வியாழன், ஏப்ரல் 30, 2015

மூட்டைப்பூச்சியா - கொளுத்து வீட்டை

விவசாயிகளுக்கு வங்கிகளில் பல்வகை கடன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.இதில் முக்கியமானவை நகைக்கடன், மற்றும் பயிர்க்கடன்.

இவற்றில் முதலில் 9% சத வட்டிவீதமாக நிர்ணயிக்கப்பட்டு பின் 2%சதம் அரசால் மானியமாகவும் பின்பு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழுங்காக கடனை திருப்பிசெலுத்தும் விவசாயிகளுக்கு மேலும் 3% சத வட்டி அரசால் மானியமாக வழங்கப்பட்டு இறுதியில் 4% சத வட்டி வீதத்தில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுவருகிறது.

பிரச்சினையே இங்குதான் ஆரம்பம். வங்கிகள் தங்களுக்கு நிர்ணயிக்கபட்ட விவசாய கடன் இலக்கை அடைய பெரும்பாலும் நகைகடன் கொடுத்து அந்த இலக்கை அடையவும் , மேலும் விவசாயிகள் தவிர மற்றவர்களுக்கும் இந்தவகையில் கடன் அளித்து இலக்கை அடைவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.மேலும் பல காரணங்களை காட்டி அரசாங்கம் அளிக்கும் வட்டி மானியத்தை விவசாயிகளுக்கு அளிக்காமல் எமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.இதனால் உண்மையான விவசாயிகளுக்கு கடனும், அரசின் பயனும் கிடைப்பதில்லை.

உண்மையான விவசாயிகளுக்கு தேவையான  கடன் தொகை,அரசாங்கம் அளிக்கும் வட்டிச்சலுகை விவசாயிகளுக்கு சரியாக சென்று சேர தேவையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு ரிசர்வ்வங்கி விவசாயிகளுக்கான கடன் வட்டியை 11% ஆக உயர்த்தி பிரச்சினையை முடிக்க நடவடிக்கை எடுப்பது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும்  (--------)செயலாக உள்ளது.

சனி, ஏப்ரல் 25, 2015

விவசாயிகளின் மதிப்பு

இன்று நாளிதழில் ஒரே பக்கத்தில் வெளியான இரு செய்திகளை பார்ப்போம்
.
செய்தி 1.கால்நடைகள் கடத்தல்-சுப்ரீம் கோர்ட் கவலை.

இந்தியாவிலிருந்து அதிக அளவில் கால்நடைகள் வங்கதேசத்திற்கு கடத்தபடுகின்றன.உணவு தண்ணீர் கொடுக்காமல் பல கி.மீ தூரம் நடத்திசெல்லப்படுகிறது. அதை தடுக்கவேண்டும்.இதனால் இந்தியாவில் கால்நடை எண்ணிக்கை குறையும். குழந்தைகளுக்கு பால் கிடைக்காது எனவே இதை தடுக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில்சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்தது.

செய்தி 2. மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 257 விவசாயிகள் தற்கொலை.

மத்திய அமைச்சர் ராஜ்யசபாவில் பேசும் போது விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பது கவலை அளிப்பதாகவும் இவ்வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 257 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் எனவும் விவசாயிகள் தொடர்பான விவகாரம் மாநில அரசுகள் சம்பந்தபட்டது என்றும் அந்த அரசுகள் வழங்கும் இழப்பீட்டில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


அரசோ,அதிகார வர்க்கமோ ,நீதிமன்றங்களோ கூட விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. கால்நடைகளுக்கு கிடைக்கும் நீதி கூட விவசாயிகளுக்கு கிடையாது.என்ன செய்வது தற்கொலையை தவிர?

வியாழன், ஏப்ரல் 23, 2015

இதுதான் எனது இன்றைய இந்தியா

நேற்று  இந்திய தலைநகர் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மத்திய அரசின் நிலம் கையகபடுத்தும் சட்டத்திற்கு எதிரான பேரணியில் பங்கற்ற விவசாயி ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மரத்தில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது மிக்க அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இதுதான் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வேதனையான நிலைமை.

உண்மையான காரணத்தை ஆராயாது இதை எப்படி தங்களுக்கு சாதக பாதகமாக பயன்படுத்திகொள்வது என்பதுதான் அரசியல் கட்சிகளின் தற்போதய சிந்தனையாக உள்ளது.
உண்மையில் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த மோடி அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு அடியை கூட எடுத்து வைக்கவில்லைஎன்பதுதான்அப்பட்டமானஉண்மை.
ஆனால்விவசாயிகளுக்கு எதிராக நிலம் எடுப்பு சட்டம்,விவசாய கடனுக்கான வட்டியை இருமடங்கு ஆக்குவது,போன்ற விவசாயிகளுக்கு எதிரான செயல்களின் ஈடுபட்டு வருகிறது வேதனையாக உள்ளது.

திங்கள், ஏப்ரல் 20, 2015

பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

மாண்புமிகு பாரத பிரதமருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

  இந்திய நாடு வளர்ச்சியடைய பாடுபடும் பிரதமருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துகள். நாடு வளர்ச்சியடைய தொழில்வளம் பெருக வேண்டியது மிக்க அவசியம். இதற்கு தேவையான நிலம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரம் ஒரு விவசாய நாட்டில் விவசாயதொழிலும் பெருகவேண்டியது தேவையல்லவா?

 நம் நாட்டில் கல்வி கற்க தேவையான பள்ளிக்கூடம், மருத்துவமனை  போன்ற பொதுபயன்பாட்டிற்கு தேவையான நிலத்தை அவ்வூரில் உள்ள பெரியோர்கள் மனம் உகந்து  தன்னிடம் உள்ள நிலத்தில் ஒரு பகுதியை இலவசமாக அரசுக்கு அளிக்கும் மனோபாவம் கொண்டிருந்தது பெருமைக்குரியது.

 அத்தகைய பெருமைக்குரியவர்களாகிய விவசாய சமுதாயத்திடம் இருந்து தொழில் துவக்க நிலத்தை அதிரடி அவசர சட்டம் போட்டாவது பிடுங்க நினைப்பதுதான் வேதனை தருகிறது.

தொழில்வளம்பெருகினால்பலருக்குவேலைவாய்ப்புகிடைக்கும்,பொருளாதாரம் வளரும் என்பது அனைவரும் அறிந்ததே.
விவசாயம் வளர வழி உள்ளதா என்பதே என் கேள்வி
.உங்களிடம் உள்ள அதிகார பலத்தின் மூலம் அச் சட்டம் நிறைவேறுமாயினும் கவலையில்லை.ஆனால் உங்களிடம் ஒரு வேண்டுகோள் அப்படி கையகபடுத்தும் நிலத்தில் 50% விழுக்காடு விவசாயம் சார்ந்த தொழிற்சாலைக்குதான் ஒதுக்கப்படவேண்டும் என்பதே என் அன்பு வேண்டுகோள்.

புதிய அவதாரம்

விவசாயிகளின் ஆபத்பாந்தவராக ராகுல்காந்தி புதிய அவதாரம் எடுத்து நிலம் கையகபடுத்தும் மசோதாவை எதிர்த்து இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில்பேசும்போது இன்றைய பி. ஜே. பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 கட்கரி விவசாயிகளிடம் அரசையும் கடவுளையும் நம்பவேண்டாம் என கூறியது.இன்றைய ஆட்சியில் விவசாய வளர்ச்சி குறைந்தது,   பிரதமர் மோடி விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிவருவது,  விவசாய விளைபொருளுக்கு விலையை அதிகபடுத்தி வழங்காதது,  விவசாயிகளுக்கு கடன் தொகை வெறும் 5% மட்டும்  பட்ஜெட்டில் கூடுதலாக்கியது,  மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது தொழிலதிபர்களுக்கு ஆதரவானது  என்பது போன்ற பல விஷயங்களை தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இன்றைய அரசை எதிர்த்து அவர் விவசாயிகளுக்காக பேசியது அனைத்தும் மிக்க பொருத்தமானதே.ஆனால் காலம் கடந்த ஞானோதயத்தால் பயனில்லையே ராகுல்ஜி.உங்களின் பிரதமர் மன்மோகன் விவசாயிகளை வேறு வேலை பார்த்துகொள்ளுங்கள் என்று சொன்னபோது இதையெல்லாம் நீங்கள் பேசியிருந்தால் ஏதாவது பயன் கிட்டியிருக்கும்.

நிலம் கையகபடுத்தும் மசோதாவை எப்படியாவது நிறைவேற்றத்துடிப்பதின் மூலம் பிரதமர்மோடி அவரை அறியாமலேயே எதிர்கட்சிகளுக்கு அரசியல் செய்வதற்கு ஒரு அருமையான வழியை உருவாக்கிதந்துவிட்டார்.
இன்றைக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் ராகுலின் காங்கிரஸ் ஆட்சியில்தான் நிலம் கையகபடுத்தும் மசோதாவே கொண்டுவரப்பட்டது என்பதை விவசாயிகள் மறந்துவிட மாட்டார்கள்.

விவசாயிகளிடம் உள்ள ஓட்டு வங்கிதான் பறிகொடுத்துவிட்ட அரசை கைப்பற்ற ஒரே ஆயுதம் என்பதுதான் நீண்ட விடுமுறையில் ராகுலுக்கு கிட்டிய ஞானோதயம் என்பதே என் கருத்து.
இந்த ஞானோதயம் மோடிக்கு கிட்டுமா என்பதே என் கேள்வி?

ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

பணக்காரர்களிடம் மன்றாடல் - ஏழைகளிடம் அதிரடி-- மோடிபாணி

இது நியாயமா ,மோடி ஜீ -
வசதி படைத்த பணக்காரர்களிடம் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுத்தருமாறு மன்றாடி கெஞ்சும் நீங்கள் ஏழை விவசாயிகளிடம் உள்ள நிலத்தை பிடுங்குவதில் மட்டும் அதிரடியாக செயல்படுவது என்ன நியாயம்?

 நிலம் கையகபடுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு நன்மையானது என மேடை தோறும் பேசும் நீங்கள் என்ன நன்மை என எதையுமே தெரிவிக்காமல் வெறுமனே கூப்பாடு  போடுவதால் பயனில்லையே.

உண்மையில் எனக்கு நிச்சயம் நல்ல பயன் கிடைக்கும் என்றால் எனக்கு சொந்தமான நிலத்தை தாராளமாக அரசுக்கு அளிக்க தயாராகவே உள்ளேன்.எடுத்து கொள்ளுங்களேன்.

இந்த ஒரு விஷயமே போதுமே மோடி ஜீ   விவசாயத்தை அறியாது
’ டீ’  வியாபாரம் செய்த அனுபவம் கொண்ட  நீங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்தான் என்பதற்கு.

சனி, ஏப்ரல் 11, 2015

நிதின் கட்கரி-செய்தி

சமீபத்தில் ஒருசெய்தி-
 விவசாயிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டதில் மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசும்போது  விவசாயிகள் அரசையோ , கடவுளையோ நம்பும் மனநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் என பேசியதாக செய்தி.

 கட்கரி-ஜிக்கு ஒரு அன்பான எச்சரிக்கை.விவசாயிகள் அரசாங்கத்தை  நம்பவேண்டாம் என நீங்கள் குறிப்பிட்டது மிக்க பொருத்தம் தான்.ஏனெனில் ’ஜெய்கிசான்’என தேர்தல் நேரத்தில் மேடை தோறும் முழங்கி விவசாயிகளின் ஓட்டை பெற்று ஆட்சிக்கு வந்த நீங்கள் விவசாயிகள் வலி என்ன? பிரச்னைகள் என்ன என ஆராய நேரமில்லாமல் வெளிநாட்டுக்கு பறந்து கொண்டுள்ள பிரதமரை பார்த்தும்,  விவசாய விளைபொருளுக்கு 50% கூடுதல் விலை நிர்ணயிப்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றத்தில் அவ்வாறு அளிக்க இயலாது என சொல்லி விவசாயிகளை ஏமாற்றியும்,யாருக்கோ அடிபணிந்து எப்பாடு பட்டாவது நிலம்கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற துடிக்கும்  உங்களை பற்றி மிக்க பொருத்தமாய்தான் தெரிவித்துள்ளீர்கள் கட்கரிஜி.

