வியாழன், ஏப்ரல் 06, 2017

விழிமின் எழுமின்

பல வருடங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்ற விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நம் தமிழ்நாட்டிலும் நடைபெறும் அவலத்தை கண்டு வேதனைப்படுகிறேன்.

ஆனால் விவசாயிகளின் வேதனை கூக்குரல்,போராட்டங்களாக தொடர்வதும்,இதற்கு பொதுமக்கள்,மாணவர்கள்,குறிப்பாக திரையுலக கலைஞர்கள் பேராதரவு அளிப்பதும் பாராட்டுக்குரியது.

விவசாயிகளின் கடன்   தள்ளுபடி கோரிக்கை ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே.இதற்கே ரிசர்வ் வங்கி ஆளுனர் எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது.

விவசாயிகளின் அடிப்படை பிரச்னை எதுவென ஆராய்ந்து பார்த்தால் முதன்மையானது விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை இல்லை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

எனவே அனைத்து விளைபொருளுக்கும் அரசாங்கம் இருமடங்கு விலையை நிர்ணயிக்கவேண்டும் என்பதே என் கருத்து.

அடுத்து அரசாங்கம் எந்த விளைபொருள் உற்பத்தி குறைந்தாலும் எதை பற்றியும் சிறிதும் சிந்திக்காமல் உடனடியாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது முட்டாள்தனமானது.
இப்பொழுதுகூட மத்திய அரசு சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

கரும்பு விவசாயிகள் கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் கரும்பு பயிரிட விரும்பவில்லை.அதனால் சர்க்கரை உற்பத்தி குறைந்துவிட்டது.மத்திய அரசு கரும்பு விவசாயிகளை தக்க வைக்க வழி தேடாமல் மாற்றுவழி தேடுவது அநியாயமானது.

விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமேயானால் நமது விவசாயிகள் இந்த உலகுக்கே உணவளிப்பார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.

எக்காரணம் முன்னிட்டும் விவசாயவிளைபொருட்கள் இறக்குமதி கூடவே கூடாது என்பதே என் கருத்து.

இவற்றை பற்றியெல்லாம் அரசாங்கங்கள் சிந்திக்க தவறினால் விவசாயிகளின் தற்கொலைகளும்,கடன் தள்ளுபடி கோரிக்கைகளும் தொடர்கதைகளாகும்.நாடு மிகப்பெரிய விவசாயிகளின் புரட்சியை சந்திக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே என் எண்ணம்.

புதன், ஜூலை 01, 2015

டிஜிட்டல் இந்தியா-பிரதமரின் கனவுத்திட்டம்

இன்றுமாண்புமிகு  பாரத பிரதமர் மோடி தன் அரசின் கனவுத்திட்டமான ’டிஜிட்டல் இந்தியா’திட்டத்தை துவக்கிவைத்தார்.இது நிச்சயம் ஒரு டிஜிட்டல் புரட்சியை இந்தியாவில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏராளமான பயன்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.குக்கிராமங்களுக்கும் அதிவேக இணைய இணைப்பு,மாணவர்களுக்கு பாடங்களை டிஜிட்டல் மூலம் வழங்குதல்,அரசு சேவைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக வழங்குதல்,அனைத்திற்கும் மேலாக டிஜிட்டல் லாக்கர் மூலம் பொதுமக்களுக்கு அவர்களின் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்து தேவையான போது அப்படியே அதனை பயன்படுத்திக்கொள்ளும் வசதி போன்ற எண்ணற்ற வசதிகள் அளிக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் எனவும் தெரிகிறது.நிச்சயம் இது போன்ற திட்டங்களை அனைவரும் பாராட்ட வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த பாடுபடும் பிரதமருக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிப்போம்.


திங்கள், ஜூன் 15, 2015

’வெற்றி’ச் செய்தி

இந்த மாதம் என் மகனின் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கப்படவேண்டியிருந்தது.ஆன் - லைன் மூலம் புதுப்பிக்கலாம் என ஓரளவு தெரிந்திருந்தாலும் அரசு சேவைகள் ஆன் - லைன் மூலம் பெறுவதில் பல இன்னல்கள் இருப்பதையும் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

 இன்று எப்படியும் ஆன் -லைனில் பதிவை புதுப்பித்து விடுவோம் என நினைத்து  வேலைவாய்ப்பு இணையதளத்தில் நுழைய சற்றே சிரமப்பட்டாலும் வெற்றிகரமாக சுமார் 10 நிமிடத்திற்குள் பதிவை புதுப்பித்து பிரிண்ட் அவுட்- டும் எடுத்து முடித்தேன்.

சுமார் 30 வருடங்களுக்கு முன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கு பட்ட சிரமங்களோடு ஒப்பிடும் போது இப்பொழுது மிக மிக சிறந்த முன்னேற்றம் ஏற்பட காரணமான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை அனுபவிக்கும் இந்த தலைமுறையினர் கொடுத்துவைத்தவர்கள்தான்.

