங்கிவரும் பலதரப்பட்ட சேவையில் தற்போது பிரபலமாகிவரும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஒரு சிறந்த திட்டமாகும்.ஏனெனில் இக்காப்பீடு திட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள மக்கள் மட்டுமே சேர முடியும்.மாத பிரீமியமும் செலுத்தலாம். சேரும் வயது ,முடிவடையும் வயதை பொருத்து குறைந்தபட்சம் பிரீமியம் ரூ 25, முதல் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையிலே செலுத்தும் வசதி கொண்ட சேமிப்புதிட்டமாகும்.இதில் கிராமங்களிலே வசிக்கும் ஏழை விவசாயிகள்.கூலி தொழிலாளிகள்,உட்பட பலர் ஏதோ நமக்கு இல்லாவிட்டாலும் நமது குழந்தைகளுக்காவது உதவட்டுமே என்கின்ற ஆசையில் இதில் சேமிக்கின்றனர்.எனது கிராமத்திலே கூட பலர் சேர்ந்துள்ளனர்.ஆசையாக சேர்ந்தாலும் இந்த சிறிய தொகையை கூட செலுத்த முடியாத பொருளாதார சூழலில் எனது நண்பர்கள் பலர் தொடங்கிய சில மாதங்களிலோ,சில ஆண்டுகளிலோ நிறுத்தி விடுவதை கூட கண்கூடாக காண்கிறேன்.உண்மையான நிலை இவ்வாறு இருக்க மத்திய நிதியமைச்சர் கிராமப்புற ஏழைமக்கள் சேமிக்கும் இந்த திட்டத்திற்கும் 12%சத சேவை வரி விதிப்பது கொடுமையானது.கிராமப்புற மக்கள் ,வசதிபடைத்தவர்களை போல வருமானவரிவிலக்கு பெறுவதற்காக இது போன்ற திட்டத்தில் சேரவில்லை என்பது யதார்த்தமான உண்மை.தன் வாயையும்,வயிற்றையும் கட்டி தன்னாலும் சேமிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும் இது போன்ற கிராமப்புற மக்களின் சேமிப்புகளுக்கும் சேவை வரி விதித்து சமாதிகட்டும் நிதியமைச்சர் ஒரு கணம் சிந்திப்பாராக!

ஞாயிறு, ஜூன் 25, 2006

மகிழ்ச்சி

நாட்டுமக்களின் தேவையையும்,எதிர்பார்ப்பையும் மிகச்சரியாக கணித்து அதனை செயல்படுத்தி அதில் வெற்றிபெறுவதென்பது அரசியலில் பழுத்த அனுபவமும்,சிறந்த ஆற்றலும் ,மக்களின் நாடித்துடிப்பை அறியும் ஞானமும் கொண்ட அரசியல் தலைவர்களால் மட்டுமே முடியக்கூடிய ஒன்றாகும்.அந்த வகையிலே விவசாயிகளின் துயரங்களை சரியாக கணித்து அத்துயரங்களை களைய "கடன் தள்ளுபடி" அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாக அளித்து,பதவியேற்ற அன்றே கையெழுத்திட்டு ,இதோ நடைமுறைக்கு வந்துவிட்ட இச்சாதனையை செயல்படுத்திகாட்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் "கலைஞர்" அவர்களுக்கு மிக்க நன்றி.இந்த அறிவிப்பு குறித்து சில பத்திரிக்கைகளில் பல சந்தேகங்கள் எழுப்பபட்டாலும்,அனைத்தையும் முறியடித்து சொன்னதை சொன்னபடி செய்து விவசாயிகள் முகத்தில் புன்னகை அரும்ப காரணமானார் தமிழக முதல்வர்.இந்திய நாட்டிலே பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்துவரும் நிலையிலும் தமிழகத்தில் நிகழாத காரணமான "இலவச மின்சாரம் "பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுவர ஆணையிட்டும்,கடன் சுமையை நீக்க "கடன் தள்ளுபடி" செய்து தற்போது ஆணையிட்டும் "விவசாயிகள் தற்கொலை"தமிழகத்தில் நிகழாவண்ணம் காத்த தமிழக முதல்வர் "கலைஞர்" அவர்களின் இந்த இரு சாதனைகளும் விவசாயிகளின் மனதில் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும்.

ஞாயிறு, ஜூன் 18, 2006

வெட்கம்

பாரத தேசத்து விவசாயிகளே இதோ உங்கள் சிந்தனைக்கு சில கருத்துக்கள் இந்த தேசத்து மக்களின் நலனுக்காகவும்,அவர்களின் துயரங்களை களைந்து ஏழையானாலும் அவர்களின் சிரிப்பிலே இறைவனைக்காணும் உயரிய மனமும்,நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு உரிய அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய அதிகாரம் கொண்ட நமது நாடாளுமன்றத்திலே சில நாட்களுக்கு முன் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரமாயிரம் இந்திய விவசாயிகள் ஆண்டுகள் தோறும் எத்தகைய ஆதரவுமின்றி நம்பிக்கையிழந்து தற்கொலைசெய்துகொண்டு மடிந்துகொண்டிருக்க வெந்தபுண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோலே 5 வருடமாக உபரியாய் இருந்த கோதுமையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த நிலை தலைகீழாய் தற்போது மாறி இந்திய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு கோதுமை, நெல் போன்ற விளைபொருள்களை கொள்முதல் செய்யும் மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து மிக அதிக விலைகொடுத்து கோதுமையை இறக்குமதி செய்யும் பாரபட்சமான , மனிதாபிமானமற்ற நடவடிக்கையை தடுத்து இந்திய விவசாயிகளை காப்பாற்ற சட்டம் இயற்றப்படவில்லை. இதோ எங்கள் பகுதியிலே எந்த பயிர் விளைவித்தும் கட்டுப்படியாகாததில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டாலாவது ஏதாவது கிடைக்காதா என்ற நப்பாசையில் தங்கள் நிலத்திலெல்லாம் கரும்பு பயிரிட்டுவிட மழை, நோய்,அதிகபரப்பில் கரும்பு நடவு செய்துவிட்ட சூழ்நிலை இதனால் கரும்பை உரிய காலத்தில் வெட்டமுடியாத நிலையில் கரும்பும் காய்ந்துவிட, காய்ந்துவிட்ட கரும்பை இருமடங்கு கூலி கொடுத்து வெட்ட வேண்டிய பரிதாபநிலை , ஆட்கள் பற்றாக்குறை, இத்தகைய பிரச்சினையில் விவசாயிகள் சிக்கி எப்படியாவது இருக்கிற கரும்பை அறுவடை செய்யவேண்டிய கட்டாயத்தில் ஆசை ஆசையாய் தான் பயிரிட்ட கரும்பை தானே தீ வைத்து கொளுத்தி அறுவடை செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகளின் பரிதாப நிலையை போக்கிட சட்டம் இயற்றப்படவில்லை. இது மட்டுமா சென்ற வருடத்தை விட இவ்வருடம் டீசல்,பெட்ரோல் விலை இரு மடங்கு உயர்வு, தங்கம், வெள்ளி விலை இரு மடங்கு உயர்வு ஆனால் சென்ற வருடம் மூட்டை ரூ450,ரூ500 என விற்ற நெல் இதோ இவ்வருடம் ரூ350 க்கு கூட கேட்க ஆளில்லை . இப்போது விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுள்ள நெல்லை வாங்குவாரில்லாமல் வியாபாரிகள் கேட்ட விலைக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்துவிட்டு 10 நாட்கள் கழித்தாவது பணம் கொடுங்கள் என்று காத்திருக்கும் அவலம். இத்தகைய அவலங்களை போக்க சட்டம் இயற்றப்படவில்லை. ஆனால் இந்த நாட்டிற்காகவும்,இந்த நாட்டு மக்களுக்காகவும் சிறிதும் தன்னலமின்றி தங்கள் உயிர், பொருள் ,உடைமை ஆகிய அனைத்தையும் துறந்து வழிகாட்டிய பெரியோர்கள் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் , தன்னலம் பாராது இந்த நாட்டுமக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக நாட்டை ஆள்வோர் கொண்டிருக்கவேண்டுமென்ற உயரிய நோக்கத்திலே பாராளுமன்றம், சட்டமன்றம் போன்ற மக்கள் மன்றங்களிலே உறுப்பினராக இருப்போர் மற்ற ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்க கூடாது என்ற சட்டம் நடைமுறையில் இருக்க, சட்டத்தை மதித்து முன் உதாரணமாக இருக்க வேண்டிய இத்தகைய உறுப்பினர்கள் பலர் இந்த சட்டத்தை மீறி பல பதவிகளை வகிப்பதும்,இவற்றை எதிர்த்து பல புகார்கள் தேர்தல் ஆணைய பரிசீலனையில் இருக்கும் இந்த நேரத்திலே எங்கே தங்கள் பதவி பறிபோய் விடுமோ ,ஆட்சி பறிபோய் விடுமோ என்ற காரணத்தினாலும் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்கின்ற காரணத்தினாலும் எந்த நோக்கத்திற்காக அரசியல் சட்ட வல்லுனர்களால் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளதோ அந்த சட்டத்தை அதன் நோக்கத்தை சிதைக்கும் வகையிலும் ,ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையிலும் ,அத்தகைய ஆதாயம்தரும் பதவி வகிப்பதை அனுமதிக்கும் சட்டத்தை அதுவும் முன் தேதியிட்டு அமலாக்க முடிவு செய்து, நாட்டுமக்களின் நலன்களுக்காக சட்டம் இயற்றப்பட வேண்டிய நாடாளுமன்றத்திலே தங்கள் சுய நலனுக்காக இத்தகைய சட்டத்தை இயற்ற துணிந்துவிட்ட சுயநலவாதிகளின் செயலை எண்ணி வேதனையுடன் வெட்கி தலைகுனிகிறேன்.குறிப்பு:நமது மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் இந்த சட்டத்திற்கு அனுமதி வழங்காமல் அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்கள் என்பது ஜனநாயகத்தின்பால் பற்று கொண்டுள்ளோர்க்கு ஆறுதலான விஷயம்.

