திங்கள், ஜூன் 26, 2006

சேவை வரி

நமது இந்திய தேசத்திலே கிராமங்களிலே கூட தனது சேவையை வழங்கிவரும் மிகப்பெரிய துறையாக அஞ்சல்துறை உள்ளது.இது வழங்கிவரும் பலதரப்பட்ட சேவையில் தற்போது பிரபலமாகிவரும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஒரு சிறந்த திட்டமாகும்.ஏனெனில் இக்காப்பீடு திட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள மக்கள் மட்டுமே சேர முடியும்.மாத பிரீமியமும் செலுத்தலாம். சேரும் வயது ,முடிவடையும் வயதை பொருத்து குறைந்தபட்சம் பிரீமியம் ரூ 25, முதல் கிராம மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையிலே செலுத்தும் வசதி கொண்ட சேமிப்புதிட்டமாகும்.இதில் கிராமங்களிலே வசிக்கும் ஏழை விவசாயிகள்.கூலி தொழிலாளிகள்,உட்பட பலர் ஏதோ நமக்கு இல்லாவிட்டாலும் நமது குழந்தைகளுக்காவது உதவட்டுமே என்கின்ற ஆசையில் இதில் சேமிக்கின்றனர்.எனது கிராமத்திலே கூட பலர் சேர்ந்துள்ளனர்.ஆசையாக சேர்ந்தாலும் இந்த சிறிய தொகையை கூட செலுத்த முடியாத பொருளாதார சூழலில் எனது நண்பர்கள் பலர் தொடங்கிய சில மாதங்களிலோ,சில ஆண்டுகளிலோ நிறுத்தி விடுவதை கூட கண்கூடாக காண்கிறேன்.உண்மையான நிலை இவ்வாறு இருக்க மத்திய நிதியமைச்சர் கிராமப்புற ஏழைமக்கள் சேமிக்கும் இந்த திட்டத்திற்கும் 12%சத சேவை வரி விதிப்பது கொடுமையானது.கிராமப்புற மக்கள் ,வசதிபடைத்தவர்களை போல வருமானவரிவிலக்கு பெறுவதற்காக இது போன்ற திட்டத்தில் சேரவில்லை என்பது யதார்த்தமான உண்மை.தன் வாயையும்,வயிற்றையும் கட்டி தன்னாலும் சேமிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும் இது போன்ற கிராமப்புற மக்களின் சேமிப்புகளுக்கும் சேவை வரி விதித்து சமாதிகட்டும் நிதியமைச்சர் ஒரு கணம் சிந்திப்பாராக!

4 கருத்துகள்:

மா சிவகுமார் சொன்னது…

சேவை வரி என்பது ஒரு பூதம் போல வளர்ந்து கொண்டே போகிறது. ஆண்டு தோறும் புதிய புதிய இனங்களைக் கண்டுபிடிப்பதோடு இல்லாமல், வரியின் வீதமும் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி திரட்டும் பணத்துக்கு சரியான செலவு இருந்தாலும் சரி, அரசின் ஊதாரித்தனத்துக்கு ஏழை மக்களின் மடியிலும் கை வைக்க தயங்குவதில்லை, நிதி அமைச்சர்.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் கீழே இறங்கியதும் தொலைக்காட்சி நிலையங்களின் படியேறி ஆசுவாசம் அளிக்கும் நிதி அமைச்சரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏழைகள், கிராமப் புற முன்னேற்றம் என்று சொல்லளவில்தான் இருக்கிறது.

ஒரு பேட்டியில் அவர் வீட்டில் வரவு செலவு கணக்கு போட வேண்டிய நிலையே இருந்ததில்லை என்று சொல்லியிருக்கிறார் ப.சி. அப்படியே தொடர வாழ்த்துவதுடன், ஏழை மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

அன்புடன்,

மா சிவகுமார்

நன்மனம் சொன்னது…

சேவை வரி ஒரு நல்ல திட்டம்!!! ஆனால் அதை ஒரு கறவை மாடு போல் பாவிப்பது நல்லதல்ல மற்ற வரிகளை ஒழுங்குமுறை படுத்தாமல் இதை மட்டும் விரிவு படுத்தி மக்களை நேரிடையாக பாதிக்க செய்வது (மறைமுக வரி என்ற போதிலும்) தொலை நோக்கு பார்வையாக தெரியவில்லை.

அசுரன் சொன்னது…

சேவை வரி ஒரு நல்ல திட்டம் என்று நன்மனம் கூறுகிறார். அது எவ்வாறு என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

விவாதத்த யாராச்சும் start பன்ன வேண்டாமா?

Asuran.

ஸ்ரீ சொன்னது…

உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியமைக்கு நன்றி சிவா, நண்மனம் அவர்களே. கிராமங்களில் கூட பரவலாகிவிட்ட தொலைபேசி சேவைக்கு சேவைவரி விதிப்பதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டாலும் இத்தகைய சேமிப்புகளுக்கு வரி விதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை