ஞாயிறு, செப்டம்பர் 10, 2006

கடன் தள்ளுபடி-எதிர்ப்பும் -உண்மை நிலையும்

விவசாயிகள் கடன் தள்ளுபடி தேவையா- இது போன்ற காரணிகள் நாட்டையே மறைந்துபோக செய்யும்-முன்னால் மந்திரியும் தள்ளுபடி பெற்றார்-இது தேவையா-ஓட்டுக்காகதான் இத்தகைய சலுகைகள்-இது நம் வரிப்பணம் -என்ற பல கேள்விகள் இந்த வலையுலகில்.

என்னை பொறுத்தவரை விவசாயம், விவசாயிகளின் இன்றைய நிலைமை,அவர்களின் பிரச்னைகள்,தற்கொலைகள்,கிராமங்கள்,அவற்றின் இன்றைய நிலை,அரசாங்க கொள்கைகள் இவற்றை பற்றிய விஷயங்கள் சரியாக புரிந்துகொள்ளபடாமையே மேற்கண்ட கேள்விகளுக்கான காரணங்களாய் கருதுகிறேன்.

கடன் தள்ளுபடி என்பது கவர்ச்சியான வார்த்தையே அன்றி உண்மையில் வங்கிகள் தன்னால் வழங்கப்பட்ட கடனை விவசாயிகளிடமிருந்து திரும்ப பெறுவதை விடுத்து அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதே உண்மை.இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் விவசாயிகளூக்கு அளித்த ஒரு நிதிச்சலுகை.விவசாயிகளுக்கு தன் வாழ்நாளில் அபூர்வமாக கிடைக்கும் போனஸ் தொகை.

ஏன் இத்தகைய நிதிச்சலுகைகளை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்?இக்கேள்விக்கான மிக முக்கியமான பதில்.

1.விவசாயி தன் விளைபொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்யும் உரிமை இல்லை.
2.உற்பத்தி செலவு அதிகம் பிடிக்கும் இன்றைய நவீன விவசாயம்,இருந்தும் நிலையான விளைச்சலுக்கு நிரந்தரமற்ற நிலை.
3.நிலையான வருமானம் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லாத நிலை.
4.இயற்கை ஏற்படுத்தும் இழப்புகளும்,அவற்றை எதிர்கொள்ளும் திட்டங்களும் இல்லாமை.
5.அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் விளைபொருள் உற்பத்தி செலவுக்கும் இடையே மிகுந்த ஏற்றத்தாழ்வுகள்.
6.விளைபொருளை விற்க சிறந்த வாய்ப்புகள் இல்லாமை.
7.விளைபொருளை விற்றும் அதற்கான பணம் விவசாயிக்கு கிடைப்பதில் காலதாமதம்.
8.விவசாய விளைபொருளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வாய்ப்பிருந்தும் இறக்குமதி வரி முற்றிலும் இல்லாமலே கூட இறக்குமதி செய்ய அனுமதிக்கும் தவறான கொள்கை.

இவை போன்ற காரணங்களால் விவசாயம் நஷ்டப்பட்டு போய்விடும் நிலையில் அரசாங்கத்தின் இதுபோன்ற உதவிகளை எதிர்பார்த்து கிடைக்காத சூழலில் தற்கொலைக்கும் துணிந்துவிடும் கொடுமை.(உதாரணம்-விதர்பா).

உண்மையில் இத்தகைய நிதிஉதவிகளை விவசாயிகள் மனப்பூர்வமாக விரும்புகிறார்களா?

நிச்சயம் இல்லை.

ஆனால் இத்தகைய நிலைக்கு அரசாங்கமே விவசாயிகளை தள்ளி விடுகிறது .உண்மையில், பொருளாதார சீர்திருத்தம் என்ற சுனாமி புரட்டிபோட்ட பின் தன் இனிமையான வாழ்க்கையை இழந்து அரசின் ஆதரவு தேடி நிவாரணமுகாமில் நிர்கதியாய் நிற்கும் நிலைமைதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை.

1அரசாங்கம் பன்னாட்டு,உள்நாட்டு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க நிலம்,மின்கட்டண சலுகை,வரிசலுகை இவை போன்ற நிதிசலுகைகளை பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வழங்குவது.

2.அரசாங்கம் மாதாமாதம் சம்பளம் அளித்தாலும் தனது அரசு ஊழியர்கள் நன்மை பெற ஆண்டுதோறும் கோடிகணக்கான ரூபாய் போனசாக நிதிஉதவி அளிப்பது.