செவ்வாய், மார்ச் 21, 2006

விவசாயிகளின் நிலைமை

எதிர்பார்த்ததை போலவே கிட்டத்தட்ட ஏக்கருக்கு 20 டன் கரும்பு மகசூல் இழப்பு ஏற்பட்டு ஏக்கருக்கு சுமார் ரூ 20000/- இவ்வருடம் நட்டம்.எங்கள் பகுதியில் உள்ள பல விவசாயிகளின் நிலைமை இதேதான்.ஏன் தமிழக விவசாயிகள் பெரும்பான்மையோரின் நிலைமையும் இவ்வாறே உள்ளது.உதாரணத்திற்கு சமீபத்தில் திருநாங்கூர் கிராமம் செல்ல நேர்ந்தது.அங்குள்ள ஒரு விவசாய நண்பர் வீட்டில் தங்கியிருந்த போது அவர் அளித்த தகவலோ இன்னும் வேதனையானது.என்னவெனில் அவர் நெல் பயிரிட்டதில் அவருக்கு கிடைத்த மகசூலோ ஏக்கருக்கு இரண்டே மூட்டையாம்.நட்டமோ ஏக்கருக்கு சுமார் ரூ15000/-. இந்தியாவில் பல மாநிலங்களில் பெருமழை காரணமாக பெரும்பான்மை விவசாயிகள் இத்தகைய இழப்புக்களை எதிர்கொண்டு செய்வது அறியாது திகைத்து நிற்க விவசாயிகளின் வாழ்க்கையை பற்றியோ,அவர்களின் துயரங்களை பற்றியோ,அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தோ சிறிதும் கவலைப்படாது இதோ ஆண்டுகள் தோறும் பாராளுமன்றத்திலே தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஒரு உதவியுமின்றி. இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்காக ஏதாவது உண்மையில் செய்யப்பட்டுள்ளதா என சல்லடை போட்டு தேடிப்பார்க்கும் முன் எனக்கு ஒரு பெரிய ஆசை என்னவென்றால் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்டுள்ள இந்த தேசத்தில் சென்ற ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் பயனாக எத்தனை விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட்டன? எந்த விவசாய இயந்திரம் விலை குறைக்கப்பட்டது?எந்த விவசாய விலைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிட்டியது?எத்தனை விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன?எத்தனை விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது?எத்தனையோ கேள்விகள் என் மனதில்.பணம் கொடுத்தாவது கேள்வி கேட்டு பதில் பெறலாமென்றாலும் அதற்கும் வசதியில்லை.பதில் சொல்லத்தான் யாருமில்லை? (காய்ந்து விட்ட கரும்பை பலப்பல சிரமங்களுக்கிடையில் அறுவடை செய்ய பெரும்பகுதி நேரம் செலவழிந்துவிட , ஆர்வமிருந்தும் வலைப்பதிய நேரமின்மையால் இந்த கால தாமதம்).

