ஞாயிறு, செப்டம்பர் 17, 2006

கடன் தள்ளுபடி-ஆதரவு-விளக்கம்

சென்ற எனது கடன் தள்ளுபடி குறித்த பதிவுக்கு பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை வெளியிட்ட திரு.டோண்டு சார் அவர்களுக்கும், என்னார் சாருக்கும் மிக்க நன்றி. கவர்ச்சியும் பரபரப்பாகவும் பேசப்பட்ட “கடன் தள்ளுபடி” என்ற செய்திகளில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் இந்த நாட்டின் மற்ற நிகழ்வுகளோடு இவ்விஷயத்தை ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயம் உண்மை தெளிவாகும் என்பது என் கருத்து.

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் துறையும்,அதை போலவே விவசாயமும் மிக முக்கியமானது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை.ஆனால் தொழில் துறைக்கு கிடைக்கும் அரசின் சலுகைகளும்,உதவிகளும்,ஆதரவும் உண்மையில் விவசாயத்துறைக்கு கிட்டுகிறதா?ஆம் எனில் ஏன் இத்துறையின் வளர்ச்சி இறங்குமுகமாகி சரிந்துவிட்டது?தொழில் தொடங்க சலுகைகளை அள்ளிவீசி ரத்தின கம்பளம் விரித்து கூவி கூவி அழைக்கும் இத்தேசத்தில் விவசாயதுறையில் மட்டும் முதலீடு வற்றிப்போக காரணம் என்ன?

ஒரு தொலைக்காட்சி சேனலோ,ஒரு கார் தொழிற்சாலையோ, ஒரு செல்போன் நிறுவனமோ தொடங்கும் நடைமுறை கூட எளிதாகிபோன இத்தேசத்தில் ஒரு விவசாயிக்கு புதிய மின் இணைப்பு கிட்ட பல ஆண்டுகள் காத்திருந்தும் கிட்டாத நிலை. அது மட்டுமா தான் பெற்ற நிலத்தின் பட்டாவை கூட அத்தனை எளிதாக மாற்றிபெற முடியாத நிலைதான்.பழுதடைந்த மின்மாற்றியை சரிசெய்ய மாதகணக்காகும் நிலை.ஒரு மாதம் தண்ணீர் இல்லையெனில் பயிர்கள் கருகிவிடும் என்பது யாருக்கும் தெரியாதா?பாதிக்கபட்ட விவசாயி யாரிடம் சொல்லி அழுவது? அடிப்படை விஷயங்களே இப்படியெனில் மற்றவற்றை பற்றி என்ன சொல்ல?

58 ஆண்டுகளாக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் அதனால் எந்த பலனும் இல்லை?திட்டங்களுக்கு ஒதுக்கிய பணம் உரியவற்றுக்கு போய் சேரும் போது 15% மாக சுருங்கி விடுகிறது என மறைந்த முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி கூறினார்.இத்தகைய போக்கு தடுக்கபட வேண்டும்.இது நமது நாட்டின் நிதியமைச்சர் சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் தெரிவித்த கருத்து.

அப்படியெனில் ஆண்டுதோறும் ஒதுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் (நம் வரிப்பணம்) எங்கே சென்றது?யாரிடம் கேட்பது?இது நம் வரிப்பணம் இல்லையா?அருமையான ஒரு கதை சொன்னீர்கள் என்னார் சார். இப்பொழுது சொல்லுங்கள் போட்டி போட்டுக்கொண்டு பிச்சையிட்டு அதை லஞ்ச,ஊழல் பெருச்சாளிகள் கொள்ளையிட வழி செய்து இந்த நாட்டின் நிதி என்னும் அரிசிமூட்டை காணாமல் போக செய்த கொடுமைக்கு எது காரணம்?விவசாயிகளா?

சரி ஒரு பேச்சுக்கு இந்த கடன் தள்ளுபடி தொகை ரூ 6800 கோடியை ஏதோ ஒரு திட்ட செலவுக்கு அரசாங்கம் செலவு செய்கிறது என்று வைத்துக்கொண்டாலும் உண்மையில் அதில் 5-ல் 1-பங்கு கூட போய்சேருவதில்லை என்ற நிலையில் இத்தொகை முழுவதும் ஒரு பைசா கூட வீணாகாமல் விவசாயிக்கு போய் சேரும் என்பது உண்மையில் நல்ல விஷயம் இல்லையா? நம் வரிப்பணம் குறித்து நாம் கவலைபடுவது உண்மையெனில் நாம் முதலில் எதிர்க்க வேண்டியது எதை?கொள்ளையிட்டு கூறு போடும் கூட்டத்தையா அல்லது விவசாயிகளுக்கான உதவியையா?