3.செல்போன் கம்பெனிகள் அரசுக்கு செலுத்தவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் கட்டணங்களை அரசாங்கமே தள்ளுபடி செய்வது.

4.வங்கிகள் வாரா கடன் என்று கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்வது

5.இல்லாத கம்பெனிக்கும்,சினிமா எடுக்கவும் கோடி கோடியாய் கடன் கொடுத்து ஒரு வங்கியே திவாலாகும் நிலையில் (விவசாயிக்கு கடன் கொடுத்தா திவாலானது?) அதற்கு அரசாங்கமே பல்லாயிரம் கோடி நிதி உதவி அளிப்பது.

6.சமையல் எரிவாயுவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மானியம் அளிப்பது.(இதை பயன் படுத்தும் அனைவரும் இந்த மானியதொகையை ஏற்றுக்கொள்ளும் வசதி இல்லாதவர்களா?கோடீஸ்வரராய் இருந்தாலும் இந்த சலுகையை அனுபவிக்கவில்லையா?)

7.உயர் கல்விக்கு கோடிக்கணக்கான ரூபாய் மானியம் அளிப்பது-இக்கல்வி பயில்வோர் கட்டணம் செலுத்த முடியாத ஏழைகளா?

இவையெல்லாம் கூட மக்களின் வரிப்பணம்தான்.இத்தனை சலுகைகள் அளித்தும் காணாமல் போகாத இந்தியா விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதாலா காணாமல் போய்விடும்?

சுமார் 25 வருடங்களுக்கு முன் 2 பைசா மின்கட்டண சலுகை வேண்டி போராடிய விவசாயிகளை சுட்டுதள்ளிய அரசு இன்று விவசாயிகளுக்கு இந்த நிதி சலுகையை வழங்கியதென்றால் விவசாயிகளின் நிலைமையை உணர்ந்துதானே?விதர்பா நிலைமை தமிழகத்துக்கு வரகூடாது என்ற எச்சரிக்கை நடவடிக்கைதானே.

தினம் தினம் தொடரும் விவசாய தற்கொலைகள் நிகழும் இன்றைய நிலையிலும் விவசாயிகளுக்கான நிதிஉதவிகளை குறை கூறுவது வருத்தபட செய்கிறது.கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கிய இலங்கைவேந்தன் இன்று போய் நாளை வா என்றதும் தூங்கி எழுந்து மறுநாள் போருக்கு வருகிறான்.ஆனால் கடன் வாங்கி கட்ட வழியற்ற எனது விவசாயியோ இந்த நிலைமை எனக்கு வந்துவிட்டதே என்று கலங்கி,கலங்கி நிரந்தர உறக்கத்தை தானே வரவழைத்துக்கொள்ளும் கொடுமை கண்முன்னே நிகழும் நிலையில் இழப்பதற்கு ஒன்றுமில்லாமல் தன் உயிரையும் இழக்க துணிந்த விவசாய சமுதாயத்துக்கு கிடைக்கும் எந்த உதவியையும் குறை கூறுவது நல்ல பண்புடையோர் செயலா?

10 கருத்துகள்:

மதுமிதா சொன்னது…

நன்றி ஸ்ரீ
ஒவ்வொரு முறையும் எழுத நினைத்து
எழுதாமல் விட்டது நன்று என்றே நினைக்கிறேன், இந்தப் பதிவு பார்த்தவுடன்.

விவசாயிகளை முதலில் உயிருள்ள மனிதராக மதிக்கட்டும்.

///
இவையெல்லாம் கூட மக்களின் வரிப்பணம்தான்.இத்தனை சலுகைகள் அளித்தும் காணாமல் போகாத இந்தியா விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதாலா காணாமல் போய்விடும்?
///

கோடிக்கணக்கான மற்ற கடன் தள்ளுபடியையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி மட்டுமே ஒயிட் காலர்களுக்குத் தவறாகப் படும்.

வயிற்றில் பால் வார்த்தீர்கள் இப்பதிவெழுதி. நன்றாக இருங்கள் ஸ்ரீ

dondu(#11168674346665545885) சொன்னது…

கடன் தள்ளுபடி என்பது இன்றியமையாத தருணங்களில் மிகவும் யோசித்துத் தரப்பட வேண்டியது.

முன்னாள் மந்திரிக்கும் அதை தந்துத்தான் தீர வேண்டுமா?