இந்த வளர்ச்சியை சரியான முறையில் பொதுமக்களுக்கு கொண்டுசேர்க்கும் அரசுக்கும்,சிறந்த சேவை அளிக்கும் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும் என் நன்றியும் பாராட்டுக்களும்..

ஞாயிறு, ஜூன் 14, 2015

’தலை’யானபிரச்னை

இன்று பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது பற்றி ,
மாண்புமிகு உயர்நீதிமன்றம் தலைகவசம் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளது.விபத்தின்போது தலைக்கவசம் ஓட்டுனரை விபத்திலிருந்து பாதுகாக்கிறது என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் உயிரை பாதுகாக்கவேண்டும் என்பதைபொறுத்து இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டியதே.

ஆனால் என்னுள் எழும் சில  கேள்விகள்.

1)மது அருந்துவது உடல் நலத்துக்கு தீங்கானது உண்மையெனில் ஏன் அரசே
” டாஸ்மாக்” திறந்து பொதுமக்களுக்கு தீங்கான விஷயத்தை அளிக்க வேண்டும்.
2)இருசக்கர வாகனத்தில் இருவருக்குமேல் செல்லக்கூடாது.சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் 55 பேர் பயணம் செய்ய கூடிய பேரூந்தில்  அதற்கு மேலும் பயணம் செய்வது நாம் தினசரி பார்க்கும் நிகழ்வுதானே? இது ஆபத்தில்லையா?

பொதுவாக விபத்து நிகழும் காரணிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினாலே பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும். அரசு இவற்றிக்குதான் ’தலைகவச’த்தை விட முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதே என் கருத்து.அத்தகைய காரணிகளில் முக்கியமானவைகள்,

1)நல்ல பயணத்துக்கு முக்கியமானது சாலைகளே, பயணிக்க லாயக்கற்ற பழுதடைந்த சாலைகளை உடனுக்குடன் சீர்செய்வது.

2) சாலைகளில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது ,ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது,கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது,சாலை விதிகளைபற்றி கவலைப்படாது வாகனம் ஓட்டுவது போன்றவற்றை கடுமையான சட்டங்கள் மூலம் முழுமையாக தடுத்தாலே விபத்துக்கள் நிச்சயம் தவிர்க்கப்படும்.

3)அனைத்திற்கும் மேலாக குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கடுமையான குற்றமாக்கி தடுத்து விட்டாலே பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுவிடும்.
 இவைகள் நிறைவேறும் காலம் கனியும் போது ’தலை’க்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடுமல்லவா?


திங்கள், மே 11, 2015

பாராட்டும்,வேண்டுகோளும்

கிட்டத்தட்ட170 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க சர்க்கரை ஆலையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை.உண்மையில் இன்றளவும் சிறந்த நிர்வாகத்தை கொண்டுள்ளது.

 விவசாயிகளுக்கு கரும்பு பயிருக்கு மட்டுமே ஒரு நிலையான விலை உள்ளது.மத்திய அரசு கரும்பிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆண்டுதோறும் அறிவிக்கும். மேலும் அத்துடன் சேர்த்து சில மாநிலங்கள்  கூடுதல் விலையை அறிவிக்கும். இவ்வருடத்திற்கு இதுதான் கரும்புக்கான விலை என்பது முன்னமேயே விவசாயிகளுக்கு கரும்பு ஆலைக்கு ஏற்றவாறு தெரிந்துவிடும்.கரும்பு விவசாயிகளுக்கு இதுதான் ஒரு சிறப்பான விஷயம்.

இந்தியாவில்  பல்வேறு மாநிலங்களில் சுமார் 17000 கோடி ரூபாயை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

 இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையை பொறுத்தவரை வெட்டு உத்தரவில்  சிறு, சிறு சிரமங்கள் இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை சப்ளை செய்த கரும்பிற்கு உரிய விலையை சுமார் 15- தினங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தி விடும்.இதுதான் இந்த ஆலையின் நீண்ட கால சிறப்பம்சம்.இதன் காரணமாகவே விவசாயிகள் மற்ற பயிரை விட கரும்பு பயிரிட விருப்பம் கொண்டிருப்பார்கள்.சுற்று வட்டார  விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஆலை உறுதுணையாக உள்ளது என்றால் அது மிக்க பொருத்தமானதே.

ஆனால் இந்த சிறப்பான விஷயத்தில் ஒரு கரும் புள்ளியாக இரு ஆண்டுகளாக மத்திய அரசு கரும்பிற்கு அறிவித்த விலையை மட்டும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.மாநில அரசு அறிவித்த கூடுதல் விலையை வழங்க கோரி விவசாயிகள் ,அரசியல் கட்சிகள்,பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பல்வேறு காரணங்களை காட்டி  இன்னும் வழங்காமல் உள்ளது.இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்கள்.

பாரம்பரியமும் பெருமையும்  மிக்க சர்க்கரை ஆலையான இ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை இதுநாள் வரை கொண்டுள்ள பெருமைக்கு தக்கவாறு
சிரமங்கள் இருந்தாலும் கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை வழங்கி விவசாயிகள் இந்த ஆலையின் மீது நீண்ட காலமாக கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.



விடுதலை, விடுதலை, விடுதலை

கர்னாடக உயர்நீதிமன்றத்தில் சற்று முன் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஏற்கெனவே கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டது.ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.மீண்டும் தமிழக முதல்வராகிரார்  ஜெயலலிதா.

வியாழன், மே 07, 2015

ஆன் - லைன் ஷாப்பிங் -அனுபவம். அமேசானுக்கு பாராட்டு

ஆன் -லைன் ஷாப்பிங் -பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் ,ஆர்வமுடன் சில மாதங்களாக இதில் சில பொருட்கள் வாங்கியதில் எனக்கு கிட்டிய அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

நான் எனக்கு முதலில் நகரங்களை தவிர்த்து கிராமத்திற்கு பொருட்கள் ஆன் லைன் மூலம் பெறமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது.அமேசான்,  ஸ்னாப்டீல்,   ரிடிஃப், இன்பிபீம்,  பேஷனோரா, ஜெ -பியர்ல்ஸ்,போன்ற ஷாப்பிங் தளங்களில் பெரும்பாலும் அஞ்சல் துறையின் விரைவு தபால் வசதி மூலம்  இத்தகைய வசதி கிட்டியது.

குறைந்த விலையுள்ள பொருட்களை எந்த பிரச்னையும் இன்றி வாங்க முடிந்தது.இணையத்தள பண பரிமாற்றத்தின் மூலம்தான் இத்தளங்களில் பொருட்கள் வாங்கினேன்.

இவற்றில் எனக்கு  அமேசான் தளத்தின் சேவை மிக சிறப்பாக இருந்தது. கிராமத்தில் இருந்தாலும் கிட்டத்தட்ட 4- நாட்களுக்குள் பொருட்கள் டெலிவரி கிடைத்தன.பெரிய அளவிளான பொருட்களை கிராமத்தில் பெற வசதி இல்லை என்ற குறையை தவிர,  இத் தளத்தில் பொருட்கள் ஆர்டர் செய்ய ஏதாவது பிரச்னை ஏற்படினும் சிறந்த வாடிக்கையாளர் சேவை மூலம் ஆன் லைன் மூலமே உதவிகள் கிட்டியது
.பணபரிமாற்றத்தின் போது ஏற்பட்ட பிரச்னையின் போதும்,ஆர்டரை கேன்சல் செய்தபோதும் என் வங்கிக்கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் திரும்ப கிடைத்தது.அமேசானுக்கு எனது பாராட்டுக்கள்.

வியாழன், ஏப்ரல் 30, 2015

மூட்டைப்பூச்சியா - கொளுத்து வீட்டை

விவசாயிகளுக்கு வங்கிகளில் பல்வகை கடன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.இதில் முக்கியமானவை நகைக்கடன், மற்றும் பயிர்க்கடன்.

இவற்றில் முதலில் 9% சத வட்டிவீதமாக நிர்ணயிக்கப்பட்டு பின் 2%சதம் அரசால் மானியமாகவும் பின்பு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழுங்காக கடனை திருப்பிசெலுத்தும் விவசாயிகளுக்கு மேலும் 3% சத வட்டி அரசால் மானியமாக வழங்கப்பட்டு இறுதியில் 4% சத வட்டி வீதத்தில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுவருகிறது.

பிரச்சினையே இங்குதான் ஆரம்பம். வங்கிகள் தங்களுக்கு நிர்ணயிக்கபட்ட விவசாய கடன் இலக்கை அடைய பெரும்பாலும் நகைகடன் கொடுத்து அந்த இலக்கை அடையவும் , மேலும் விவசாயிகள் தவிர மற்றவர்களுக்கும் இந்தவகையில் கடன் அளித்து இலக்கை அடைவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.மேலும் பல காரணங்களை காட்டி அரசாங்கம் அளிக்கும் வட்டி மானியத்தை விவசாயிகளுக்கு அளிக்காமல் எமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.இதனால் உண்மையான விவசாயிகளுக்கு கடனும், அரசின் பயனும் கிடைப்பதில்லை.

உண்மையான விவசாயிகளுக்கு தேவையான  கடன் தொகை,அரசாங்கம் அளிக்கும் வட்டிச்சலுகை விவசாயிகளுக்கு சரியாக சென்று சேர தேவையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு ரிசர்வ்வங்கி விவசாயிகளுக்கான கடன் வட்டியை 11% ஆக உயர்த்தி பிரச்சினையை முடிக்க நடவடிக்கை எடுப்பது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும்  (--------)செயலாக உள்ளது.