ஆனால் உங்களோடு சேர்ந்து கடவுளையும் நம்பவேண்டாம் என தெரிவித்து கடவுளை உங்களோடு ஒப்பிட்டுக்கொண்டதுதான் மிக்க வேதனையாய் உள்ளது .கடவுளாலும் விவசாயிகளை காப்பாற்றமுடியாது என்று சொல்ல வருகிறீர்களா கட்கரிஜி.உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களை நினைத்து வேதனையாய் உள்ளது.
ஒன்று மட்டும் நிச்சயம் இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து வர உள்ள தேர்தலின் போது வாக்காளர்களான எங்களையும், கடவுளையும் நம்பும் மன நிலையை மாற்றிக்கொண்டு ஏற்படபோகும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை இப்பொழுதிருந்தே வளர்த்துகொள்ளுங்கள் கட்கரிஜி.

வியாழன், ஜனவரி 22, 2015

சேவை வரி -மீண்டும் ஒரு பூதம்.

ஏற்கெனவே சேவை வரி பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பின் என்ன காரணமோ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டிற்க்கு அந்த சேவை வரி விலக்கிகொள்ளபட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் இரு மடங்காக சேவை வரி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

  ஏழைகள், இயலாதோர், போன்றவர்களுக்கு அவர்களின் துன்பங்களை, கஷ்டங்களை  தன்னால் முடிந்தவரை குறைப்பதற்க்கான செயலை செய்வதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை.அவ்வாறு செய்யாமல் அதை அதிகப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது முட்டாள்தனமானது.

 நம்பிக்கைமிக்க ஒரு மத்திய அரசாங்கத்தின் அங்கமாக கிராமங்களில் கூட செயல்பட்டுவரும் அஞ்சலகத்தில் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாயை கட்டி வயிற்றை கட்டி தான் சேமிக்கும் மாதம் 50 - 100  ரூபாய்க்கும்ஏழைகளிடம் 2% வரி விதித்துதான் உங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்றால் வெட்ககேடான விஷயம் வேறேதுமில்லை மோடிஜி.

ஞாயிறு, ஜனவரி 18, 2015

மாதங்களில் நான் ”மார்கழி”-4

இந்த வருட மார்கழி பஜனையில் கலந்துகொள்ளும் சிறுவர் சிறுமியர்கள் காலை 4.30 மணிக்கு பஜனை ஆரம்பம் என்றாலும் அதிகாலை 3.30 மணிக்கே (சில நாட்களில் அதிகாலை 3.00 மணிக்கே )கூட ஜால்ராவை கைப்பற்றிவிட  போட்டி போட்டுக்கொண்டு முந்திக்கொள்வது ரசிக்கவைக்கும்.

இந்த வருட இந்த நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை தமிழ்மணத்தோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.





மாதங்களில் நான் ”மார்கழி”-3

அதிகாலை எழுந்து சிறுவர் சிறுமியரோடு அவர்களை ஒருங்கினைத்து மாடவீதி வழியே பக்தியுடன் பஜனை பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்று வந்து கொண்டிருந்த ஓரிரு பெரியோர்களில் மிக முக்கியமான பெரியவர் சில மாதங்களுக்கு முன் இறைவன் திருவடி அடைந்துவிட்டதின் காரணமாகவே அவ்வாறு கேட்டனர்.

  இவ்வளவு நாளாக  நடைபெறும் இந்த ஒரு எளிய பக்தி பஜன் நடைபெறுமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது.ஏனெனில் இன்றைய உலக  நாகரீக மாற்றங்களின் தாக்கங்கள் கிராமங்களையும் விட்டுவைக்கவில்லை.

