ஞாயிறு, செப்டம்பர் 17, 2006

கடன் தள்ளுபடி-ஆதரவு-விளக்கம்

சென்ற எனது கடன் தள்ளுபடி குறித்த பதிவுக்கு பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை வெளியிட்ட திரு.டோண்டு சார் அவர்களுக்கும், என்னார் சாருக்கும் மிக்க நன்றி. கவர்ச்சியும் பரபரப்பாகவும் பேசப்பட்ட “கடன் தள்ளுபடி” என்ற செய்திகளில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் இந்த நாட்டின் மற்ற நிகழ்வுகளோடு இவ்விஷயத்தை ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயம் உண்மை தெளிவாகும் என்பது என் கருத்து.

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் துறையும்,அதை போலவே விவசாயமும் மிக முக்கியமானது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை.ஆனால் தொழில் துறைக்கு கிடைக்கும் அரசின் சலுகைகளும்,உதவிகளும்,ஆதரவும் உண்மையில் விவசாயத்துறைக்கு கிட்டுகிறதா?ஆம் எனில் ஏன் இத்துறையின் வளர்ச்சி இறங்குமுகமாகி சரிந்துவிட்டது?தொழில் தொடங்க சலுகைகளை அள்ளிவீசி ரத்தின கம்பளம் விரித்து கூவி கூவி அழைக்கும் இத்தேசத்தில் விவசாயதுறையில் மட்டும் முதலீடு வற்றிப்போக காரணம் என்ன?

ஒரு தொலைக்காட்சி சேனலோ,ஒரு கார் தொழிற்சாலையோ, ஒரு செல்போன் நிறுவனமோ தொடங்கும் நடைமுறை கூட எளிதாகிபோன இத்தேசத்தில் ஒரு விவசாயிக்கு புதிய மின் இணைப்பு கிட்ட பல ஆண்டுகள் காத்திருந்தும் கிட்டாத நிலை. அது மட்டுமா தான் பெற்ற நிலத்தின் பட்டாவை கூட அத்தனை எளிதாக மாற்றிபெற முடியாத நிலைதான்.பழுதடைந்த மின்மாற்றியை சரிசெய்ய மாதகணக்காகும் நிலை.ஒரு மாதம் தண்ணீர் இல்லையெனில் பயிர்கள் கருகிவிடும் என்பது யாருக்கும் தெரியாதா?பாதிக்கபட்ட விவசாயி யாரிடம் சொல்லி அழுவது? அடிப்படை விஷயங்களே இப்படியெனில் மற்றவற்றை பற்றி என்ன சொல்ல?

58 ஆண்டுகளாக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் அதனால் எந்த பலனும் இல்லை?திட்டங்களுக்கு ஒதுக்கிய பணம் உரியவற்றுக்கு போய் சேரும் போது 15% மாக சுருங்கி விடுகிறது என மறைந்த முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி கூறினார்.இத்தகைய போக்கு தடுக்கபட வேண்டும்.இது நமது நாட்டின் நிதியமைச்சர் சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் தெரிவித்த கருத்து.

அப்படியெனில் ஆண்டுதோறும் ஒதுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் (நம் வரிப்பணம்) எங்கே சென்றது?யாரிடம் கேட்பது?இது நம் வரிப்பணம் இல்லையா?அருமையான ஒரு கதை சொன்னீர்கள் என்னார் சார். இப்பொழுது சொல்லுங்கள் போட்டி போட்டுக்கொண்டு பிச்சையிட்டு அதை லஞ்ச,ஊழல் பெருச்சாளிகள் கொள்ளையிட வழி செய்து இந்த நாட்டின் நிதி என்னும் அரிசிமூட்டை காணாமல் போக செய்த கொடுமைக்கு எது காரணம்?விவசாயிகளா?

சரி ஒரு பேச்சுக்கு இந்த கடன் தள்ளுபடி தொகை ரூ 6800 கோடியை ஏதோ ஒரு திட்ட செலவுக்கு அரசாங்கம் செலவு செய்கிறது என்று வைத்துக்கொண்டாலும் உண்மையில் அதில் 5-ல் 1-பங்கு கூட போய்சேருவதில்லை என்ற நிலையில் இத்தொகை முழுவதும் ஒரு பைசா கூட வீணாகாமல் விவசாயிக்கு போய் சேரும் என்பது உண்மையில் நல்ல விஷயம் இல்லையா? நம் வரிப்பணம் குறித்து நாம் கவலைபடுவது உண்மையெனில் நாம் முதலில் எதிர்க்க வேண்டியது எதை?கொள்ளையிட்டு கூறு போடும் கூட்டத்தையா அல்லது விவசாயிகளுக்கான உதவியையா?

விதர்பாவில் சென்ற வியாழன் அன்று மேலும் இரு விவசாயிகள் தற்கொலை.பிரதமர் இங்கு வருகைதந்த ஜூலை 1-ம் தேதிக்கு பின் இதுவரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 253.பிரதமர் அறிவித்த உதவிகள் இன்னும் உரியவர்களுக்கு சென்று சேரவில்லை.-செய்தி. இந்த நாட்டின் உயர்ந்த பதவி வகிக்கும் பிரதமரின் வருகைக்குபின்னும் அங்கு ஒரு மாற்றமும் நிகழவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமில்லையா?இறந்தது நம் சகோதரனாக இருந்தால் நாம் வேதனைபட மாட்டோமா?உடன் பிறவாவிட்டாலும் அவர்களும் நம் சகோதரர்கள் தானே.முதற்கண் நீங்கள் கண்டிக்கவேண்டியது இதை தடுக்க தவறிய அரசாங்கத்தை அல்லவா?

இன்றைய அரசியல்வாதிகளின் பெரும்பாலான செயல்பாடுகள் நீங்கள் கூறுவது போல ஓட்டுவாங்கும் தந்திரநடவடிக்கைதான் என்பதில் வியப்பேதும் இல்லையே.நான் கூட கடன் தள்ளுபடி குறித்து யோசிக்கும்போது இதில் முதல்வர் கலைஞர், ஒருவருக்கு அதிகபட்சம் இவ்வளவுதான் என்று ஒரு அளவுகோலை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணினேன்.ஒருவேளை தேவையற்ற அரசியல் விமர்சனங்களை தவிர்க்க அவர் இதனை தவிர்த்திருக்கலாம்.எது எப்படியோ அரசாங்கத்தின் உதவி 100% ஒரு சமுதாயத்தை அடையும் நடவடிக்கை, அவ்விவசாய சமுதாயத்தின் தற்கொலைகள் தடுக்கபடாதவரை, விவசாயம் லாபகரமான தொழில் என்பது உறுதிசெய்யப்படாதவரை,அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை உள்ளன்போடு தீர்க்காதவரை எதிர்க்கபடவேண்டிய ஒன்றல்ல.

ஒருவேளை இக்கனவு நனவாகும் காலகட்டத்தில் வேண்டுமானால் உங்களின் கருத்துக்கள் மிக்க பொருத்தமாய் இருக்குமேயன்றி இன்றைய காலத்திற்கு அல்ல என்பது எனது கருத்து.அத்தகைய காலம் விரைவில் கனிந்துவர உங்களின் பதிவுகள் உதவினால் மிக்க உதவியாய் இருக்கும்.
அன்புடன்
ஸ்ரீ

கருத்துகள் இல்லை: