ஞாயிறு, நவம்பர் 30, 2014

கிரிக்கெட்-தேவையா?

பவுன்சர் என்ற எமன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரை பறித்தது மிகவும் வருத்தப்படவைத்தது. பொதுவாகவே எனக்கு  கிரிக்கெட்டில் அனைவரையும் போல அதீத ஆர்வம் இருந்த தருணங்கள் தற்போது இல்லை.

எப்பொது கிரிக்கெட்டில் சூதாட்டமும் ஊழல்களும் ஆரம்பித்தனவோ அன்றிலிருந்தே அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்படுவது அவசியமற்றது என்பதே என் கருத்து.

வீரர்களை அரங்கில் உற்சாகப்படுத்த  வெளிநாட்டு அழகிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அளவிற்கு செல்வது தேவையா?பொதுவாக விளையாட்டு விளையாட்டாகவே இருக்கவேண்டும்.அழகாக சுழலும் சுழல் பந்துவீச்சில் இருக்கும் நளினம் உயிரை பறிக்கும் வேகப்பந்து வீச்சில் உண்டா? தேவையெனில் வேகப்பந்து வீச்சை கிரிக்கெட்டில் தடை செய்வது கூட அவசியம் என்பதே என் கருத்து.

வியாழன், அக்டோபர் 23, 2014

மோடிஜி, நீங்கள் அடுத்து செல்லவேண்டிய இடம்?

மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களே,
உண்மையில் ஒரு துடிப்பான, செயல்திறம்மிக்க , துணிச்சலான ஒரு பிரதமரான உங்களை காண்பதில்எங்களுக்கு மிக்க பெருமையாக உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர புயலாக புறப்பட்டதும்,காஷ்மீரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு எதிர்கட்சிகள் கூட வாயடைதது நிற்குமாறு அதிரடியாக நிவாரணம் அறிவித்ததும்,அதேபோல் ஆந்திர வெள்ளத்தை பார்வையிட்டு நிவாரணம் அறிவித்ததும் ,அதற்கும் மேல் காஷ்மீரில் வெள்ளதால் மக்கள் படும் துயரத்தை கண்டு உங்கள் பிறந்த நாளைக்கூட கொண்டாட மறுத்ததை கண்டும் , அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் இன்று கூட கடினமான பனிப்பிரதேசமான சியாச்சின் சிகரம் விரைந்து மிக கடினமான சூழ்நிலையில் நம் எல்லையை காக்கும் வீரர்களோடு இணைந்து நின்று தீபாவளி வாழ்த்து தெரிவித்ததை அறிந்தும் மிக்க பெறுமை அடைகிறோம் மோடிஜி.

ஆனால்ஜெய் ஜவான், ஜெய் கிசான்என முழங்கிய  நீங்கள் நேற்று கூட மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை  அறியவில்லையா?சென்ற ஒரு வருடத்தில் சுமார்   3200 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என தெரிகிறது.என்னதான் பிரச்சினை விதர்பாவில்? முன்பு கூட செயல்படாத பிரதமரான மன்மோகன் அங்கே சென்று கதறிய விவசாயிகளை கண்டு ஒப்புக்காக ஒன்றுக்கும் உதவாத நிவாரணம் அளித்து தான் செயல்படும் பிரதமராக காட்டிகொண்டார்.எதுவும் அங்கே பயனளிக்கவில்லையே? என்ன காரணம்?

மோடிஜி உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.துடிப்புமிக்க பிரதமரான நீங்கள் சியாச்சின் சிகரத்திலிருந்து உடனே விதர்பா செல்லுங்கள் பிரதமர் அவர்களே,நாட்டை காக்கும் வீரர்களை வாழ்த்திய நீங்கள் இந்த நாட்டிற்க்கு உணவளிக்கும் விவசாயிகளை காக்க ,அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க உடன் விதர்பா செல்லவேண்டும் என்பதே என் ஆசை.

செவ்வாய், அக்டோபர் 21, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புள்ள தமிழ்( மண ) உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், அக்டோபர் 07, 2014

ஜாமீன் மறுப்பு-தற்போதய செய்தி

கர்னாடக உயர்நீதிமன்றம், மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாகஅனைத்து செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்ட நிலையில் தற்போதய செய்திகளின்படி ஜாமீன் மறுக்கபட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா- ஜாமீன்

கர்னாடக உயர்நீதிமன்றம், மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தற்போதய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, செப்டம்பர் 28, 2014

ஒரு குற்றம்-பல தண்டனை தேவையா?