அதிகாலை 3 மணிக்கு எழுந்து 70 வயதான அந்த பெரியவரை போன்று தன்னலமற்று பக்திவெள்ளத்தில் இணைத்துகொள்ள விரும்பும் இளைஞர்கள்  யாரும் இன்று தயாராக இல்லை என்பதே உண்மை.என்றாலும் அவரின் வயதையொத்த பெரியோர்கள் சிலர் தங்கள் உடல்நலனையும் கருதாது கலந்து கொண்டு இந்த மார்கழி பஜன் என்கிற எளிய பக்திமார்க்கம் இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற காரணமாக அமைந்தது ”கண்ணனின்” திருவருள் அன்றி வேறில்லை.

மாதங்களில் நான் ”மார்கழி”-2

அன்றைய பஜனையில் மிருதங்கம் ,ஹார்மோனியம், சிப்லாகட்டை,ஜால்ரா போன்ற  இசை கருவிகள் இசைக்கப்பட்டு  இனிமையாக இருந்தது

.சில வருடங்களுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டுவந்த இக்கருவிகள் கால மாற்றங்களால் பயன்படுத்தமுடியாமல் வீணாகி மறைந்து விட்டதுபோல் அதனை இசைக்க தெரிந்த   பல பெரியோர்கள் தற்போது  மறைந்து விட்டாலும் ,எஞ்சிய ஜால்ராவை வைத்து மட்டும் கிராமத்து இளம் சிறுவர்கள் இன்றும் அதிகாலை 3-4 மணிக்கே எழுந்து இந்த இனிய பக்தி பரவசத்தில் உற்சாகம் கொண்டு கலந்து கொண்டு வருவது ஆச்சரியமானதே.

இந்த ஆண்டும் இந்த மார்கழி பஜனை ஊர்வலம் உண்டா என மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பே சிறுவர்கள் அதீத உற்சாகத்துடன் என்னிடம் கேட்டபோது  ‘கண்ணன்” திரு உள்ளம்  எதுவோ அதுவே நடக்கும் என மனதிற்க்குள் நினைத்து கொண்டு ஏதும் சொல்லாமலே விட்டுவிட்டேன்.
சிறுவர்கள் அவ்வாறு கேட்டதற்கு காரணம்?

தொடரும்.

மாதங்களில் நான் ”மார்கழி”-1

மார்கழி மாத அதிகாலைபொழுது அளிக்கும் இனிமையும், உற்சாகமும் என்றென்றும் மறக்கமுடியாதவை. எங்கள் கிராமத்தில் அந்த அதிகாலைபொழுதை இனிய எளிய பஜனையுடன் அனுபவிக்க ஆர்வமுடன் பனிவிழும் அதிகாலையில் எழுந்து சிறு வயதான எங்களுக்கு குளிப்பதற்க்கு  வென்னீர் வைத்து அன்புடன் எழுப்பி கோயிலுக்கு செல்ல தயாராக்கி விட்ட எங்கள் தாயார் மறைந்து விட்டாலும் இன்றும்  அந்த இனிய நினைவுகள் மறக்க முடியாதவையே.
கிட்டதட்ட 75 ஆண்டுகளாக இந்த  எளிய பஜனை ஊர்வலம் நடைபெற்று வருகிறது.உற்சாகம் துள்ளும் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமின்றி பல பெரியோர்களும் தங்கள் வயது மறந்து ஆடிப்பாடிஉண்மையான பக்தி பரவசத்தில் மெய்மறந்த அந்த நினைவுகள் இன்றும் பசுமையாகவே உள்ளது.

ஆனால் அத்தகைய பல பெரியோர்கள் மறைந்து விட்டதனால் அத்தகைய உற்சாகபக்தி பரவசம் மெல்ல மெல்ல குறைந்து வருவதும் இயற்கையே. அத்தகைய சூழலில் இந்த ஆண்டும் பாரம்பரியம் மிக்க இத்தகைய பக்தி நிகழ்வுகள் நடைபெறுமா என்ற கேள்வியும் இருந்தது.

தொடரும்


ஞாயிறு, நவம்பர் 30, 2014

கிரிக்கெட்-தேவையா?

பவுன்சர் என்ற எமன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரை பறித்தது மிகவும் வருத்தப்படவைத்தது. பொதுவாகவே எனக்கு  கிரிக்கெட்டில் அனைவரையும் போல அதீத ஆர்வம் இருந்த தருணங்கள் தற்போது இல்லை.