விதர்பாவில் சென்ற வியாழன் அன்று மேலும் இரு விவசாயிகள் தற்கொலை.பிரதமர் இங்கு வருகைதந்த ஜூலை 1-ம் தேதிக்கு பின் இதுவரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 253.பிரதமர் அறிவித்த உதவிகள் இன்னும் உரியவர்களுக்கு சென்று சேரவில்லை.-செய்தி. இந்த நாட்டின் உயர்ந்த பதவி வகிக்கும் பிரதமரின் வருகைக்குபின்னும் அங்கு ஒரு மாற்றமும் நிகழவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமில்லையா?இறந்தது நம் சகோதரனாக இருந்தால் நாம் வேதனைபட மாட்டோமா?உடன் பிறவாவிட்டாலும் அவர்களும் நம் சகோதரர்கள் தானே.முதற்கண் நீங்கள் கண்டிக்கவேண்டியது இதை தடுக்க தவறிய அரசாங்கத்தை அல்லவா?

இன்றைய அரசியல்வாதிகளின் பெரும்பாலான செயல்பாடுகள் நீங்கள் கூறுவது போல ஓட்டுவாங்கும் தந்திரநடவடிக்கைதான் என்பதில் வியப்பேதும் இல்லையே.நான் கூட கடன் தள்ளுபடி குறித்து யோசிக்கும்போது இதில் முதல்வர் கலைஞர், ஒருவருக்கு அதிகபட்சம் இவ்வளவுதான் என்று ஒரு அளவுகோலை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணினேன்.ஒருவேளை தேவையற்ற அரசியல் விமர்சனங்களை தவிர்க்க அவர் இதனை தவிர்த்திருக்கலாம்.எது எப்படியோ அரசாங்கத்தின் உதவி 100% ஒரு சமுதாயத்தை அடையும் நடவடிக்கை, அவ்விவசாய சமுதாயத்தின் தற்கொலைகள் தடுக்கபடாதவரை, விவசாயம் லாபகரமான தொழில் என்பது உறுதிசெய்யப்படாதவரை,அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை உள்ளன்போடு தீர்க்காதவரை எதிர்க்கபடவேண்டிய ஒன்றல்ல.

ஒருவேளை இக்கனவு நனவாகும் காலகட்டத்தில் வேண்டுமானால் உங்களின் கருத்துக்கள் மிக்க பொருத்தமாய் இருக்குமேயன்றி இன்றைய காலத்திற்கு அல்ல என்பது எனது கருத்து.அத்தகைய காலம் விரைவில் கனிந்துவர உங்களின் பதிவுகள் உதவினால் மிக்க உதவியாய் இருக்கும்.
அன்புடன்
ஸ்ரீ

ஞாயிறு, செப்டம்பர் 10, 2006

கடன் தள்ளுபடி-எதிர்ப்பும் -உண்மை நிலையும்

விவசாயிகள் கடன் தள்ளுபடி தேவையா- இது போன்ற காரணிகள் நாட்டையே மறைந்துபோக செய்யும்-முன்னால் மந்திரியும் தள்ளுபடி பெற்றார்-இது தேவையா-ஓட்டுக்காகதான் இத்தகைய சலுகைகள்-இது நம் வரிப்பணம் -என்ற பல கேள்விகள் இந்த வலையுலகில்.

என்னை பொறுத்தவரை விவசாயம், விவசாயிகளின் இன்றைய நிலைமை,அவர்களின் பிரச்னைகள்,தற்கொலைகள்,கிராமங்கள்,அவற்றின் இன்றைய நிலை,அரசாங்க கொள்கைகள் இவற்றை பற்றிய விஷயங்கள் சரியாக புரிந்துகொள்ளபடாமையே மேற்கண்ட கேள்விகளுக்கான காரணங்களாய் கருதுகிறேன்.

கடன் தள்ளுபடி என்பது கவர்ச்சியான வார்த்தையே அன்றி உண்மையில் வங்கிகள் தன்னால் வழங்கப்பட்ட கடனை விவசாயிகளிடமிருந்து திரும்ப பெறுவதை விடுத்து அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதே உண்மை.இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் விவசாயிகளூக்கு அளித்த ஒரு நிதிச்சலுகை.விவசாயிகளுக்கு தன் வாழ்நாளில் அபூர்வமாக கிடைக்கும் போனஸ் தொகை.

ஏன் இத்தகைய நிதிச்சலுகைகளை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்?இக்கேள்விக்கான மிக முக்கியமான பதில்.

1.விவசாயி தன் விளைபொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை.
2.உற்பத்தி செலவு அதிகம் பிடிக்கும் இன்றைய நவீன விவசாயம்,இருந்தும் நிலையான விளைச்சலுக்கு நிரந்தரமற்ற நிலை.
3.நிலையான வருமானம் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லாத நிலை.
4.இயற்கை ஏற்படுத்தும் இழப்புகளும்,அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களும் இல்லாமை.
5.அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் விளைபொருள் உற்பத்தி செலவுக்கும் இடையே மிகுந்த ஏற்றத்தாழ்வுகள்.
6.விளைபொருளை விற்க சிறந்த வாய்ப்புகள் இல்லாமை.
7.விளைபொருளை விற்றும் அதற்கான பணம் விவசாயிக்கு கிடைப்பதில் காலதாமதம்.
8.விவசாய விளைபொருளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வாய்ப்பிருந்தும் இறக்குமதி வரி முற்றிலும் இல்லாமலே கூட இறக்குமதி செய்ய அனுமதிக்கும் தவறான கொள்கை.