மூளையை நன்கு உபயோகித்து செய்ய வேண்டிய காரியத்தை ஓட்டு பிடிக்கும் தந்திரமாக ஆக்கியதுதான் ஆட்சேபணைக்குரியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் சொன்னது…

நாடெங்கிலும் உள்ள விவசாயிகள், சங்கங்களாக ஒன்று சேர்ந்து விளை பொருட்களுக்குக் கூட்டாக விலை தீர்மானிக்க வேண்டும்.

அரிசி விலை ஐம்பது ரூபாய் கிலோ என்று சந்தையில் விற்றால் என்ன ஆகி விடும்? மிக ஏழைகளுக்கு அரசு உதவி செய்வது போக, பெரும்பான்மையோர், தங்கம் வாங்கிக் குவிக்கும் நடுத்தர வர்க்கமும், பணத்தில் குளிக்கும் செல்வந்தர்களும் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் இன்றைய விலைக்கு நான்கு மடங்கு கொடுத்தாலும் தகும்.

இந்தச் சங்கங்கள் ஆண்டு தோறும் உற்பத்தி அளவை ஒழுங்கு படுத்த வேண்டும். (ஓபெக் நாடுகள் எண்ணெய் விலையை ஏற்றியது போல ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். ) பருவம் பொய்ப்பதாலோ வேறு காரணங்களாலோ இழப்பு ஏற்பட்டால் உறுப்பினர்களின் பங்களிப்பால் இயங்கும் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் இழப்புக்கு ஈடு கொடுக்கும் முறை இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஏற்கனவே இருக்கும் கட்சி அமைப்புகள் மூலம் அல்லது புதிதாக ஆரம்பிக்கும் ஒரு இயக்கம் மூலம் இதைச் செயல்படுத்திக் கொள்ளலாம். இன்றைய தகவல் தொழில் நுட்ப வசதிகள் மூலம் ஒருங்கிணைத்தலும் சேர்ந்து செயல்படுவதும் சாத்தியமாகலாம்.

சந்தைப் பொருளாதாரம் தோல்வி அடையும் புள்ளிகளில் இது மிக முக்கியமானது. இதற்கு சந்தைப் பொருளாதரத்திற்கு மாற்று வழியில்தான் தீர்வு கிடைக்கும்.

நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் என்று விவசாயிகள் சிந்திக்க வேண்டும்.

அன்புடன்,


மா சிவகுமார்

ENNAR சொன்னது…

ஸ்ரீகோபி
அரசாங்கம் கூட்டுறவு வங்கிகளில் கொடுத்த கடணைமட்டும் தான் தள்ளுபடி செய்துள்ளது.
மற்ற வங்கியின் விவசாய கடண்களை தள்ளுபடி செய்ததாகக் தெரியவில்லை.
ஏக்கருக்கு 3000 ரூபாய் வெள்ளத்தில் சேதமடைந்த நஞ்சை நிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏக்கர் சாகுபடி செய்ய 3000 முதல் 5000 வரை செலவாகும். விவசாயிக்கு 3000 கொடுத்த பின் வங்கிக் கடணை தள்ளுபடி செய்ய வேண்டியதில்லை. மேலும் 5 லட்சத்துக்கு மேலும் tractor மற்ற உபகரணங்கள் வாங்கிய கடணையும் தள்ளுபடி செய்தது தான் வேதணை யார் வீட்டு காசை இப்படி தான் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக வீணடிப்பது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு நிவாரணத்தொகை கொடுத்த பின் கடணை ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும் அந்த அம்மா அதைச் செய்தார்கள் நான் இதைச் செய்கிறேன் என்றால் என்னாவது.
பாசமலர் படம் என்று நிணைக்கிறேன் ஒரு பிச்சைக்காரன் வந்து பிச்சைக் கேட்பான் மாமியார் மருமகள் ஒருத்தி இல்லை என்பார் மற்றொருத்தி அவள் என்ன சொல்வது நான் போடுகிறேன் என கொஞ்சம் கொண்டு வந்து போடுவாள் அதைக் கண்ட மற்றொருத்தி அவள் இட்டதைவிட சற்று அதிகமாக இடுவாள் இப்படியே மூட்டை அரிசியையும் அவனிடம் போட்டுவிடுவார்கள்.
அந்த கதைதான் இந்த கடண் தள்ளுபடியும். இதை நான் வரவேற்க வில்லை. அது மட்டுமல்ல நகை வைத்த கடணையும் திரும்ப கொடுத்து எங்கள் கூட்டுறவு வங்கியில் மட்டும் 74 லட்சம் கடண் தள்ளுபடி.