தமிழக முதல்வருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டு,தண்டனைகள் அறிவிக்கப்பட்டு ,இது குறித்து பல விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து எனது கருத்து.

 தவறு செய்தவர்கள் தண்டனையை எதிர்கொள்ளவேண்டும் என்பது உண்மைதான் எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவி வகிக்கும் ஒருவரை 16 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் இப்போது சிறையில் அடைப்பது நியாயமா?

ஏனெனில் வருமானத்துக்கு மீறி சொத்து குவித்தது தவறுதான் எனினும் இந்த ஒரு குற்றத்துக்காக தமிழக முதல்வருக்கு எதிராக மூன்றுவகை தண்டனை தேவையற்றது என்பதே என் கருத்து.

சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு, இதனால் முதல்வர் பதவியும் இழப்பு, 100 கோடி ரூபாய் அபராதம்  . 6(அ) 10 வருடம் தேர்தலில் நிற்க தடை. , இவையே ஒரு அரசியல் தலைவருக்கு மிகப்பெரிய தண்டனைதான்.

இத்தனைக்கும் மேல் 4 வருடம்  சிறை தண்டனைஎன்பது தேவையா?என்பதே என் கேள்வி.

புதன், ஆகஸ்ட் 13, 2014

மீண்டும் நன்றியுடன்.

அம்மா -வுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.ஏற்கெனவே இது பற்றி பதிவிட்டிருந்தேன்.என்றாலும் குறைகளை மீறி நிறைகள் நடைபெறும்போது பாராட்டுவது கடமையே.

கிட்டதட்ட. 4 மாதங்களுக்கு மேலாக கிராமப்பகுதியாகிய எங்கள் பகுதிக்கு தடையற்ற மின்சாரம் கிடைத்துக்கொண்டுள்ளது.இதனால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதிலும் தொடர்ந்து மும்முனை மின்சாரம் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியே.தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலும் இந்நிலையே காணப்படும் என எண்ணுகிறேன்.

மின்சாரம் இனி பெரும்பாலும் தடைபடாது கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இப்பதிவின் வாயிலாக மிக்க நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

பிரதமருக்கு நன்றியும்,வேண்டுதலும்.

முந்தைய விவசாய விரோதி பிரதமர் மன்மோகன், ஒப்புக்கொண்ட நமது விவசாயிகளை ஒழித்துக்கட்ட அமெரிக்கா நிறைவேற்ற துடிக்கும் உலக வர்த்தக ஏற்பாடு ஒப்பந்தத்தை அமெரிக்க எதிர்ப்பையும் மீறி துணிவுடன் தடுத்து நிறுத்தியமைக்கு நன்றி.
 
அதே சமயம் உங்கள் அரசு, மாநில அரசுகள் விவசாய விளைபொருளுக்கு கூடுதல் விலை வழங்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாக செய்தி.

மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டுப்படியானதல்ல என்பது ஊரரிந்த விஷயம். எனவே அனைத்து விவசாய விளைபொருளுக்குமான தற்போதய குறைந்தபட்ச ஆதரவு விலையை (நியாயமான விலை)இரு மடங்காக  உயர்த்தி நீங்கள் வழங்கினால்  மேற்படி உத்தரவு நியாயமே என விவசாயிகள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். 

ஜெய் ஜவான்,ஜெய் கிசான் என தேர்தலுக்கு முன் நீங்கள் முழங்கிய வார்த்தைகள் எங்கள் செவிகளில் இன்னமும் ஒலித்துகொண்டுள்ளது.அவ்வொலியின் உண்மையான உணர்வோடு உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.  

பல்வேறு இன்னல்கள் எதிர்கொண்டு,  விவசாயிகள் விளைவித்த கரும்பை பெற்றுகொண்ட ஆலைகள் அவற்றுக்கான விலையை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருவது நீங்கள் அறியாததல்ல.  விற்ற பொருளுக்கு விலை கேட்டு போராடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது நியாயமா? நீங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நெருங்க உள்ளது.அதற்குள்ளாவது விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை அதிரயடியாக நிறைவேற்றி தர பணிவுடன் வேண்டுகிறேன்.

விவசாய கண்காட்சி - 2014

கோயம்புத்தூரில் சமீபத்தில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் எடுத்த சில புகைபடங்கள் .


                                         நண்பர்களுடன் உள்ளே செல்லும்போது


                                     

                                          நினைத்த காரியம் முடிந்த களிப்புடன்



                                                                     


                                                                   நண்பர்கள்
                                                   

                                                       நண்பர்களோடு நானும் 

                                                                     

                                                               கண்காட்சியில்


புதன், ஜூலை 17, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?

சுமார் பத்து ஆண்டுகால நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரம்மாண்டமாய் உள்ளது.உலகம் உங்கள் கையில்,உலகம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் இவ் வளர்ச்சிபற்றி பேசப்படுகிறது.ஒருசில வினாடிகளில் உலகின் எந்த பகுதியையும் தொடர்பு கொள்ளலாம் என்பது நனவாகியுள்ளது.(ராஜிவ்காந்திக்கு நன்றி).மேலும் இந்தியாவில் உலக தரத்திலான சாலைவசதிஏற்படுத்த பட்டுள்ளது.கிராம சாலைகள் எல்லாம் சிமெண்ட் சாலைகளாக மாற்றபட்டுள்ளன. (வாஜ்பாய்க்கு நன்றி).ஆக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும்,அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.இதனால் எந்த இடத்தையும் எந்த நபரையும் தொடர்பு கொள்வது மிக எளிதாகிவிட்டது.ஆனால் இவற்றின் தாக்கங்கள் ஏன் மற்ற துறைகளின் மீது மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பதே என் கேள்வி.குறிப்பாக என் மனதில் நீண்டநாட்களாக உள்ள கேள்வி என்னவென்றால் இவ்வளவு வளர்ச்சிகள் ஏற்பட்டபோதும் ஏன் தற்போது உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ - போன்ற மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்ககூடாது? இல்லையெனில்  இவ்வாறான வளர்ச்சியின் உண்மையான பயன்தான் என்ன?

செவ்வாய், ஜூலை 16, 2013

”அம்மா”வுக்கு நன்றி

ஒரு மகிழ்வான தருணம்.   ஆம் எங்கள் பகுதியில் கிட்டதட்ட பல வருடங்களாக நீடித்த மின் தடை பிரச்சினையால் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்திக்க நேர்ந்தது.கிட்டதட்ட ஒரு நாளில் வெறும் 3 மணிநேர   மும்முனை மின்இணைப்பு மட்டும் கிடைத்த அந்த நாட்கள் விவசாயிகளின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாட்கள்.ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி உள்ளது. கிட்டதட்ட ஒரு மாதமாக எங்கள் பகுதியில் (பண்ருட்டி) (அரிதாக எப்பொழுதாவது சில நேரங்களில் ஏற்படும்
சிறிய அளவிலான மின் தடை தவிர) 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்து வருகிறது.குறிப்பாக பெரும்பான்மையான நேரம் மும்முனை மின்சாரம் கிடைக்கிறது.  என் வாழ்நாளில் கிராமத்தில்,விவசாயிகளுக்கு இவ்வாறு மின்சாரம் கிடைப்பதை தற்போதுதான் பார்க்கிறேன்.அனைத்து தரப்பு மக்களையும் மிகவும் பாதித்த மின் தடை அடியோடு மாறிய் நிலைமை அனைவரையும் நிச்சயம் மகிழ்சியடைய செய்திருக்கிறது. எப்படி சாத்தியமானது? தமிழக முதல்வரின் பெரும் முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது.மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கிய மின் தடையை தனது திறமையினால் நீக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு விவசாயிகளின் சார்பில் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

ஞாயிறு, ஜூலை 14, 2013

விவசாயிகளுக்கு மன்மோகனின் சூப்பர் அறிவுரை

    மாண்புமிகு பிரதமரின் அறிவுரை.  விவசாயம் செய்வது சிரமமாக இருந்தால் விவசாயிகள் வேறு தொழிலை பார்ப்பது நல்லது. -செய்தி