வெள்ளி, ஜனவரி 27, 2006

சோதனை

வெள்ள பாதிப்புகளிலிருந்து தமிழகம் மெல்ல மீண்டுவந்தாலும் விவசாயிகளை பொருத்தவரை பாதிப்பு முற்றிலும் நீங்காது இன்னும் தொடர்வது வேதனையான விஷயமே. என் நிலைமையை போலவே சில விவசாயிகளின் நிலைமையும் இதற்கு சிறு உதாரணம்.பொதுவாக இந்த வெள்ளத்தில் ஓரளவுபாதிப்பு எங்கள் கிராமத்தில் இருந்ததில் எங்கள் நிலம் சற்றே தாழ்வான பகுதியில் உள்ளதாலும் மழையினால் சுமார் ஒரு மாதகாலம் தொடர்ந்து தண்ணீர் கரும்பு பயிரில் தேங்கியதாலும் அதன் பாதிப்பு தற்போதுதான் தெரியவருகிறது. கரும்பு வெட்ட வேண்டிய இந்த தருணத்தில் பரவலாக காய்ந்து கட்டையாகிவிட்டது.இவ்வருடம் வங்கியில் உச்சபட்ச கடன் பெற்றுள்ள நிலையில் எப்படியாவது நன்குகரும்பை பாதுகாத்து அதிக மகசூல் எடுத்தேஆக வேண்டிய கட்டாயத்தில் நன்றாகவே கரும்பை கவனித்து வந்தோம்.முடிந்தவரை அனைத்து பராமரிப்புகளையும் செய்து 7 மாத காலத்தில் எதிர்பார்த்ததை போலவே நன்றாகவே இருந்தது.அதன் பின் பெய்த தொடர் மழையினால் தற்போது கரும்பு காய்ந்து வருவது வேதனையாகவே உள்ளது.எப்படியும் 50%சத மகசூல் இழப்பு நிச்சயமே.விவசாய வருமானத்தை மட்டில் நம்பியுள்ள நிலையில் இந்த இழப்பை ஈடு செய்ய எத்தனை காலமாகுமோ தெரியவில்லை? இயற்கை சீற்றத்தின் கரங்களின் மிதமான தாக்கத்திற்கே எனக்கு மனதில் இந்த சோகம் இழையோடும்போது அவற்றின் கடும் தாக்கத்திற்கு ஆளாகி முற்றிலுமாக விளைச்சலை இழந்து வாடும் விவசாயிகளின் நிலைமையை சற்றே மனத்திரையில் காணும்போது என்னையுமறியாமல் என் விழிகள் குளமாகி கரையைத்தாண்டி ஓடும் வெள்ளமென என் விழித்திரைகளை மீறி வழியும் கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்த ஏனோ என்னால் இயலவில்லை.இவை ஒருபுறமிருக்க மக்கள் வேதனையில் வாடும் தருணத்தில் ஒன்றுபட்டு மக்களின் துயரை களைய கடமைப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இங்கே வேறுபட்டு நிற்பது வேதனையான விஷயம்.தமிழகம் காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசிடம் மாண்புமிகு தமிழக முதல்வர் ரூ13000 கோடி நிதிஉதவி கேட்க ரூ1000 கோடி மட்டுமே நிதிஉதவி கிட்டியது.இதைக்கொண்டு பாதிக்கபட்டோர்களுக்கு பல இடைஞ்சல்களுக்கு மத்தியில் தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதை பாராட்டியே தீரவெண்டும். முதல்வர் சட்டசபையில் பேசும்போது தமிழக அரசிற்கு நற்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் மத்திய அரசு நிதிவழங்க தடைசெய்வதாக எதிர்கட்சி மீது குற்றம் சுமர்த்தியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தமிழக அரசே நிவாரணம் வழங்கும் என்றும் கூறியுள்ளார்கள்.