ஸ்ரீ சொன்னது…

நன்றி,மதுமிதா.உண்மையில் நமது வரிப்பணம் பாழாக பல காரணங்கள் இருப்பினும் இதை மட்டும் அதுவும் மூத்த வலைபதிவாளர்கள் எதிர்த்து தெரிவித்த கருத்து எனக்கு வேதனையாகதான் இருந்தது.இதற்கு என்னைவிட விவசாயம் பற்றி சிறப்பாக பதிவிடும் அசுரனும்,சிவாவும் பதில் அளித்தால் மிக்க பொருத்தமாய் இருந்திருக்கும் என நினைத்தேன்.உண்மையில் இக்கருத்தை ஆதரித்து எழுத வேண்டிய நிலைக்கு விவசாயிகள் நிலைமை மோசமாகிபோய் விட்டதை எண்ணி வேதனை கொள்கிறேன்.நன்றி சிவா உங்களின் பரிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.விவசாயிகளை ஒன்றுபடுத்துவது எளிதான காரியமாக தெரியவில்லை இது மட்டில் நடந்துவிட்டால் பாதி வெற்றி கைகளில்.என்னை பொருத்த வரை விவசாயிகளின் பால் உண்மையான அன்பும்,பரிவும் ,ஆதரவும் கொண்ட ஒரு அரசியல் தலைவர் கிடைத்து விட்டால் அதுவே பெரிய வெற்றிதான்.

Machi சொன்னது…

சிரீ சரியாக சொன்னீர்கள். "உழுதவன் கணக்கு பார்த்தா ஒரு ஆலாக்கும் மிஞ்சாது" என்ற பழமொழி விவசாயியின் வாழ்வை நமக்கு சொல்லுது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தேவை, அது அவசியமும் கூட.

மா சிவகுமார் சொன்னது…

ஸ்ரீ,.

இந்த நிலை இப்படியே தொடர முடியாது. நீங்கள் சொல்வது போல அரசியல் தலைமையின் அசட்டைதான் இதன் முதற்காரணம். பன்னாட்டு நிறுவனங்களை மகிழ்விக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சரும், தொலைக்காட்சி வழங்கி பேரன் தொழிலைப் பெருக்க வேண்டும் என்று மாநில அரசும் நினைக்கும் நேரங்களை ஒதுக்கி விவசாயக் கேள்விக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அப்படி தலைவர்கள் தென்படாததுதான் கவலை அளிக்கிறது. ஒன்றுமில்லைதான் மக்கள் இயக்கம் தலைவன் ஒருவனை உருவாக்கிக் கொள்ளும்.

அன்புடன்,

மா சிவகுமார்

ஸ்ரீ சொன்னது…

நன்றி குறும்பன் சார்,சிவா சில நாட்களுக்கு முன் அரியானா மாநிலத்தில் ஒரு சிறு கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை உயிருடன் மீட்க ,மாவட்ட நிர்வாகம்,மாநில நிர்வாகம்,மாநில முதல்வர் ,ஆளுனர் ,ராணுவம்,சாதி மத பேதங்களை கடந்து ஆர்வத்துடன் பிரார்த்தனை செய்த மக்கள், இத்தனை சக்திகளும் ஒன்றுபட்டு போராடிய அதே ஒற்றுமை ,நோக்கம் அனைவருக்கும் இருக்குமானால் விவசாயிகள் தற்கொலைகள் நிச்சயம் சில நாட்களிலே தடுக்கபட்டுவிடும்.ஆனால் நடப்பதோ வேறு.கடந்த சனிக்கிழமை நடந்த இரு விவசாயிகளின் தற்கொலையோடு விதர்பாவில் பிரதமரின் வருகைக்குபின் இதுவரை 301 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.நாளுக்குநாள் இந்த எண்ணிக்கை கூடி வரும் நிலையிலும் அந்த மாநில ஆளுனர் சென்னையில் நடந்த தமிழ்திரை உலக பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்ததை எண்ணிபார்க்கிறேன்.

அசுரன் சொன்னது…

///ஒன்று சேர்ந்து விளை பொருட்களுக்குக் கூட்டாக விலை தீர்மானிக்க வேண்டும்.

அரிசி விலை ஐம்பது ரூபாய் கிலோ என்று சந்தையில் விற்றால் என்ன ஆகி விடும்? மிக ஏழைகளுக்கு அரசு உதவி செய்வது போக, பெரும்பான்மையோர், தங்கம் வாங்கிக் குவிக்கும் நடுத்தர வர்க்கமும், பணத்தில் குளிக்கும் செல்வந்தர்களும் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் இன்றைய விலைக்கு நான்கு மடங்கு கொடுத்தாலும் தகும்.