.ஆறு மாதத்திற்கு ஒரு   மந்திரி பதவி  இழந்தாலும் கோடிகோடியாய் ஊழலில் சிக்குபவர்களின் பட்டியல் தொடர்கதையாகவே உள்ளது  மந்திரிகளின் தலைவர் மன்மோகன் சிங்  நிர்வாகத்தில்.
விவசாயிகளை வேறு வேலைக்கு அனுப்பிவிட்டு இறக்குமதி செய்ய துடிக்கும்அதிபொருளாதார மேதாவி,அமெரிக்க படிப்பாளி பிரதமர் அவர்களே, முதலில் நல்ல பிரதமராக செயல்படுவது உங்களுக்கு சிரமமாக இருந்தால் தயவு செய்து வேறு தொழிலை பார்த்துக்கொள்ளுங்கள் அதுவே அனைவருக்கும் நல்லது.

செவ்வாய், மே 08, 2012

வெட்கமில்லை,வெட்கமில்லை,வெட்கமென்பதில்லையே.



நேற்று தேசத்தின் உயரிய அமைப்பான நாடாளுமன்றத்தில் அரசாங்கமே ஒப்புக்கொண்ட ஒரு செய்தி.
 அற்ப கடன் தொகைக்கு ஆசைப்பட்டு விளைபொருளை விளைவித்துவிட்டு கடனை அடைக்கமுடியாமல் தன் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகள் ஒரு பக்கம்.
அத்தகைய விவசாயிகள் உற்பத்திசெய்த நெல், கோதுமை போன்ற விளைபொருட்களை வாங்கிய அரசாங்கம் அவற்றை வீதிகளில் கொட்டிவைத்து வீணாகி வருகிறதென்பதுதான்அரசாங்கமே ஒப்புக்கொண்ட அந்த செய்தி.
அதற்கு அரசாங்கம் கூறும் காரணம் கிட்டங்கிகள் இல்லை.போதிய வசதிகள் இல்லை.
அதற்கும் மேலாக, இந்த இந்திய திருநாட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் கூறும் இன்னொரு காரணம் விளைபொருளை போட்டுவைக்க சாக்கு பை இல்லை என்பதை தெரிவித்ததை எண்ணி வேதனையுடன் இப்பதிவை எழுதுகிறேன்.

வல்லரசாக போவதாக துடிக்கின்ற இந்தியாவில் ,நினைத்தால் அணுகுண்டுசோதனை நடத்தும் வசதியுள்ள இந்தியாவில், கீழே விழுந்தாலும் மீண்டும் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பத்துடிக்கும் இந்தியாவில், விரல் விட்டு எண்ணக்கூடிய நீண்டதூர ஏவுகணை வைத்துள்ள நாடுகள் பட்டியலில் சேர்ந்து விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவில், விவசாயி விளைவித்த விளைபொருளை பிடித்துவைக்க சாக்குபை இருப்புஇல்லை என்று கூறும் என் இந்தியாவை நினைத்து வேதனையை தவிர வேறு எந்த உணர்வை நான் அடையமுடியும்.

ஞாயிறு, ஜூன் 17, 2007

கசக்கும் கரும்பு

அனைவருக்கும் இனிக்கும் கரும்பு விவசாயிகளை பொறுத்தவரை இவ்வருடம் கசக்கவே செய்கிறது.பருத்திக்கு பிறகு விவசாயிகளை வாட்டும் கரும்பு பயிர்.ஆம் பருத்தி பயிரிட்டு நஷ்டம் அடைந்து தற்கொலைசெய்துகொள்ளும் விவசாயிகளின் வரிசையில் கரும்பு பயிரும் அத்தகைய நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடும், தள்ளிவிட்ட பரிதாபம் தொடர்கதையாகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்னாடகா,இன்னும் தமிழகத்திலும் இவ்வருடம் கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் நிலை இதுதான்.என்ன காரணம்? மற்ற பயிர்களை விட நிலையான வருமானம் வரும் என நம்பி பெரும்பான்மையான விவசாயிகள் நாடு முழுவதும் கரும்பு பயிரிட்டதில் அனைத்தையும் அறவை செய்யும் திறனற்ற ஆலைகள் 12 மாதத்தில் அறுவடை செய்யவேண்டிய கரும்பிற்கு 15,16 மாதங்களில் அனைத்தும் காய்ந்துவிட்ட பின் உத்தரவு வழங்கும் நிலை.