எப்பொது கிரிக்கெட்டில் சூதாட்டமும் ஊழல்களும் ஆரம்பித்தனவோ அன்றிலிருந்தே அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்படுவது அவசியமற்றது என்பதே என் கருத்து.

வீரர்களை அரங்கில் உற்சாகப்படுத்த  வெளிநாட்டு அழகிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அளவிற்கு செல்வது தேவையா?பொதுவாக விளையாட்டு விளையாட்டாகவே இருக்கவேண்டும்.அழகாக சுழலும் சுழல் பந்துவீச்சில் இருக்கும் நளினம் உயிரை பறிக்கும் வேகப்பந்து வீச்சில் உண்டா? தேவையெனில் வேகப்பந்து வீச்சை கிரிக்கெட்டில் தடை செய்வது கூட அவசியம் என்பதே என் கருத்து.

வியாழன், அக்டோபர் 23, 2014

மோடிஜி, நீங்கள் அடுத்து செல்லவேண்டிய இடம்?

மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களே,
உண்மையில் ஒரு துடிப்பான, செயல்திறம்மிக்க , துணிச்சலான ஒரு பிரதமரான உங்களை காண்பதில்எங்களுக்கு மிக்க பெருமையாக உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர புயலாக புறப்பட்டதும்,காஷ்மீரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு எதிர்கட்சிகள் கூட வாயடைதது நிற்குமாறு அதிரடியாக நிவாரணம் அறிவித்ததும்,அதேபோல் ஆந்திர வெள்ளத்தை பார்வையிட்டு நிவாரணம் அறிவித்ததும் ,அதற்கும் மேல் காஷ்மீரில் வெள்ளதால் மக்கள் படும் துயரத்தை கண்டு உங்கள் பிறந்த நாளைக்கூட கொண்டாட மறுத்ததை கண்டும் , அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் இன்று கூட கடினமான பனிப்பிரதேசமான சியாச்சின் சிகரம் விரைந்து மிக கடினமான சூழ்நிலையில் நம் எல்லையை காக்கும் வீரர்களோடு இணைந்து நின்று தீபாவளி வாழ்த்து தெரிவித்ததை அறிந்தும் மிக்க பெறுமை அடைகிறோம் மோடிஜி.

ஆனால்ஜெய் ஜவான், ஜெய் கிசான்என முழங்கிய  நீங்கள் நேற்று கூட மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை  அறியவில்லையா?சென்ற ஒரு வருடத்தில் சுமார்   3200 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என தெரிகிறது.என்னதான் பிரச்சினை விதர்பாவில்? முன்பு கூட செயல்படாத பிரதமரான மன்மோகன் அங்கே சென்று கதறிய விவசாயிகளை கண்டு ஒப்புக்காக ஒன்றுக்கும் உதவாத நிவாரணம் அளித்து தான் செயல்படும் பிரதமராக காட்டிகொண்டார்.எதுவும் அங்கே பயனளிக்கவில்லையே? என்ன காரணம்?

மோடிஜி உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.துடிப்புமிக்க பிரதமரான நீங்கள் சியாச்சின் சிகரத்திலிருந்து உடனே விதர்பா செல்லுங்கள் பிரதமர் அவர்களே,நாட்டை காக்கும் வீரர்களை வாழ்த்திய நீங்கள் இந்த நாட்டிற்க்கு உணவளிக்கும் விவசாயிகளை காக்க ,அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க உடன் விதர்பா செல்லவேண்டும் என்பதே என் ஆசை.

செவ்வாய், அக்டோபர் 21, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புள்ள தமிழ்( மண ) உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், அக்டோபர் 07, 2014

ஜாமீன் மறுப்பு-தற்போதய செய்தி

கர்னாடக உயர்நீதிமன்றம், மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாகஅனைத்து செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்ட நிலையில் தற்போதய செய்திகளின்படி ஜாமீன் மறுக்கபட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா- ஜாமீன்

கர்னாடக உயர்நீதிமன்றம், மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தற்போதய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, செப்டம்பர் 28, 2014

ஒரு குற்றம்-பல தண்டனை தேவையா?