இந்தச் சங்கங்கள் ஆண்டு தோறும் உற்பத்தி அளவை ஒழுங்கு படுத்த வேண்டும். (ஓபெக் நாடுகள் எண்ணெய் விலையை ஏற்றியது போல ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். ) பருவம் பொய்ப்பதாலோ வேறு காரணங்களாலோ இழப்பு ஏற்பட்டால் உறுப்பினர்களின் பங்களிப்பால் இயங்கும் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் இழப்புக்கு ஈடு கொடுக்கும் முறை இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஏற்கனவே இருக்கும் கட்சி அமைப்புகள் மூலம் அல்லது புதிதாக ஆரம்பிக்கும் ஒரு இயக்கம் மூலம் இதைச் செயல்படுத்திக் கொள்ளலாம். இன்றைய தகவல் தொழில் நுட்ப வசதிகள் மூலம் ஒருங்கிணைத்தலும் சேர்ந்து செயல்படுவதும் சாத்தியமாகலாம்.

சந்தைப் பொருளாதாரம் தோல்வி அடையும் புள்ளிகளில் இது மிக முக்கியமானது. இதற்கு சந்தைப் பொருளாதரத்திற்கு மாற்று வழியில்தான் தீர்வு கிடைக்கும்.

நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் என்று விவசாயிகள் சிந்திக்க வேண்டும்.

அன்புடன்,


மா சிவகுமார் ///


மா. சிவக்குமாரின் இந்த கருத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப் போகிறேன். ஆயினும் இவற்றை செய்ய யார் இடைஞ்சலாக இருக்கிறார்?

மேலும் மா.சிவகுமார் ஒரு அம்சத்தை விட்டு விட்டார்.

விவாசாய் பொருட்களுக்கு இப்பொழுது நாம் கொடுக்கும் விலையே நேரடியாக அதன் உற்பத்தியாளர்களுக்கு போய்ச் சேரும் ஒரு சந்தை அமைப்பு இருந்தால் மிக நன்றாக வேலை செய்யும்.

அது இல்லை. மாறாக இடைத்தரகர்கள் கொள்ளையடித்தது போக மீதிதான் அவர்களுக்குப் போய் செருகிறது,. இதற்க்கு மிகச் சிற்ந்த உதாரணம் சமீபத்திய் கோதுமை இறக்குமதியும், கோதுமை கொள்முதல் மோசடியும், இதை பய்ன்படுத்தி லாபம் சேர்த்த தனியார் தரகு வர்க்க முதலாளிகளும், கோதுமை விலை ஏற்றமும்.

இரண்டாவது விசயம், விவசாய இடு பொருள் விலை சக்ட்டு மேனிக்கு ஏற்றி MNC க்களுக்கு இவர்கள் சேவை செய்கிறார்கள்.

மூன்றாவது மா.சிவகுமார் சொல்வது போல ஒருங்கிணைந்த ஒரு உற்பத்தி முறை விவசாயத்தில் வரவிடாமல் செய்வதன் மூலம் நவீனப்படுத்துதலை, முதலாளித்துவ உற்பத்தி முறைப் படுத்துவதை தடுக்கிறார்கள்.

இதையெல்லாம் விட மரபணு விதை, தண்ணீர் தனியார் மயம், SEZ என்று சகட்டு மேனிக்கு அடித்து விரட்டுகிறார்கள்...

நாம் நமது சுயச் சார்பை இழக்கும் காலம் வெகு அருகில் நெருங்கி விட்டது என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

ஸ்ரியின் இந்தக் கட்டுரைக்கு வாழ்த்துக்கள்

அசுரன்

ஸ்ரீ சொன்னது…

வாருங்கள் அசுரன்,ஊக்கம் அளிக்கும் உங்களின் வார்த்தைகளுக்கும் ,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

"நாம் நமது சுயச் சார்பை இழக்கும் காலம் வெகு அருகில் நெருங்கி விட்டது என்பதைத்தான் இவை காட்டுகின்றன".
உங்களின் இந்த வார்த்தைகள் இன்றைய நிகழ்வுகளை ,அவை ஏற்படுத்த உள்ள தாக்கங்களை தடுக்க வல்ல அபாய
எச்சரிக்கை மணியோசை.
அரசாங்கமும், விவசாயிகளும் எப்பொழுதுதான் விழித்துக்கொள்ள போகிறார்களோ?