சென்ற வருடத்தைவிட ஆட்கள் பற்றாகுறை, கூலியோ 200%முதல்300% வரை சென்ற வருடத்தைவிட உயர்வு.வேறு வழியற்று கரும்பை தீயிட்டு அழிக்கும் அவலம்.இதுதான் இன்றைய கரும்பு விவசாயிகளின் நிலை.

சரி,இத்தகைய அவல நிலைக்கு தீர்வு காண அரசோ, அரசியல் கட்சிகளோ ஏதாவது செய்தார்களா?ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடபட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் அறவைத்திறன் எவ்வளவு?விவசாயிக்கு நட்டம் வராத வகையில் அறவை நடக்க என்ன செய்யலாம்?என்ன செய்தது அரசு?இன்றைய கணினி யுகத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலை திரட்டி தக்க நடவடிக்கை எடுக்கமுடியாதா?முடியாதெனில் நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன? விவசாயி மீது யாருக்கும் அக்கறை இல்லையென்பதை தவிர வேறென்ன சொல்ல?

சனி, ஏப்ரல் 28, 2007

நன்றி

வேளாண் துறையை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்த மாண்புமிகு. குடியரசு தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி.இப்பொறுப்பின் மூலம் விவசாயிகளின் வேதனைகளை தீர்க்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து விவசாயிகளின் வாழ்வு வளம் பெற ஆவன செய்யவேண்டுமென்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்பிக்கை கொள்வோம்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2007

நாடித்துடிப்பு

எனது கிராமத்திலேயே ஆரம்ப பள்ளியில் படிக்கும் எனது மகனை எனது மாவட்ட தலைநகரில் உள்ள மேல் நிலை பள்ளியொன்றில் சேர்க்க கடந்த இரு ஆண்டுகளாக முயன்று வருகிறேன்.இந்த வருடமும் முயற்சி செய்துள்ளேன்.இந்த பள்ளி பொதுவாக வியாபார நோக்கமற்ற,தேவையற்ற கட்டணங்களை சுமத்தாத,நல்ல பள்ளி.

நான் முயற்சி செய்த இரு வருடங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்கள்.

இப்பள்ளி முதல்வரை பலமுறை சந்தித்து உள்ளேன்.நான் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது தவறாமல் வணக்கம் தெரிவித்தும் ஒரு முறை கூட தப்பிதவறி கூட பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.இதற்கு எனது எளிமையான கிராமத்து தோற்றம் காரணம் என்பதை அவருக்கு அறிமுகமான ஒருவருடன் சேர்ந்து சந்திக்கும் போது அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகள் தெளிவாக காட்டின.

மேலும் கிராமத்தில் படிக்கும் மாணவர்களிடம் போதுமான திறமை இருக்காது என்று இடமின்மைக்கு காரணம் கூறினார்.சிலமுறை குறிப்பிட்ட தேதியில் சந்திக்குமாறு கூறினார்.சந்திக்கும் போது சேர்க்கை முடிந்து விட்டதாக தெரிவித்தார்.

இப்பள்ளி அலுவலகத்திலும் சில ஊழியர்கள் ஏதாவது தகவல்கள் கேட்கும்போது பெற்றோர்களை விரட்டாத குறையாக பதில் அளித்ததையும் பார்த்திருக்கிறேன்.பொறுமையாக தெளிவாக பதில் வழங்கிய ஒரு சிலரும் காணப்பட்டது மகிழ்சியாக இருந்தது.மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு எழுதிவிட்டு வருகின்ற பிள்ளைகளை ஆவலோடு எதிர்பார்த்து கூட்டமாக கூடியுள்ள பெற்றோர்களை பள்ளி காவலர் தூர போகும் படி துரத்தியதையும் பார்த்தேன்.இறுதியாக தெரிந்தவர்களின் சிபாரிசு இல்லையென்றால் இங்கு இடமில்லை என்பது இரண்டுவருடத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்.

கிராமத்தில் வசித்து விவசாயம் செய்பவருக்கு பெண் கிடைப்பது இப்பொழுது எவ்வளவு கடினம் என்பதை கிராமத்தில் வசிப்பதால் உணர முடிகிறது.அந்த வகையில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைப்பது கூட கேள்விக்குரியதாகி விட்டது.கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பாம்.விவசாயம் உயிர் நாடியாம்.முதுகெலும்பு ஒடிந்துவருவதும் நாடித்துடிப்பு குறைந்துவருவதும் நாட்டை ஆளும் மருத்துவர்களால் உணரமுடியாமல் உள்ளது நாட்டுக்கே ஆபத்து.உணர்வார்களா?