இவை போன்ற காரணங்களால் விவசாயம் நஷ்டப்பட்டு போய்விடும் நிலையில் அரசாங்கத்தின் இதுபோன்ற உதவிகளை எதிர்பார்த்து கிடைக்காத சூழலில் தற்கொலைக்கும் துணிந்துவிடும் கொடுமை.(உதாரணம்-விதர்பா).

உண்மையில் இத்தகைய நிதிஉதவிகளை விவசாயிகள் மனப்பூர்வமாக விரும்புகிறார்களா?

நிச்சயம் இல்லை.

ஆனால் இத்தகைய நிலைக்கு அரசாங்கமே விவசாயிகளை தள்ளி விடுகிறது .உண்மையில், பொருளாதார சீர்திருத்தம் என்ற சுனாமி புரட்டிபோட்ட பின் தன் இனிமையான வாழ்க்கையை இழந்து அரசின் ஆதரவு தேடி நிவாரணமுகாமில் நிர்கதியாய் நிற்கும் நிலைமைதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை.

1அரசாங்கம் பன்னாட்டு,உள்நாட்டு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க நிலம்,மின்கட்டண சலுகை,வரிசலுகை இவை போன்ற நிதிசலுகைகளை பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வழங்குவது.

2.அரசாங்கம் மாதாமாதம் சம்பளம் அளித்தாலும் தனது அரசு ஊழியர்கள் நன்மை பெற ஆண்டுதோறும் கோடிகணக்கான ரூபாய் போனசாக நிதிஉதவி அளிப்பது.

3.செல்போன் கம்பெனிகள் அரசுக்கு செலுத்தவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் கட்டணங்களை அரசாங்கமே தள்ளுபடி செய்வது.

4.வங்கிகள் வாரா கடன் என்று கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்வது

5.இல்லாத கம்பெனிக்கும்,சினிமா எடுக்கவும் கோடி கோடியாய் கடன் கொடுத்து ஒரு வங்கியே திவாலாகும் நிலையில் (விவசாயிக்கு கடன் கொடுத்தா திவாலானது?) அதற்கு அரசாங்கமே பல்லாயிரம் கோடி நிதி உதவி அளிப்பது.

6.சமையல் எரிவாயுவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மானியம் அளிப்பது.(இதை பயன் படுத்தும் அனைவரும் இந்த மானியதொகையை ஏற்றுக்கொள்ளும் வசதி இல்லாதவர்களா?கோடீஸ்வரராய் இருந்தாலும் இந்த சலுகையை அனுபவிக்கவில்லையா?)

7.உயர் கல்விக்கு கோடிக்கணக்கான ரூபாய் மானியம் அளிப்பது-இக்கல்வி பயில்வோர் கட்டணம் செலுத்த முடியாத ஏழைகளா?

இவையெல்லாம் கூட மக்களின் வரிப்பணம்தான்.இத்தனை சலுகைகள் அளித்தும் காணாமல் போகாத இந்தியா விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதாலா காணாமல் போய்விடும்?

சுமார் 25 வருடங்களுக்கு முன் 2 பைசா மின்கட்டண சலுகை வேண்டி போராடிய விவசாயிகளை சுட்டுதள்ளிய அரசு இன்று விவசாயிகளுக்கு இந்த நிதி சலுகையை வழங்கியதென்றால் விவசாயிகளின் நிலைமையை உணர்ந்துதானே?விதர்பா நிலைமை தமிழகத்துக்கு வரகூடாது என்ற எச்சரிக்கை நடவடிக்கைதானே.

தினம் தினம் தொடரும் விவசாய தற்கொலைகள் நிகழும் இன்றைய நிலையிலும் விவசாயிகளுக்கான நிதிஉதவிகளை குறை கூறுவது வருத்தபட செய்கிறது.கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கிய இலங்கைவேந்தன் இன்று போய் நாளை வா என்றதும் தூங்கி எழுந்து மறுநாள் போருக்கு வருகிறான்.ஆனால் கடன் வாங்கி கட்ட வழியற்ற எனது விவசாயியோ இந்த நிலைமை எனக்கு வந்துவிட்டதே என்று கலங்கி,கலங்கி நிரந்தர உறக்கத்தை தானே வரவழைத்துக்கொள்ளும் கொடுமை கண்முன்னே நிகழும் நிலையில் இழப்பதற்கு ஒன்றுமில்லாமல் தன் உயிரையும் இழக்க துணிந்த விவசாய சமுதாயத்துக்கு கிடைக்கும் எந்த உதவியையும் குறை கூறுவது நல்ல பண்புடையோர் செயலா?