வியாழன், டிசம்பர் 15, 2005

சோகம்

இந்தியா ஒரு விவசாயநாடு. இந்தியாவின் மக்கள் தொகை ....100 கோடி. இந்தியாவில் 6,38,691 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 74 கோடி பேர் வசிக்கிறார்கள். இவர்களின் முக்கிய வாழ்க்கைதொழில் விவசாயம். இதில் நித்தம் நித்தம் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளோ ஏராளம் ஏராளம். இந்தியாவில் வறுமையில் உழலும் பெரும்பான்மையான இவர்களின் பிரச்சினைகளை தவிர இந்திய நாட்டை ஆளும் மாமன்றத்திலே விவாதிக்க வேறு எந்த பிரச்சினைகள்தான் முக்கியமானவை? ஆனால் அவ்வாறு நடந்ததா?
மேலே படியுங்கள்

கர்நாடகா ...3319, ஆந்திரா...1510, மகாராஷ்டிரா...835, கேரளா...180, குஜராத்...15, பஞ்சாப் ...2, ஒரிசா ...1 (நல்லவேளை தமிழ்நாடு இல்லை) இது என்ன கணக்கு புரிகிறதா? இந்திய நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர்
28- 11-05 அன்று கேள்வி நேரத்தில் வழங்கிய அறிக்கை.
என்னவென்றால் நாட்டு மக்கள் வயிற்றுபசி போக்க ஓடி ஓடி உழைத்தும் பலன் கிட்டாது கடன் வலையில் சிக்கி மான அவமானத்திற்க்கு அஞ்சி தன்னுயிரையே இழக்க துணிந்து தற்கொலை செய்து கொண்ட வீர இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை கணக்குதான் இது. கணக்கில் வராத எண்ணிக்கை எத்தனையோ? இறைவனுக்கே வெளிச்சம். எதிர்கட்சியினர் கேள்வி கேட்டனர். ஆளும் கட்சியினர் பதில் அளித்தனர். அவ்வளவே. தலைப்பு செய்தியாய் வந்திருக்கவேண்டிய செய்தி பத்திரிக்கைகளில் ஒரு மூலையில் பெட்டிச்செய்தியாய்.
விவசாயிகளே, இதற்காகவா காததூரம் சென்று, கால்கடுக்க நின்று ஓட்டு போட்டு உன் ஜனநாயகக்கடமையை கருத்தோடு செய்து காத்திருந்தாய்? இல்லையே, உன் வாழ்வு வளம்பெற வழி செய்வார்கள் வல்லவர்கள் என்றல்லவா நம்பியிருந்தாய். உன் மரணத்திற்காக நாட்டை ஆளும் மாமன்றத்திலே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவார்கள் என்றா நம்பி உன் உயிரைவிடத்துணிந்தாய், இரங்கல் தீர்மானம் கூட உனக்கு இங்கு இல்லை என்பதுதானே உண்மை. ஏனெனில் நீ ஒரு ஏழை, பேசத்தெரியாத பேதை, வாழத்தெரியாத கோழை, உலகம் புரியாத குழந்தை.

நட்டம் வரக்கூடாது என்றெண்ணி நித்தம் விலைஏற்றி எண்ணைய் நிறுவனங்களை பாதுகாக்கும் இந்த அரசுகள் உன் நட்டத்தை மட்டும் கணக்கில் கொள்ளாதது ஏனோ? களத்துமேட்டில் செந்நெல் தாள்பிடித்து சுழற்றும் உன் கைகள் கிரிக்கெட் மட்டையையாவது சுழற்றி இருக்கலாம், உற்றார் உறவினர் முன் உன் வறுமையை மறைத்து வளமையாய் காட்டி நடித்த உன் நடிப்பை திரைப்படத்திலாவது நடித்து காட்டியிருக்கலாம் ,உனக்கு விழாக்களும், உன்னை பாராட்டி விருதுகளும், சன்மானங்களும் நிச்சயம் உன் சட்டைப்பையை நிறைத்திருக்கும். என்ன செய்வது நீதான் சட்டைபோடாத சாமானிய விவசாயியாகிவிட்டாயே.