புதன், ஜனவரி 17, 2007

ஆக்கலும் அழித்தலும்.

எங்கள் கிராமத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள சங்கமாக பல ஆண்டுகள் சேவைபுரிந்து வந்த சங்கம்தான் எண்ணைவித்து உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.விவசாயிகளின் முன்னேற்றத்துக்கான தேசிய பால்வள வாரியத்தின் மற்றொரு புரட்சி திட்டம்.

இச்சங்கம் எங்கள் கிராமத்தை சேர்ந்த இவ்விரு இளைஞர்களின் முழு முயற்சியாலும் தன்னலமற்ற சேவையாலும் தொடங்கப்பட்டு இவர்களின் நிர்வாகத்தால் சிறப்பாக இயங்கி வந்தது.இதன் வளர்ச்சிக்கு இவர்கள் பட்ட துயரங்களை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.

இச்சங்கத்திற்க்கு சுமார்10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள கட்டிடம் கட்ட இவர்கள் பாடுபட்டதும் அச்சமயத்தில் குறிப்பிட்ட கட்டிட வரைபடத்தை ஒதுக்கி இதே தொகையில் இக்கட்டிடத்தை சேர்ந்தார்போல் ஒரு அலுவலக கட்டிடமும் கட்டினால் மிகவும் உபயோகமாய் இருக்கும் என நினைத்து அதிகாரிகளின் மிரட்டலுக்கும் பயப்படாமல் அவ்வாறே கட்டிடம் கட்ட பாடுபட்டதும் அதை பார்வையிட்ட உயரதிகாரிகள் இக்கட்டிட மாதிரி மிக சிறப்பாக உள்ளதால் இனிமேல் இதையே பயன்படுத்தலாம் என சான்று வழங்கியதும் இன்றும் பசுமையாய் மனதில் உள்ளது.

இச்சங்கத்தின் காரணமாக விவசாயிகளுக்கு பல பயன்கள் விளைந்தன.

1.மணிலா போன்ற எண்ணை வித்துக்கள் பயிரிடும் பரப்பு அதிகரித்தது.

2.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களும் இருக்கும் இடத்திலேயே கிட்டியது.

3.தரமான விதை,இடுபொருள்கள் சரியான நேரத்தில் கிடைத்தது.

4.மிகமுக்கியமாக ஊருக்குள் வந்த இடைத்தரகர்களும்,வியாபாரிகளும் ஓட ஓட விரட்டப்பட்டனர்.

5.அனைத்தையும் விட முக்கியமாக விவசாயிகள் உற்பத்தி செய்த எண்ணைவித்து பொருள்கள் அவர்களின் இருப்பிடம் சென்று கொள்முதல் செய்யப்பட்டது.அதற்கான விலை அப்பொழுதே வழங்கப்பட்டது.இப்படி இன்னும் பல.இவற்றிற்கு மிக்க உறுதுணையாய் இருந்தது இந்த இளைஞர்களின் தியாகம்.

ஆனால் இதுபோன்ற கூட்டுறவு சங்கங்களை வளர விடாமல் இதன் நிர்வாகத்தை நள்ளிரவில் கலைத்து வேட்டு வைத்தது அரசாங்கம் பல முறை.

காலம் செல்ல செல்ல இதுபோன்ற விவசாயிகளின் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் இன்று முழுக்க அழிக்கப்பட்டுவிட்டன.

விளைவு இன்று எங்கள் பகுதி விவசாயிகள் எண்ணைவித்து பயிரிடுவதை முற்றிலுமாக கைவிட்டனர்.அரசாங்கம் தன் சொந்த விவசாயிகளை வாழவைப்பதை விடுத்து இன்று தேவைக்கான உணவு எண்ணையை பெரும்பகுதி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது.இதற்கான உண்மையான காரணத்தை அரசியல்வாதிகளின் மனசாட்சிதான் சொல்லமுடியும்.

இந்த இரு இளைஞர்களின் நம்பிக்கையோடும் கடின உழைப்பினாலும் உருவான இந்த(கேட்பாரற்று மேலே மெல்ல மெல்ல தலைகாட்டும் சிறு செடிகள்முளைத்துள்ள) சங்க கட்டிடத்தை தாண்டி செல்லும் போதெல்லாம் இதன் இந்நிலைக்கு காரணமான அரசின் விவசாய விரோத கொள்கைகளை எண்ணி வேதனை கொள்ளத்தான் முடிகிறது.

செவ்வாய், ஜனவரி 16, 2007

மாட்டுப்பொங்கல்

இன்று மாட்டுப்பொங்கல்.முன்பெல்லாம் உழவு மாடுகளும்,வண்டிமாடுகளும்,கறவை மாடுகளும் இல்லாத விவசாயின் வீட்டை காணமுடியாது.எங்கள் வீட்டிலும் 10 பசுமாடுகளும் ஒவ்வொரு ஜதை உழவு மற்றும் வண்டி(டயர் வண்டி)மாடுகளும்,சுமார் 25 எருமை மாடுகளும் நிறைந்திருந்தன.

மாட்டுப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஊரே களை கட்டிவிடும்.டயர் வண்டிக்கு வண்ணம் தீட்டுவதில் தொடங்கி,மாடுகளுக்கு கொம்பு சீவி,புது கயிறு கட்டி,சலங்கை கட்டி,மாடுகளை அழகுபடுத்துவதே ஒரு கலையாகிவிடும்.

இன்றைய நாளில் அனைவரின் வண்டிகளும் சிறுவர் சிறுமியர் புடைசூழ மந்தைவெளிக்கு புறப்பட்டு சென்று சாமி கும்பிட்டபின் ஊர்வலம் வரும்.எந்த வண்டி சீக்கிரம் வரும் என்பதில் போட்டியும் நிலவும்.

இன்று வண்டியும்,வண்டிமாடுகளூம்,உழவு மாடுகளும் ,கறவை மாடுகளும் உள்ள விவசாயிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இன்றைக்கும் இந்த விழா நடைபெற்றாலும் வண்டியும் வண்டிமாடுகளும்,உழவுமாடுகளும்,கறவைமாடுகளும் நிறைந்து இயற்கையோடு இணைந்து பயிரிட்டதால் விவசாயியின் மனமும் நிறைந்து மகிழ்ச்சியும் நிறைந்திருந்த சூழல் இன்று இல்லையென்பதே உண்மை.

திங்கள், ஜனவரி 15, 2007

பொங்கல் வாழ்த்து.

தமிழ் வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல்்் நல்வாழ்த்துக்கள்

புதன், ஜனவரி 03, 2007

பாதுகாப்பு?

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை தங்களின் நிலத்துக்கு சென்ற விவசாயிகள் பலருக்கு சோகமான அனுபவம் கிட்டியது.தங்கள் மின் மோட்டாருக்கு மின்சார இணைப்பு வழங்க பயன்படுத்திய காப்பர் ஒயர் (சுமார் ரூ1500 பெறுமானமுள்ளது )திருடர்களால் களவாடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.சுமார் பத்து விவசாயிகளின் மின் இணைப்பு ஒயர்கள் ஒரே நாளில் இவ்வாறு களவாடப்பட்டிருந்தன.

பல கிராமங்களில் இவ்வாறான திருட்டு நடைபெறுவதை பத்திரிக்கைகளில் காண்கிறேன்.நானும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தருமாறு கேட்டுக்கொண்டாலும் விவசாயிகள் யாரும் இதை விரும்பாததுதான் இன்றைய நிலை.

இவ்வாறு இழப்புக்குள்ளான விவசாயிகள் தற்போது சற்றே விலை குறைவான அலுமினிய ஒயரை புதிதாக வாங்கி மாற்றியுள்ளார்கள்.இதில் கவலைப்படும் அம்சம் என்னவெனில் புதிய ஒயரை வாங்க பணமில்லாது கடன் பெற்று வாங்கிய ஒயருடன் தனது மிதிவண்டியில் இன்று சென்ற 70 வயது முதிய விவசாயியை கண்டதுதான் இப்பதிவு.

பொழுது போக்கு அம்சமான திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு வரக்கூடாது என்பதற்காக திருட்டு விசிடி யை ஒழிக்க காவல்துறையில் தனிப்படை.அதற்கும் மேல் குண்டர்சட்டம் போன்ற பாதுகாப்பு . விவசாயிகளுக்கு?