மேலும் உழவர் பாதுகாப்பு திட்டம்,கரும்பிற்கு டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ1000/-,போன்ற அறிவிப்புகளையும் மாண்புமிகு தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்கள்.இவைகளெல்லாம் வரும் தேர்தலை மனதில் வைத்து கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன.கரும்பு டன்னுக்கு ரூ1000/- என இப்போதய எதிர்கட்சி ஆளும் கட்சியாக சென்றமுறை பதவியில் இருந்தபோதும் அறிவிப்பு வெளியிடப்பட்டது நினைவிற்கு வருகிறது.இது குறித்து விவசாயிகள் நம்பிக்கையோடு இருந்தபோது 10% சத சர்க்கரை கட்டுமானத்திற்குதான் இந்தவிலை என பின்னரே விவசாயிகள் அறிந்து ஏமாற்றமடைந்ததும் உண்மையே.ஏனெனில் 10% சத சர்க்கரை கட்டுமானம் ஓரிரு ஆலைகளில் மட்டுமே கிடைக்கும்.அந்த அறிவிப்பால் 1% சத வீத கரும்புவிவசாயிகளாவது அப்போது பயனடைந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.இப்போதய அறிவிப்பிலும் எனக்கு அந்த சந்தேகம் தோன்றியது.ஆனால் முதல்வர் அவர்கள் தனியார் ஆலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களும் தமிழக அரசு அறிவிக்கும் விலையை அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதென தெரிவதால் நிச்சயம் 100 %சத கரும்பு விவசாயிகளுக்கும் இந்த விலை கிடைக்கும் என உறுதியாய் தெரிகிறது.மேலும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கோரிக்கைகள் உடனுக்குடன் பெற்று பரிசீலிக்கப்பட்டு உதவிகள் விரைவில் வழங்கப்பட்டு,எங்கள் கிராமத்திலே கூட பலர் பயன்பெற்றிருப்பதை கண்கூடாக காண்பதில் விவசாயி என்கின்ற வகையில் மகிழ்வடைகிறேன். வேதனையில் உருவான விவசாயிகளின் மனப்புண்ணிற்கு இவை மருந்தாகுமென்பதில் ஒருவகையில் மனநிறைவே என்றாலும் தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான விவசாயிகள் வரலாறு காணாத பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் இழப்பை ஒரளவிற்காவது ஈடு செய்ய இந்த வருடம் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து பயிர்கடன்களையும் மத்திய அரசே ஈடுசெய்யவேண்டுமென்னும் விவசாயிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமே.தமிழகத்தில் உள்ள அனைத்து 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கூட்டணியை வெற்றி பெற வைத்து,அதற்கு கூட்டணி ஆட்சி அமையபெற்றுள்ள மைய அரசில் முக்கிய இடம் கிடைக்க காரணமான தமிழக மக்களின் வேதனையான இந்த தருணத்தில் விடுக்கப்படும் இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்றிதரும் பொறுப்பு இந்த கட்சிகளுக்கு உண்டு என்றும், நிச்சயம் நிறைவேற்றிதருவார்கள் எனநம்பிக்கையுடனும் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.