தமிழக முதல்வருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டு,தண்டனைகள் அறிவிக்கப்பட்டு ,இது குறித்து பல விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து எனது கருத்து.

 தவறு செய்தவர்கள் தண்டனையை எதிர்கொள்ளவேண்டும் என்பது உண்மைதான் எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவி வகிக்கும் ஒருவரை 16 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் இப்போது சிறையில் அடைப்பது நியாயமா?

ஏனெனில் வருமானத்துக்கு மீறி சொத்து குவித்தது தவறுதான் எனினும் இந்த ஒரு குற்றத்துக்காக தமிழக முதல்வருக்கு எதிராக மூன்றுவகை தண்டனை தேவையற்றது என்பதே என் கருத்து.

சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு, இதனால் முதல்வர் பதவியும் இழப்பு, 100 கோடி ரூபாய் அபராதம்  . 6(அ) 10 வருடம் தேர்தலில் நிற்க தடை. , இவையே ஒரு அரசியல் தலைவருக்கு மிகப்பெரிய தண்டனைதான்.

இத்தனைக்கும் மேல் 4 வருடம்  சிறை தண்டனைஎன்பது தேவையா?என்பதே என் கேள்வி.

புதன், ஆகஸ்ட் 13, 2014

மீண்டும் நன்றியுடன்.

அம்மா -வுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.ஏற்கெனவே இது பற்றி பதிவிட்டிருந்தேன்.என்றாலும் குறைகளை மீறி நிறைகள் நடைபெறும்போது பாராட்டுவது கடமையே.

கிட்டதட்ட. 4 மாதங்களுக்கு மேலாக கிராமப்பகுதியாகிய எங்கள் பகுதிக்கு தடையற்ற மின்சாரம் கிடைத்துக்கொண்டுள்ளது.இதனால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதிலும் தொடர்ந்து மும்முனை மின்சாரம் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியே.தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலும் இந்நிலையே காணப்படும் என எண்ணுகிறேன்.

மின்சாரம் இனி பெரும்பாலும் தடைபடாது கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இப்பதிவின் வாயிலாக மிக்க நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

பிரதமருக்கு நன்றியும்,வேண்டுதலும்.

முந்தைய விவசாய விரோதி பிரதமர் மன்மோகன், ஒப்புக்கொண்ட நமது விவசாயிகளை ஒழித்துக்கட்ட அமெரிக்கா நிறைவேற்ற துடிக்கும் உலக வர்த்தக ஏற்பாடு ஒப்பந்தத்தை அமெரிக்க எதிர்ப்பையும் மீறி துணிவுடன் தடுத்து நிறுத்தியமைக்கு நன்றி.
 
அதே சமயம் உங்கள் அரசு, மாநில அரசுகள் விவசாய விளைபொருளுக்கு கூடுதல் விலை வழங்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாக செய்தி.

மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டுப்படியானதல்ல என்பது ஊரரிந்த விஷயம். எனவே அனைத்து விவசாய விளைபொருளுக்குமான தற்போதய குறைந்தபட்ச ஆதரவு விலையை (நியாயமான விலை)இரு மடங்காக  உயர்த்தி நீங்கள் வழங்கினால்  மேற்படி உத்தரவு நியாயமே என விவசாயிகள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். 

ஜெய் ஜவான்,ஜெய் கிசான் என தேர்தலுக்கு முன் நீங்கள் முழங்கிய வார்த்தைகள் எங்கள் செவிகளில் இன்னமும் ஒலித்துகொண்டுள்ளது.அவ்வொலியின் உண்மையான உணர்வோடு உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.  

பல்வேறு இன்னல்கள் எதிர்கொண்டு,  விவசாயிகள் விளைவித்த கரும்பை பெற்றுகொண்ட ஆலைகள் அவற்றுக்கான விலையை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருவது நீங்கள் அறியாததல்ல.  விற்ற பொருளுக்கு விலை கேட்டு போராடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது நியாயமா? நீங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நெருங்க உள்ளது.அதற்குள்ளாவது விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை அதிரயடியாக நிறைவேற்றி தர பணிவுடன் வேண்டுகிறேன்.