உன்னை சுற்றி என்ன நடக்கிறது என கூர்ந்துபார். ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. மந்திரிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் ஊதிய உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாதம்தோறும் ஊதிய உயர்வை பெற்றுக்கொள்கிறார்கள். அரசு அலுவலர்களுக்கோ அகவிலைப்படியும், போனசும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது. அவர்களும் பெற்றுக்கொள்கிறார்கள். கம்பெனிகளுக்கோ வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களும் லாபத்தை கோடிகளில் அள்ளிக்கொள்கின்றனர். ஆனால் உனக்கோ ? உனக்கும் உண்டு? என்ன? கடன் அறிவிப்பு (உனக்கு மட்டும் கூடுதல் வட்டியில்). நீயும் பெற்றுக்கொள்கிறாய். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபடுகிறாய் விஞ்ஞானிகள் சொன்ன அத்தனை நவீன தொழில்நுட்பங்களையும் சளைக்காது பயன்படுத்தி பார்க்கிறாய் கூடுதல் மகசூல் கிடைக்குமென்ற ஆசை வார்த்தையை நம்பி. நடந்தது என்ன? கிடைத்த மகசூலுக்கு கட்டுப்படியான விலையோ கானல் நீராகிப்போனது. மண்ணோ புண்ணாகிப்போனது.பயிரோ உயிர் விட்டு போனது. லாபமோ கனவோடு போனது.எஞ்சியதோ கடனும் வட்டியும்தான். இதுதான் உண்மைநிலை.

நீயோ ஆசை ஆசையாய் அன்போடு வளர்த்து, வரப்பெல்லாம் சுற்றி புல் பறித்துபோட்டு,பொழுதெல்லாம்காத்து லிட்டருக்கு 0.50 காசாவது கிடைக்குமா என கனவுகண்டு நீ கறந்தபாலை ரூ 8.00க்கு (அரசாங்கம் நிர்ணயிக்கும் விலைக்கு)விற்று உன்னை நம்பியுள்ள ஜீவனை லாபக்கணக்கு பார்க்காது கண்போல காக்கின்றாய். ஏன்? உன் வீட்டுபணப்பெட்டியில் மகாலட்சுமி வாசம் செய்யாதிருக்கலாம். ஆனால் அவளம்சமான ஜீவன் இதோ உன் வீட்டுமாட்டு தொழுவத்தில் என்பதால்தானே.
ஆனால் வெளிநாட்டிலிருந்து உன் ஊருக்கு வந்து உன் குடிநீரைஎடுத்து பாட்டிலில் அடைத்து தானேவிலை லிட்டர் ரூ 20, 25 என நிர்ணயித்து கோடி கோடியாய் கொள்ளையடித்து போகின்றன வெளிநாட்டு கம்பெனிகள்.

இத்தனை மரணங்களுக்கு பிறகும் இதன் தீவிரத்தை உணர்ந்து இவற்றை தடுக்க நானிருக்கிறேன், கவலைப்படாதே, உயிரை விடாதே, உன் பிரச்சினைகளை ஆராய்ந்து களைய நடவடிக்கை எடுக்கிறேன் என உன்னிடத்து குறைந்தபட்சம் நம்பிக்கை விதை விதைத்து ஆறுதல் கூறி அரவணைக்க அன்பு கரம் கொண்டோர் உன்னருகில் யாராவது ஓடி வருகின்றனரா ? உற்றுப்பார் ஒருவருமில்லை.
பொருளாதாரவளர்ச்சி என்று பூச்சாண்டிகாட்டும் ஏமாற்று வெளிநாட்டு வித்தைக்காரர்களின் தந்திர ஒப்பந்தங்களின் மாய வலையில் நாட்டைஆள்வோர் சிக்கி அவை ஒவ்வொன்றாய் வெளிப்படுத்தும் விஷகிருமிகளின் வீரியத்தின் தாக்கத்தை தாங்காது இதோ மண்ணோடு மண்ணாகி விட்டாயே! இந்த விஷகிருமிகளின் வீரியதாக்கங்கள் புயலாக மாறி வீசும்போது ஏழைவிவசாயியான நீ மட்டுமா புயலோடு புழுதியாய்போய்விடப்போகிறாய்? நாடே சிந்திக்கட்டும்?

