ஞாயிறு, ஏப்ரல் 08, 2007

நாடித்துடிப்பு

எனது கிராமத்திலேயே ஆரம்ப பள்ளியில் படிக்கும் எனது மகனை எனது மாவட்ட தலைநகரில் உள்ள மேல் நிலை பள்ளியொன்றில் சேர்க்க கடந்த இரு ஆண்டுகளாக முயன்று வருகிறேன்.இந்த வருடமும் முயற்சி செய்துள்ளேன்.இந்த பள்ளி பொதுவாக வியாபார நோக்கமற்ற,தேவையற்ற கட்டணங்களை சுமத்தாத,நல்ல பள்ளி.

நான் முயற்சி செய்த இரு வருடங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்கள்.

இப்பள்ளி முதல்வரை பலமுறை சந்தித்து உள்ளேன்.நான் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது தவறாமல் வணக்கம் தெரிவித்தும் ஒரு முறை கூட தப்பிதவறி கூட பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.இதற்கு எனது எளிமையான கிராமத்து தோற்றம் காரணம் என்பதை அவருக்கு அறிமுகமான ஒருவருடன் சேர்ந்து சந்திக்கும் போது அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகள் தெளிவாக காட்டின.

மேலும் கிராமத்தில் படிக்கும் மாணவர்களிடம் போதுமான திறமை இருக்காது என்று இடமின்மைக்கு காரணம் கூறினார்.சிலமுறை குறிப்பிட்ட தேதியில் சந்திக்குமாறு கூறினார்.சந்திக்கும் போது சேர்க்கை முடிந்து விட்டதாக தெரிவித்தார்.

இப்பள்ளி அலுவலகத்திலும் சில ஊழியர்கள் ஏதாவது தகவல்கள் கேட்கும்போது பெற்றோர்களை விரட்டாத குறையாக பதில் அளித்ததையும் பார்த்திருக்கிறேன்.பொறுமையாக தெளிவாக பதில் வழங்கிய ஒரு சிலரும் காணப்பட்டது மகிழ்சியாக இருந்தது.மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு எழுதிவிட்டு வருகின்ற பிள்ளைகளை ஆவலோடு எதிர்பார்த்து கூட்டமாக கூடியுள்ள பெற்றோர்களை பள்ளி காவலர் தூர போகும் படி துரத்தியதையும் பார்த்தேன்.இறுதியாக தெரிந்தவர்களின் சிபாரிசு இல்லையென்றால் இங்கு இடமில்லை என்பது இரண்டுவருடத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்.

கிராமத்தில் வசித்து விவசாயம் செய்பவருக்கு பெண் கிடைப்பது இப்பொழுது எவ்வளவு கடினம் என்பதை கிராமத்தில் வசிப்பதால் உணர முடிகிறது.அந்த வகையில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைப்பது கூட கேள்விக்குரியதாகி விட்டது.கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பாம்.விவசாயம் உயிர் நாடியாம்.முதுகெலும்பு ஒடிந்துவருவதும் நாடித்துடிப்பு குறைந்துவருவதும் நாட்டை ஆளும் மருத்துவர்களால் உணரமுடியாமல் உள்ளது நாட்டுக்கே ஆபத்து.உணர்வார்களா?

1 கருத்து:

மா சிவகுமார் சொன்னது…

உழுவார் உலகத்தார்க்கு ஆணி!!

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

இதை எல்லாம் அந்த ஆசிரியர் படிக்கவில்லை போலிருக்கிறது. :-(