எது பொருளாதார வளர்ச்சி? மெத்தப்படித்தோர்களே விளக்கி கூறுங்கள். இந்திய விவசாயிகளின் தற்கொலைகளா? விவசாயிகளின் வளர்ச்சி இல்லாமல் உண்மையான வளர்ச்சி ஏது? இந்திய விவசாயிகள் உண்மையில் பச்சிளம்குழந்தைகள். ஆம் குழந்தைகள்தான். ஏனெனில் எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பையும்,ஆதரவையும் மட்டில் நம்பியிருக்கிறதோ அப்படியே நாட்டில் தனக்கு நன்மையோ ,தீங்கோ விளைவிக்கின்ற செயல்பாடுகள் நிகழ்வதைகூட உணராது, நாட்டை ஆள்வோர்பால் நம்பிக்கைகொண்டு வாழ்பவர்கள்தான் விவசாயிகள்.இவர்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு உரியவாறு நாட்டைஆள்வோர் செயல்பட்டனரா?ஆம் எனில் ஏன் எனது விவசாயிகள் தன் உயிரையேவிடும் கோரமுடிவிற்கு தள்ளப்பட்டனர்? இந்த நம்பிக்கையை இழந்ததுதானே உண்மை?

பாரத தேசத்து விவசாயிகளே, இப்பொழுதாவது உங்கள் உறக்கத்தை விட்டு விழித்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ளவா இந்த புண்ணிய பாரத தேசத்தில் வந்து பிறந்தீர்கள்? இல்லவே இல்லை. உங்களை இந்த கோரமுடிவிற்கு ஆட்படுத்தும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வீரமுடன் போராட வீரனாய் ஒற்றுமையுடன் புறப்படுங்கள். இல்லையேல் உங்களின் மரணங்களும் சேர்க்கப்படும் எண்ணிக்கை கணக்கில் அடுத்த தற்கொலை கேள்வி - பதில் அறிக்கையில்.

பாரத தேசத்து மக்களின் நலத்தை பாதுகாக்கும் மாபெரும் சபைதனில் வீற்றிருக்கும் பெரியோர்களே, வணக்கம், துருவனின் தாய் சூநீதியின் வார்த்தைகளை போன்றே சீரிய சிங்காசனமும் ,வெண்கொற்றக்கொடையும் மிகுந்த பாக்கியம் பெற்றவர்களுக்கே கிடைக்கும். அந்த வகையில் நீங்கள் மிகுந்த புண்ணியசாலிகள். சிம்மாசனத்தில் வீற்றிருந்த தன் தந்தை மடிமீது ஏறி தவழ்ந்து விளையாட ஆசைபட்ட துருவனை போன்றே ,பெற்ற மக்களை தன்னலம் கருதாது பேணிக்காக்கும் தாய் தந்தையரை போன்று நாட்டு மக்களை காக்கும் இந்தமாமன்றத்தின் மடிமீது தவழ்ந்துகொஞ்சி விளையாட விவசாயிகளான எங்களுக்கும் ஆசைதான். ஆனால் என்ன செய்வது? விவசாயிகளான நாங்களோ துருவனின் தாயைபோன்றே அல்பபாக்கியம் கொண்ட தாய்களின் வயிற்றிலல்லவோ வந்து கிராமங்களில் பிறந்துவிட்டோம். நாங்கள் தெய்வம் கொடுத்ததை கொண்டே அல்லவோ கிடைத்தவரை போதுமென்று திருப்தியுடன் வாழ்ந்து கொண்டுவருகிறோம். ஆனால் தந்தை மடி மீது ஏற ஆசைப்பட்ட துருவனை பார்த்து மாற்றுத்தாய் வீசிய சொல்லம்புகளால் எப்படி அவன் மனமானது பிளக்கப்பட்டதோ அவ்வாறே, எங்கள் ஏழை விவசாயிகளின் மரணச் செய்திகளும் எங்கள் இதயத்தை பிளக்கின்றனவே. இந்த மாமன்றத்தின் மடியில் தவழும் பாக்கியம் கூட எங்களுக்கு வேண்டாம். எங்களை நாங்களே மாய்த்துக்கொள்ளும் நிலை மாறி எங்கள்மண்ணில் நாங்கள் மகிழ்வோடு தவழ வழிசெய்து தாருங்கள் வல்லோர்களே என்றே வேண்டுகிறோம்.

1 கருத்து:

ஸ்ரீ சொன்னது…

தரணியில் தமிழ்மணம் பரப்பும் தமிழ்மண தளத்தில் எனது வலைப்பூவிற்கும் வாசம் அளித்து உதவிய திரு. காசி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழ் வலைப்பூ வல்லுனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.விண்டோஸ்98- ல் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் வலைப்பூக்களை வாசிக்க சிரமமில்லை.ஆனால் பயர்பாக்ஸ்-ல் தமிழ் எழுத்துக்கள் சற்றே தெளிவாக தெரியவில்லை.உதவும் நெஞ்சங்களே உங்கள் மேலான உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.